கதைத்தொகுப்பு

"ஆன்மா" விளக்கம்
===================
"அது எப்படி அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா" விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்குகிறார்

"பால்" பயனுள்ளதுதான். ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும். அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும். கெடாது.

தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும். அப்படியே விட்டால் கெட்டுப் போகும். அதைக் கடைய வேண்டும். கடைந்தால் வெண்ணெய் ஆகி விடும் கெடாது.

வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது. அப்படியே விட்டால் கெட்டுப் போகும். அதை உருக்க வேண்டும். சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்.

அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது. கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா? அதுபோலத்தான். அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு.

நடப்பவை நடந்தே தீரும் - 1
===========================
பிரம்மரிஷி விசுவாமித்திரர் தன் சிஷ்யனுக்கு எப்போது மரணம் ஏற்படும் என்று அறிந்து அதை மாற்றி அமைக்க விரும்பினார். அதற்காக, நேராக எமதர்மரிடம் சென்று தன் சிஷ்யனின் ஓலைச்சுவடியை கேட்டார்.

எமதர்மரோ தனக்கு பெருமாளுடன் ஒரு அவசர சந்திப்பு இருப்பதால், அதை சித்திரகுப்தரிடம் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார்.

சித்திரகுப்தரோ, எமதர்மருக்காக ஒரு அறிக்கை தயாரிப்பதில் மும்முரமாக இருப்பதால் அவரையே போய் தேடி எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார்.

விசுவாமித்திரரும் சித்திரகுப்தர் சொன்ன அடையாளங்களை வைத்து அங்கும் இங்கும் தேட ஒரு வழியாக அவருடைய சிஷ்யனின் ஓலைச்சுவடி மாட்டியது. உடனே ஆவலோடு அதை படிக்க ஆரம்பித்தார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது .. "இந்த ஓலைச்சுவடி எப்போது விசுவாமித்திரர் கையில் கிடைக்கிறதோ அப்போதே இந்த சுவடிதாரருக்கு மரணம் நேரும்"

ஆக, விதிக்கப்பட்டவை விதிப்படி நடந்தே தீரும்.

நடப்பவை நடந்தே தீரும் - 2
===========================
ஒரு முறை எமதர்மர் மஹாவிஷ்ணுவை காண வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு குட்டிப் பறவையை உற்றுப்பார்த்து விட்டு மஹாவிஷ்ணுவை காண உள்ளே சென்று விட்டார்.

அதை அங்கு அமர்ந்திருந்த கருடர் பார்த்துவிட்டார். "ஆஹா, எமதர்மரின் பார்வை பட்டு விட்டதே. இனி இங்கிருந்தால் இந்த பறவையின் கதி அதோகதி தான்" என்று நினைத்து அந்த பறவையை கவ்விக்கொண்டு ஆயிரத்து ஐநூறு மைலுக்கு அப்பால் விந்திய மலையில் ஒரு பாறையின் அடியில் ஒளித்து வைத்து விட்டு திரும்பியது.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்த எமதர்மர் பறவை அமர்ந்திருந்த இடத்தை மீண்டும் பார்த்தார். பறவை அங்கு இல்லை என்றதும் நடக்க ஆரம்பித்தார்.

"என்ன எமதர்மரே, எதையோ தேடி ஏமாந்தது போல் இருக்குதே?" என்று கருடர் வினவ,

"ஒன்றுமில்லை, சற்று நேரத்திற்கு முன் இங்கு அமர்ந்திருந்த பறவை அரை மணி நேரத்தில் ஆயிரத்து ஐநூறு மைலுக்கு அப்பால் விந்திய மலையில் ஒரு பாறையின் அடியில் இருக்கும் பாம்பின் வாயில் மாட்டி இறக்கவேண்டும் என்று தலையெழுத்து. ஆனால், இவ்வளவு சிறிய பறவையால் அரை மணி நேரத்தில் எப்படி அவ்வளவு தூரம் பறந்து செல்ல முடியும் என்று யோசித்துக்கொண்டே போனேன்" என்றாரே பார்க்கலாம்.

ஆக, விதிக்கப்பட்டவை விதிப்படி நடந்தே தீரும்

எது இறைவனுக்கு பிரியமானது?
================================
விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காப்பதற்காகச் சென்ற ராமர், அப்படியே மிதிலை சென்று சிவதனுசை முறித்து, சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார்.

நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவரும் இருந்தார்.

அவர் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன.

வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப் பொருட்களைத் தந்து கொண்டிருந்தார்கள்.

அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது.

"எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது?" என நினைத்தவர், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப எத்தனித்தார்.

அதனை கவனித்துவிட்ட ராமபிரான், அவரை அருகே அழைத்தார்.

"உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே!" என்று ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனார் மித்ரபந்து.

ராமபிரான் வனவாசம் செல்லப் புறப்பட்டபோது, "தாயே, வனவாசம் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்!" என்று கேட்டு அனுமதி வாங்கினார்.

கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கினார்.

"விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன!" என்றார்.

உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர், அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

கடவுளுக்கு யார், என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

நீங்கள் உங்களால் முடிந்ததை மனப்பூர்வமான பக்தியுடன் அவரது திருவடிகளில் சமர்ப்பியுங்கள்.

அதுதான் கடவுளை சந்தோஷப் படுத்தும். இறைவனுக்குப் பிரியமானதாகவும் இருக்கும்.

குறிப்பு : ஒரு மரம், தச்சனின் கையில் பாதுகைகளாக உருவாகி, ராமரின் பொற்பாதங்களை அலங்கரித்து பின் அயோத்தியையே ஆண்டது என்றால், எப்பேர்ப்பட்ட தவம் இருந்திருக்கும் அந்த மரம்.

மரணத்திற்குப்பின் என்னவாகும்?
================================
நசிகேதஸ். நிறைய பேருக்கு இந்த பெயர் தெரிந்திருக்கக்கூடும். ஆனால் நசிகேதஸ் பற்றிய கதை தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. மரணத்திற்குப்பின் என்னவாகும் என யமனையே கேட்டு கலங்கடித்தவன் நசிகேதஸ். எப்பேர்ப்பட்ட பெயர். எப்பேர்ப்பட்ட கதை.

முன்னொரு காலத்தில் வஜஸ்ராவசா என்று ஒருவர் இருந்தார். இவருக்கு நசிகேதஸ் என்னும் 16 வயது மகன் இருந்தான். வஜஸ்ராவசா சொர்க்கத்தில் தனக்கு நல்ல இடம் கிடைக்க யாகம் ஒன்றை செய்தார். யாகத்தின் முடிவில் தனக்கு சொந்தமானதை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அதன்படி அவர் தன்னிடமிருந்த "சொத்தை" மாடுகளையும், தரிசு நிலங்களையும் மற்றவர்களுக்கு தானமாக வழங்கிக்கொண்டிருந்தார்.

அதைக்கண்ட நசிகேதஸ் அவன் அப்பாவிடம் "நானும் உங்கள் சொத்து தானே? என்னை யாருக்கு தானம் செய்வீர்கள்?" என கேட்க, கோபத்தில் அவன் அப்பா "யமனுக்கு" என்று கூறிவிட்டார்.

நசிகேதஸ் அதை நிறைவேற்ற யமனிடம் கிளம்பினான். அவனுடைய அப்பா தடுத்து நிறுத்திய போது, "இதுவரை நம் முன்னோர்கள் யாவரும் சொன்ன வார்த்தை தவறியதில்லை. நீங்களும் அந்த பெருமையை காப்பாற்றுங்கள்" என்று கூறி யமதர்மனை பார்க்க கிளம்பினான்.

நசிகேதஸ் சென்ற போது யமன் அங்கு இல்லை. மூன்றாம் நாள் அங்கு வந்த யமன், தன் வீட்டு வாசலில் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் மூன்று நாட்கள் நசிகேதஸ்ஸை காக்க வைத்ததற்கு மன்னிப்பு கோரி, பிரயாசித்தமாக மூன்று வரங்களை தருவதாகக் கூறினான். அதில் மூன்றாவது வரமாக நசிகேதஸ் கேட்டது தான் "நாம் இறந்த பின்னால் என்ன ஆகும்" என்பது.

இதற்கு பதில் அளிக்க விரும்பாத யமன், வேறு எதையாவது கேட்க சொன்னான். அவனுக்கும் அவனுடைய சந்ததியர்க்கும் நீண்ட ஆயுளையும், பொன் பொருள் எல்லாம் தருவதாக கூறினான். ஆனால் நசிகேதஸ்ஸோ, அவை எல்லாம் ஒரு நாள் அழிந்துவிடும். அழியாத்தன்மை பற்றி அறிய மரணத்திற்கு பின் என்ன ஆகும் என மீண்டும் கேட்டான்.

நசிகேதஸ்ஸின் ஆன்மீக தேடலையும், விடாமுயற்சியையும் கண்ட யமன், அவனுக்கு பதிலளிக்கிறான் ஆனால் நேரடியாக அல்ல!

யமன் சொல்கிறான் " ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது எதிலிருந்தும் உருவாவதில்லை. அதிலிருந்து எதுவும் உருவாவதில்லை ......"

யமன் மேலும் சொல்கிறான் - "வாழ்க்கை என்பது ஒரு தேர். ஐம்புலன்களே தேரை இழுக்கும் குதிரைகள். மனம் தான் ஐம்புலன்களான குதிரைகளை கட்டுப்படுத்தும் லகான். தர்ம-அதர்ம, நியாய-அநியாய பேதங்களை உணர்ந்த புத்தி தான் தேரோட்டி. சரியான பாதை எது என்று அறியாத தேரோட்டி, லகானை சரியாக இழுக்க மாட்டான். குதிரைகள் திசை தடுமாறும். அதாவது புத்தி சரி இல்லை எனில் மனம் கட்டுப்பாட்டை இழக்கும். புலன்கள் அலைபாய்ந்து சீரழியும். புத்தியானது சரியாக செயல்பட்டால், மனமும் கட்டுப்படும், குதிரைகளும் (புலன்கள்) சரியான பாதையில் ஓடும், தேரும் (வாழ்க்கை) முறையாக பாயும்".

கதோபநிஷத்தில் கூறப்பட்டிருக்கும் இந்த சம்பாஷணைகள் மரணத்திற்கு பின் என்ன ஆகும் என்பதை நேரடியாக கூறவில்லை. அல்லது, அதை புரிந்து கொள்வதும் எளிமையாக இல்லை.

ஆனால், சாந்தோக்ய உபநிஷத்தில் இது மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.ஒருவர் இறந்ததும் அவருடைய ஆத்மா நான்கு வகையான பாதைகளில் ஏதாவது ஒன்றில் பயணிக்கும்.

முதல் வழி தேவாயணம். ஆத்ம ஞானம் பெற்றவர்களின் ஆன்மா இதுவழியே பயணித்து பரமாத்மாவை அடைந்து ஐக்கியம் பெற்றுவிடும்.

இரண்டாவது, பித்ராயணம். தான தர்மம், பிறருக்கு நன்மை செய்து அறத்துடன் வாழ்ந்தவர்களின் ஆன்மா இதுவழியே சந்திர லோகத்தை (சந்திரமண்டலம் அல்ல) அடைந்து தான் செய்த புண்ணிய பலன்களை அனுபவித்து மீண்டும் மனித பிறப்பெடுத்து பயணத்தை தொடரும்.

மூன்றாம் நான்காம் வழிகளுக்கு பெயர் ஏதும் இல்லை. பிறருக்கு கெடுதல் செய்து வாழ்ந்தவர்களின் ஆன்மா மூன்றாம் வழி சென்று மனித பிறப்புக்கு கீழான விலங்கு அல்லது மீன் என மீண்டும் பிறப்பர். பஞ்ச மாபாதக செயலை செய்தவர்கள் நான்காம் வழி சென்று புழு பூச்சி போன்ற பிறப்பெடுப்பர். இவர்களின் கெட்ட கர்ம பலன் தீர்ந்ததும் மீண்டும் மனித பிறப்பெடுப்பர்.

மனிதப் பிறவி எடுக்கிற ஆன்மா, தன்னுடைய முந்தைய மனிதப்பிறவியில் பெற்றிருந்த ஆத்மஞானத்தை மீண்டும் பெற்று, அங்கிருந்து படிப்படியாக மேலும் பக்குவமடைந்து இறுதியில் பரம்பொருளுடன் ஐக்கியமாகும்.

மரணம் நிச்சயம் ஒரு நாள் நிகழ்ந்தே தீரும். அப்படி மரணிக்கும் வேளையில் நாம் எப்பேர்ப்பட்ட சிந்தனையில் இருப்போமோ அப்பேற்பட்ட பலன் தான் (மறு பிறப்பு) கிடைக்கும் என்று கீதையும் கூறுகிறது. அதாவது ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் பதவி ஆசை பிடித்து வாழ்ந்திருந்தால், சாகும் தருவாயிலும் அவர் அதை பற்றி தான் நினைத்துக்கொண்டிருப்பார். அதே போல் மற்றவருக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர் கடைசிவரை நல்லதே நினைத்துக்கொண்டு இருப்பர். சிலர், "சீதக்காதி" போல் செத்தும் கொடுப்பர்.

குறிப்பு : எனவே இம்மையில் வாழ்வதும், மறுமையில் உயர்வதும் அவரவர் கையில். தமிழில் இதற்கு முத்தாய்ப்பாக ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்கள் "தீதும் நன்றும் பிறர் தர வாரா".

கர்மம் யாரை ஒட்டிக்கொள்ளும்?
==================================
ஒரு ராஜா தன்னுடைய நாட்டு மக்களுக்கு ஒரு விருந்து ஒன்று கொடுத்தார். அந்த விருந்திற்கான உணவு அரண்மனையின் ஒரு திறந்தவெளியில் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அப்போது வானத்தில் ஒரு கருடன் தன் வாயில் ஒரு நாகப்பாம்பை கவ்விய படியே பறந்து கொண்டிருந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பாம்பு, கருடனின் காலில் இருந்து தப்பித்து, துரதிருஷ்ட வசமாக கீழே விருந்திற்காக தயாராகிக்கொண்டிருந்த உணவில் விழுந்தது.

இதை அறியாத சமையற்காரர், அந்த உணவை அனைவருக்கும் பரிமாறினார். அந்த உணவை சாப்பிட்டதில் ஒரே ஒரு பிராமணன் மட்டும் இறந்து விட்டான். இப்போது அந்த 'பிராமண ஹத்தி' எனும் தோஷம் (பாவ கர்மம்) யாரையாவது பிடிக்க வேண்டும். எனவே கர்மாவானது முதலில் கருடனை அணுகியது

ஆனால் கருடனோ "நான் பாம்பை கீழே போடவில்லை. பாம்பு தான் என்னிடமிருந்து தப்பி கீழே விழுந்தது. எனவே எனக்கும் அந்த பாவத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதனால் நீ (கர்மா) என்னை பிடிக்க முடியாது" என்று கூறி விட்டது.

பாம்பை பிடிக்கலாம் என்றால் அது இறந்து விட்டது.

சமையற்காரரிடம் கேட்டால், "உணவில் விஷம் கலந்திருப்பதே எனக்கு தெரியாது எனும் போது நான் எப்படி இதற்கு பொறுப்பாக முடியும். தவிரவும், நான் அனைவருக்கும் தான் பரிமாறினேன். அதில் பிராமணன் இறந்தால் நான் பொறுப்பில்லை. எனவே, நீ என்னை பிடிக்க முடியாது" என்று கூறி விட்டார்.

அடுத்ததாக, ராஜா. "ஊரில் இருந்த அனைவருக்கும் அவ்வப்போது விருந்தளிப்பது எங்கள் அரச குல வழக்கம். அதை பின்பற்றி நான் அனைவருக்கும் விருந்தளித்தேன். அந்த உணவை உண்டதில் ஒருவர் மட்டும் இறந்து போனால் நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? நான் விருந்தளிக்க வேண்டும் என்ற என் கடமையை தானே செய்தேன். எனவே, நீ என்னை பிடிக்க முடியாது" என்று கூறி விட்டார்.

இப்படி அந்த கர்மா யாரையும் பிடிக்க முடியாமல் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது.

அப்போது அங்கே ஒரு பெண் ராஜாவை பார்க்க வந்தாள். அங்கிருந்த அரண்மனை வாயிற்காப்போன் அவளிடம் "பிராமணன் இறந்ததை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?" என்று கேட்டான். அதற்கு அந்த பெண், "ராஜா பிராமணனை வேண்டுமென்றே விஷம் வைத்து கொன்று விட்டதாக ஊரில் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்." என்றாள். அவ்வளவு தான். கர்மா குபீரென பாய்ந்து அந்த பெண்ணை பிடித்துக்கொண்டது.

அதாகப்பட்டது, எவன் ஒருவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் கடமையை செய்கிறானோ அவனை கர்மா அணுகாது. இந்த கதையில் வரும் பெண் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் (உள்நோக்கத்துடன்) பேசப்போக கர்மாவானது அவளை பிடித்துக்கொண்டது.

அதனால் தான் பகவான் கீதையில் இப்படி சொல்லியிருக்கிறார் :-

"கர்மண்யே வதிகாரஸ்தே மா பலேஷு கதாசனா" - கடமையை செய். பலனில் பற்று வைக்காதே !

அவர் மேலும் கூறுகிறார் "படைப்பது என் கடமை. அதனால் நான் படைக்கிறேன். அதன் பலனை எண்ணி நான் படைக்காததால் என்னை எந்த கர்மாவும் ஒட்டாது. எனவே தான் நான் கர்மாவுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறேன்"

ஆக, நாம் எதை செய்தாலும் அதன் பிரதி பலனை எதிர்பாராமல் செய்தோமானால் நம்மை கர்மா ஒட்டாது.

குறிப்பு : இனி, அடுத்த முறை நீங்கள் "அவர்கள் பேசிக்கொண்டார்கள்", "நான் கேள்விப்பட்டேன்" என்று எதையாவது கூறினால் சம்மந்தப்பட்ட கர்மா உங்களை ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, அப்பேற்பட்ட பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

கர்மவினையை தீர்த்தல்
========================
மஹாபாரதப் போரின் முடிவில் தனது நூறு புத்திரர்களையும் பறி கொடுத்து சோகத்தில் ஆழ்ந்திருந்த திருதராஷ்டிரன் பகவான் கிருஷ்ணரிடம் "கண்ணா, நான் எந்த ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?" என்று கேட்டார்.

அதற்கு பகவான் "திருதராஷ்டிரரே, 300 பிறவிகளுக்கு முன்னால் நீங்கள் செய்த பாவத்தின் பலனை நீங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு வேட்டுவர். காட்டில் ஒரு "தாய்ப்பறவையை" வேட்டையாட அம்பெய்தினீர்கள். ஆனால், அந்த தாய்ப்பறவையானது தப்பி எங்கோ பறந்து சென்று விட்டது. அந்த கோபத்தில் அந்த தாய்ப்பறவை அடைகாத்துக்கொண்டிருந்த 100 முட்டைகளை போட்டு உடைத்தீர்கள். அதை அங்கு மறைவில் அமர்ந்திருந்த தகப்பன் பறவை செய்வதறியாமல் சோகத்தில் உருகியது. அந்த வினைப்பயனை தான் இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்" என்றார்.

"அதை நான் என்னுடைய மறு பிறவியிலேயே அனுபவித்திருக்கலாமே? ஏன் 300 பிறப்பு முடிந்து இப்போது வரவேண்டும்?" என்று திருதராஷ்டிரன் வினவ,

"நீங்கள் நினைப்பது போல் கர்மவினைக் கணக்கு அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் ஒரு குழந்தையை பெறுவதற்கே நிறைய புண்ணியம் செய்ய வேண்டும். நூறு மக்களை பெறுவதற்கு நிறையவே புண்யம் செய்ய வேண்டும். பின் நூறு மக்களை பராமரித்து வளர்க்கும் அளவிற்கு உங்களிடம் சொத்து சம்பத்துகள் இருக்கவேண்டும். ஆக, அதற்கும் சேர்த்து நீங்கள் புண்யம் சேர்க்க வேண்டும். அவ்வளவு புண்யங்களை சேர்க்க நீங்கள் ஏகப்பட்ட பிறவிகளை எடுக்க வேண்டி இருந்தது. எனவே தான், நீங்கள் நினைப்பது போல் வினைப்பயன் மறுபிறவியிலேயே தீராமல் இவ்வளவு பிறவிகளுக்கு பின்னால் தீர்ந்தது." என்று கிருஷ்ணர் கூறினார்.

குறிப்பு : இக்கதையின் மூலம், இப்பிறவியில் நாம் சேர்க்கும் புண்யமெல்லாம் ஏதோவொரு பிறவியில் செய்த கர்மவினையை சமன் செய்வதில் தீர்ந்துவிடும் எனபதும், பிறவிப் பெருங்கடலை கடக்க நாம் "கூடுதலாக" புண்யம் சேர்க்க வேண்டும் என்பதும் தெரிகிறது. "கூடுதல்" புண்யம் சேர்க்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் "பாவம்" செய்யாதிருந்தாலே போதும், பிறவிகள் குறைய வாய்ப்புண்டு.

அன்னதானத்தின் மஹிமை
============================
மஹாபாரதப் போரிற்கு பிறகு பூமியில் யுதிஷ்டரரின் (தர்மர்) காலம் முடிந்ததும் எமதர்மர் அவரை வானுலகம் அழைத்துச்சென்று கொண்டிருந்தார்.

போகும் பாதையானது மிக நீண்டதாகவும், கல்லும் முள்ளுமாகவும், கரடு முரடாகவும் இருந்தது. யுதிஷ்டிரரால் யமதர்மரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை. வெகுநேரம் அந்த பாதையில் நடந்ததில் யுதிஷ்டிரருக்கு மிகவும் பசி எடுத்தது.

எனவே, யுதிஷ்டிரர் எமதர்மரை அழைத்து "எமதர்மரே, என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது. எனக்கு மிகவும் பசியாக உள்ளது. எதையாவது உண்டு களைப்பாறினால் தான் மேற்கொண்டு பயணிக்க முடியும்" என்றார்.

அதைக்கேட்ட எமதர்மர், "யுதிஷ்டிரரே, பசியாக இருந்தால் உங்கள் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள்ளவும்" என்றார்.

யுதிஷ்டிரரும் அவ்வாறே செய்ய பசி சட்டென அடங்கியது. ஆச்சரியப்பட்டு போன யுதிஷ்டிரர் "எமதர்மரே, எப்படி இது?" என்று கேட்டார்.

"யுதிஷ்டிரரே, ஒரு முறை உங்களை தேடி ஒருவர் பசிக்கு உணவு கேட்டு வந்தார். நீங்கள் அவரிடம் அன்னதானம் செய்யும் இடத்தை சுட்டி காட்டி அங்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று கூறினீர்கள். அப்படி நீங்கள் அன்னதானம் செய்யும் இடத்தை காட்டியதால் அந்த புண்ணியம் உங்களிடம் சேர்ந்தது. அது தான் உங்களுடைய பசியை இப்போது ஆற்றியது" என்று எமதர்மர் கூறினார்.

குறிப்பு : தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஏனெனில், ஒருவருக்கு என்னதான் பொன்னும் பொருளும் கொடுத்தாலும், போதும் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்வார். ஆனால், அன்னம் அப்படி அல்ல. வயிறார சாப்பிட்டு விட்ட ஒருவருக்கு கூடுதலாக ஒரு கரண்டி அன்னம் பரிமாறி பாருங்கள். அவர் வலது கையால் அன்னத்தை உண்டு கொண்டிருந்தாலும், இடது கையால் "போதும் போதும்" என கூறி நாம் பரிமாறுவதை தடுப்பார். எனவே தான் அன்னதானம் சிறந்தது. அப்படிப்பட்ட அன்னதானத்தை சுட்டிக்காட்டியதே புண்ணியம் என்றால், அதை செய்வதால் கிடைக்கும் புண்ணியம் நிச்சயம் பலமடங்காக இருக்கும்.

நன்றிக்கடன் தீர்த்தல்
=====================
பீடிகை : என் நண்பர் ஒருவருக்கு 'ள / ழ' கரத்தை உச்சரிப்பதில் தகராறு. "தாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கம் வரை ஒரே மலை" என்பார். "யூ மீன் பரங்கிமலை?" என்று கேட்டால் "இல்லையில்லை, தாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கம் வரை மலை அடிச்சி தல்லியிருச்சி" என்பார். அப்போது தான் அவர் குறிப்பிடுவது "மழை" என்பது புரியும். ஒரு நாள் இப்படி பாடிக்கொண்டிருந்தார் "மனதிலே ஒரு பாட்டு, மலை வரும் அதைக்கேட்டு" என்று.... அப்போது அவருக்கு சொன்னது தான் இந்த கதை.

கதை : கிருதா யுகத்தில் மலைகளுக்கெல்லாம் இறக்கைகள் இருந்தன. அவைகளால் பறவைகளை போன்று வானத்தில் பறக்க முடியும். எனவே, அந்த மலைகள் வானத்தில் பறந்து வந்து மக்கள் மேல் விழுந்து அவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தன. அதே போல், ரிஷிகள் யாகம் செய்யும் இடங்களில் விழுந்து யாகத்தை நாசம் செய்து கொண்டிருந்தன.

எனவே ரிஷிகள் எல்லாம் ஒன்று கூடி மலைகள் செய்யும் அட்டகாசத்தை இந்திரனிடம் முறையிட்டார்கள். தேவர்கள் மலைகளை பிடித்துக்கொள்ள இந்திரன் தன்னுடைய வஜ்ராயுதத்தால் எல்லா மலைகளின் இறக்கைககளை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தான்.

அந்த மலைகளில் "மைனகா" (मैनाक) என்றொரு மலை இருந்தது. அந்த மலை வாயு பகவானின் நண்பன். மற்ற மலைகளை போல் வம்புதும்புக்கு போகாத மலை. அந்த மலை இந்திரனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படி வாயு பகவானிடம் கேட்டுக்கொண்டது.

வாயு பகவானும், இந்திரனின் முயற்சிகளை முறியடித்து மைனகாவை காப்பாற்றி, தன் நண்பன் கடலரசனிடம் கூறி கடலுக்குள்ளே ஒளித்து வைத்தது.

இந்த கதையை கூறி விட்டு "நண்பரே, கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் அந்த மலைக்குத்தான் இன்னமும் இறக்கை உள்ளது. நீ பாடியதை கேட்டு வருவதாக இருந்தால் அந்த ஒரு மலை தான் வர முடியும்" என்று சொல்ல அப்போது தான் என் நண்பருக்கு நான் அவரை கிண்டலடிப்பது புரிந்தது. ஏனெனில் original பாட்டு "மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு" ஆனால், என் நண்பரோ "மலை வரும்" என்று பாடிக்கொண்டிருந்தார்.

குறிப்பு : ராமாயணத்தில் ஹனுமான் சீதா தேவியை தேடி ஸ்ரீலங்காவை நோக்கி பறந்து கொண்டிருந்தார். அப்போது கடலரன் மைனகாவை அழைத்து "உன்னை காப்பாற்றிய உன் நண்பனின் புத்திரன் ஸ்ரீலங்காவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். நீ மேலே வந்து உன்மேல் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள சொல்." என்று சொன்னது. மைனகாவும் தன் நன்றிக்கடன் தீர்க்க அவ்வாறே செய்தது. ஆனால், ஹனுமாரோ "நான் ராமபிரானின் காரியமாக சென்று கொண்டிருப்பதால் நடுவில் தங்கி ஓய்வெடுக்க இயலாது" என்று கூறி விட்டு மைனகாவை பாந்தமாக தடவி கொடுத்த படியே பறந்து சென்று விட்டார்.

யார் பொறுப்பு?
================

இது ஒரு நகைச்சுவை கதை.

ஒருமுறை சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையில் இருந்த சுவர் இடிந்து விழுந்துவிட்டது.

அதனால் நரகத்தில் இருப்பவர்கள் 'ஹாயாக' சொர்க்கத்துக்குள் சென்று வர முடிந்தது. முதலில் சொர்க்கத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் அங்கே போன நரகவாசிகள், நாளாக நாளாக சொர்க்கவாசிகளுக்கு சொந்தமானதை எடுத்து அனுபவிக்கத் தொடங்கினர்.

இதனால் சொர்க்கவாசிகளுக்கும் நரகவாசிகளுக்கும் இடையே சண்டை வந்தது. சண்டையை தொடர்ந்து பஞ்சாயத்து நடந்தது. பஞ்சாயத்தின் முடிவில் இடிந்து போன சுவரை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் யார் கட்டுவது? சொர்க்கவாசிகள் அதை நரகவாசிகள் தான் கட்டவேண்டும் என்றனர். நரகவாசிகளோ பாதிக்கப்பட்ட சொர்க்கவாசிகள் தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்றனர்.

பிரச்சினை தீராததால் சொர்க்கவாசிகள் அனைவரும் 'கோர்ட்டில்' சென்று வாதாட முடிவு செய்தனர்.

அதைக்கேட்ட நரகவாசிகள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று சொர்க்கவாசிகள் கேட்டனர்.

அதற்கு நரகவாசிகள் சொன்னார்கள் "கோர்ட்டில் சென்று வாதாட வக்கீல் வேண்டும். ஆனால், அவர்கள் எல்லோரும் எங்கள் பக்கம் தானே இருக்கிறார்கள்"

"திரிசங்கு சொர்க்கம்
====================
திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

முன்னொரு காலத்தில் திரிசங்கு என்றொரு மஹாராஜா இருந்தார். அவருக்கு தன்னுடைய மனித உடலோடு சொர்க்கத்துக்கு போகவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அதற்காக அவர் கடுமையான தவத்தை மேற்கொள்கிறார். அப்போது வரமளிக்கக்கூடிய தேவர்கள் அவர் முன் தோன்றி "இது சாத்தியம் இல்லை, எனவே இதை விட்டுவிடு" என்று கூறுகிறார்கள். ஆனால், அவர் விடுவதாக இல்லை. எல்லா ரிஷிகளிடமும் வேண்டிக்கொள்கிறார்.

வசிஷ்டரிடம் போய் "ஒரு யாகம் செய்ய வேண்டும்' என்று கேட்கிறார். 'இந்த மாதிரி யாகம் எல்லாம் செய்ய முடியாது, அது தப்பு, நான் செய்ய மாட்டேன்' என்று கூறி விடுகிறார். பின், அவர் வசிஷ்டருடைய மகன்களிடம் போகிறான். அவர்கள் "எங்கள் தந்தையிடம் கேட்டிர்கள், அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் வார்த்தையை மீறி இங்கு வந்திருக்கிறீர்கள். அதனால் உங்களை சபிக்கிறோம். இப்படியே சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று தானே கேட்கிறீர்கள். உங்கள் உருவமே விகாரமாய் போகட்டும்." என்று சபிக்கின்றனர்.

தான் விகாரமாய் போனாலும், சொர்க்கத்துக்கு போகவேண்டும் என்ற ஆசை அவரை விடவில்லை. கடைசியில், விஸ்வாமித்ரரிடம் சென்று நடந்தவற்றை சொல்கிறார். அவர், "இதென்ன பெரிய காரியம், நான் செய்கிறேன். உன் உருவம் விகாரமாய் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். உன்னை அப்படியே தேவலோகத்துக்கு அனுப்புகிறேன்." என்று கூறி யாகம் செய்வதற்கு ரிஷிகளையெல்லாம் அழைக்கிறார். பல ரிஷிகள் வருகிறார்கள். அதில் மஹோதயர் என்ற ரிஷி வர மறுக்கிறார். "பூலோகத்தில், நீ வேடனாக பிறப்பை" என்று அவரை சபித்து விடுகிறார். வஷிஷ்டருடைய மகன்களை கூப்பிடுகிறார். அவர்களும் வர மறுக்கிறார்கள். "கண்ட மாமிசங்களையும் தின்று கொண்டது, கண்ட மாதிரி திரிவீர்கள்" என்று அவர்களையும் சபித்து விடுகிறார். அந்த மாதிரி கோபத்தில் இருந்த விஸ்வாமித்திரர் யாகம் நடத்தினார். தேவர்களை எல்லாம் அழைக்கிறார். தேவர்கள் வர மறுக்கிறார்கள். உடனே அவருக்கு கோபம் இன்னும் மிகுதியாகிறது. "யார் வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை. நான் உன்னை தேவலோகத்துக்கு அனுப்புகிறேன்" என்று சொல்லி அவரை அனுப்புகிறார்.

திரிசங்கு மேலே செல்கிறார். இந்திரனிடம் போய் விடுகிறார். இந்திரனுக்கு மகா கோபம் வருகிறது. "நீ ஆச்சாரியனையே அவமதித்தவன். உனக்கு இங்கு என்ன வேலை? அப்பிடியே பூமியில் விழு" என்று சபிக்கிறார். அவர் "விஸ்வாமித்ரரே ! என் நிலைமை இப்படி ஆகிவிட்டதே. நான் விழுந்து கொண்டிருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள்" என்று கதறுகிறான். அப்போது விஸ்வாமித்திரர் அவரைப்பார்த்து "நில்" என்கிறார்.

அவர் அங்கேயே நின்று விடுகிறார். 'இங்கே உனக்காக ஒரு தேவலோகம் சிருஷ்டி செய்கிறேன்' என்று சொல்லி, சப்தரிஷி மண்டலத்தை உண்டாக்குகிறார். நட்சத்திரங்களை எல்லாம் உருவாக்குகிறார். இப்படி அங்கு ஒரு தேவலோகத்தை சிருஷ்டி செய்கிறார்.

"தேவர்களை எல்லாம் இங்கு நான் சிருஷ்டி செய்கிறேன். அங்கே தனியாக ஒரு தேவேந்திரனையே உண்டாக்குகிறேன்" என்று ஆரம்பிக்கிறார். உடனே தேவர்களுக்கு பயம் வந்து விடுகிறது. ஓடி வந்து அவர் காலில் விழுந்து "நீங்கள் பெரிய தபஸ்வி. நீங்கள் நினைத்ததை உங்களால் செய்ய முடியும். ஆனால், இன்னொரு தேவலோகம், இன்னொரு தேவர்கள், இன்னொரு தேவேந்திரன் இப்படி செய்துவிடாதீர்கள்" என்கிறார்கள்.

"அப்படியானால், இந்த தேவலோகம் அவனுக்கு இப்படியே இருக்க வேண்டும். திரிசங்கு என்னை நம்பி வந்தவன்" என்று விஸ்வாமித்திரர் கூறுகிறார்.

தேவர்களும் "சரி, அப்படியே ஆகட்டும்" என்கிறார்கள்.

இப்படி, விஸ்வாமித்திரரால் மேலேயும் இல்லாமால் பூமியிலேயும் இல்லாமால் நடுவில் உண்டாக்கப்பட்டது தான் திரிசங்கு சொர்க்கம்.

(நன்றி. மூலம்: துக்ளக் பத்திரிக்கை - 22/11/2017)

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.