காயத்ரி மந்திரங்கள்

முன்னுரை

நம் பாரத பூமி ஞானபூமி. இந்த மண்ணில் வாழ்ந்த சமூகம் மிகவும் பழமையானதும், மிக உன்னதமான நாகரீகத்தையும் கொண்டதாய் விளங்கியது. அது கண்டறிந்த வாழ்க்கை ரகசியங்கள் உன்னதமானவை.கலாச்சார ரீதியாகவும்,பௌதிக வாழ்க்கை நெறி முறைகளுக்கு பண்பு வகுத்த முறையிலும், இவற்றையெல்லாம் விட ஆத்மாவின் வீடு பேற்றுக்கு ஞான மார்க்கம் கண்டறிந்த வகையிலும் பாரத புத்திரர்கள் பாக்கியவான்கள்.

நம் தேசத்திற்கோ, தேகத்திற்கோ, ஆத்மாவிற்க்கோ ஒவ்வாத அந்நிய கலாச்சாரம், நடைமுறைகள் மீது நம்மவர்கள் மோகம் கொண்டு கண்டதே காட்சி, கொண்டதே கோலம், உண்டதே போகம் என்ற நிலையில் உள்ளனர். இருப்பினும் இந்த நிலை விரைவில் மாறுவதற்கான சூழ்நிலைகள் உருவாகிக் கொண்டு வருகின்றன. தென்றல் காற்றாக வீசி, சூறாவளியாகி, புயலாக மாறும். புயலுக்கு பின் மீண்டும் அமைதியான தென்றல் உருவாகும். "எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு தாழ்வு ஏற்பட்டு அதர்மம் மேலோங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் சாதுக்களை காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்கும் என்னை நானே சிருஷ்டித்துக்கொண்டு ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதாரம் செய்கிறேன்" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறிய படி அவதார புருஷர்கள் தோன்றி அமைதியானதொரு ஆன்மீக சாம்ராஜ்யத்தை உருவாக்குவார்கள் என்பது நிச்சயம். வழி தவறிய கன்று வீடு திரும்பும். தாய்ப்பால் தனக்கு நல்லது என்று எண்ணத் துவங்கி தாய்ப்பசுவின் பின்னால் செல்ல ஆரம்பிக்கும்.

அத்தகைய காலகட்டத்தில் நம்முடைய வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் புதைந்துள்ள ஆழ்ந்த ரகசியங்களை இந்த பிரபஞ்ச சக்தியானது பகவானின் அருளால் நமக்கு வெளிப்படுத்தி காண்பிக்கும். இத்தகைய பிரபஞ்ச சக்தியுடன் ஒரு தொடர்பை உண்டாக்கி கொண்டு பகவானின் அருளை பெறுவதற்காகவும், ஏனைய தேவதைகளிடமிருந்து இக, பர சுகங்களை பெறுவதற்காகவும் உண்டாக்கப்பட்டவையே காயத்ரி மந்த்ரங்கள். மந்த்ரங்கள் மனதில் ஜபிப்பவனுக்கு ஒரு கவசமாக திகழ்கிறது. அது ஒரு ஆத்மசாதகனுக்கு சரீர பலத்தையும் மன உறுதியையும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையையும் அளித்து ஆத்ம முன்னேற்றத்திற்கான வழியையும் தருவதோடு இறுதியில் எம்பெருமானாகிய ஸ்ரீமன் நாராயணனை தியானித்து மோக்ஷத்தையும் அளிக்கிறது.

இவ்வுலகில் நாம் காணும் சூர்யன் பரந்தாமன் ஆகிய நாராயணனோடு உவமை கொண்டோமேயானால், அதை சூழ்ந்துள்ள ஒளிக்கற்றைகள் மற்ற தேவதைகளோடும், ஒளிக்கற்றையிலிருந்து கிளம்பும் ஒளிக்கதிர்கள் ஜீவாத்மாக்களோடும், ஒளிக்கதிரிலிருந்து பிரியும் 7 நிறக்கதிர்கள் ஆத்மாவை ஸரீரமாகக் கொண்டுள்ள ஸப்த ஜீவராசிகளோடும் ஒப்பிடலாம். பரந்தாமனுடைய பக்தர்கள் நேரடியாக சூர்யமண்டலத்தில் உறையும் பரமபுருஷனை அடைந்து மோக்ஷம் எனப்படும் அழியாத்தன்மையாகிய வீடு பேற்றை அடையலாம். பிற தேவதைகளை வழிபடுபவர்கள் சூரியனை சூழ்ந்துள்ள ஒளிக்கற்றைகளை அடைந்து, பல யுகங்கள் கடந்த பிறகு சூர்ய மண்டலத்தில் உறையும் பரமபுருஷனை அடைவதாகக் கொள்ளலாம்

பரந்தாமனால் உருவாக்கப்பட்ட மற்ற தேவதைகள் அவரிடமிருந்தே சக்தியைப்பெற்று ஒளிர்வதாகவும், இகபர சுகங்களை ஜீவர்களுக்கு அளிப்பதாகவும் வேதங்கள் கூறுகின்றன. பரந்தாமனை வழிபடவும், அவர் அந்தர்யாமியாய் உள்ள மற்ற தேவதைகளை வழிபடவும், யாகங்கள், பூஜைகள், பஜனை, கீர்த்தனை, த்யானம், ஜபம், தவம் போன்றவை வேதங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றிற்குரிய காயத்ரி மந்திரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்தந்த தேவதைகளுக்குரிய காயத்ரி மந்த்ரங்களைச் சொல்ல சொல்ல ஒரு ஆத்மசாதகனுக்கு இந்த பிரபஞ்சத்தில் அந்த தேவதைகளிடம் தொடர்பு உண்டாகிறது. அவ்வாறு தொடர்பு உண்டாகும் போது நாம் வாழ்வில் விரும்பும் உயர்ந்த எண்ணங்களை அடையத்தக்க சாதனமாகவும் மந்த்ரம் விளங்குகிறது.

எந்தவொரு மந்திரமும் ப்ரணவத்துடன் சேர்த்தே சொல்ல வேண்டுமென வேதத்தில் விதிக்கப்பட்டுள்ளது. ஓம் என்ற ப்ரணவமானது அ, உ,ம என்ற 3 எழுத்துக்களின் சேர்க்கையாகும். 'அ' காரமாகிய விஷ்ணுமவை, 'ம' காரமாகிய ஜீவாத்மா அடைவதற்கு 'உ' காரமாகிய லக்ஷ்மியை துணை கொள்ளவேண்டும் என்பது இதன் பொருள். 'ம்' என்ற எழுத்தில் கூறப்படும் பிந்து ஸப்தமானது பரம பதத்தை குறிக்கும். எனவே தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் எழுத்துக்களில் "ஓம்" என்ற எழுத்து நான் என்றும், மந்திரங்களில் "காயத்ரி" எனப்படும் மந்த்ரம் நான் என்றும் உரைக்கிறார். மேல், கீழ், நடு முதலிய மூன்று லோகங்களுக்கு ஆதாரமான பகவான் (ஒளிமிக்க தேவன்) விஷ்ணு, நமது இருதய ஆகாஸத்தில் அந்தர்யாமியாய் எழுந்தருளி உள்ளார். அவர் நம்மை நற்கதியில் ஈடுபடுத்துவதற்காக தியானிப்போமாக ! என்பது காயத்ரி மந்திரத்தின் பொருளாகும்.

மந்திரத்தின் ஓசைக்கு அதிக சக்தி உள்ளது. இறைவனை நினைந்துருகும் இறை நாமத்திற்கு அதிக வல்லமை இருக்கிறது. எவ்வாறு ஒரு தீபத்திலிருந்து ஓராயிரம் தீபங்களுக்கு ஒளி உண்டாக்க முடியுமோ, அதுபோல் பிரணவ மந்திரத்திலிருந்து பல மந்திரங்களை உருவாக்க முடியும். மந்திரங்களை வீட்டில் பூஜை அறையிலோ அல்லது ஒரு அமைதியான இடத்திலோ அல்லது கோவிலிலோ அமர்ந்து ஜபிக்கலாம். வீட்டில் செய்யும் போது ஆசனப்பலகை, சுத்தமான துணி அல்லது தர்ப்பாசனம் போன்றவற்றின் மீது அமர்ந்து த்யானம் செய்ய வேண்டும். அவ்வாறு த்யானம் செய்வதினால் மன ஒருமைப்பாடு உண்டாகும். ஆமை தனது உடல் உறுப்புகளை உள்ளிழுத்துக் கொள்வது போல், ஐம்புலன்களும் வெளி உலகப் பற்றில்லாமல் மன ஒருமைப்பாடு உண்டாகும். த்யானம் வலுப்பெறும் போது நமது உடலில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியானது விழித்தெழுந்து ஸுஷும்னா நாடி மூலமாக சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி என்ற ஐந்து நிலைகளைக்கடந்து, ஆறாவது நிலையாகிய ஆக்ஞா சக்ரத்தில் (புருவ மத்தியில்) ஒளி தோன்றும். அந்த ஒளியை குறிப்பிட்ட காலம் வரை ( நிமிஷம் முதல் நிமிஷம் வரை) இஷ்ட தேவதையின் திருஉருவத்தின் மீது நிலை நிறுத்தப் பழகிக் கொண்டால், நீங்கள் இவ்வுலகில்எதை சாதிக்க விரும்புகிறீர்களோ அந்த சாதனையை நிறைவேற்ற முடியும். இதைத்தான் ஸாமவேதமானது "ஓம் தத்வமஸி" என்று உரைக்கிறது. அதாவது நீ எதை விரும்புகிறாயோ அதுவாகவே ஆகிறாய்; (பகவானின் அருளால்).

அத்தகைய நற்பலன்களை பக்தர்கள் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் இக்கட்டுரையில் விஷ்ணு காயத்ரி மந்திரமும், அவரது பரிவார தேவதைகளின் காயத்ரி மந்திரங்களும் அவ்வாறே சிவ காயத்ரி மந்திரமும், அவரது பரிவார தேவதைகளின் காயத்ரி மந்திரங்களும் மற்றும் நவகிரஹ காயத்ரி மந்திரங்களும், சில முக்கியமான துதிக்களையும் அளித்துள்ளேன். இதனை பக்தர்கள் மனனம் செய்து ஜபித்து நல்ல பலன்களையும் வாழ்வில் உன்னதமான நிலையையும் அடையப்பெற்றால், அதுவே நான் செய்த பெரும் பாக்கியமாக கருதி இக்கட்டுரையை வெளியிடுகிறேன்.

Ratham / Car

கட்டுரை ஆசிரியர்
அ. நாகநாத ஐயங்கார். B.Sc.,
2/21, பெருமாள் கோவில் தெரு,
எமனேஸ்வரம். 623 701.
பரமக்குடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம்
Cell : 98659 87270
Email : vishnuthathuvamahimai@gmail.com

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.