ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்

முன்னுரை

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்றால் விஷ்ணுவின் 1000 பெயர்கள் என்று பொருள். மஹாபாரத போரின் முடிவில், பீஷ்மர் மரணப்படுக்கையில் படுத்தவாறு தனது உடலை விட்டு பகவானின் பொற்பாதங்களை அடையும் புனிதமான நேரத்திற்காக காத்திருக்கிறார். அப்போது, யுதிஷ்டிரர் தர்மா, கர்மா சம்பந்தமாக சில கேள்விக்கான விடைகளை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறார். யுதிஷ்டிரரின் மன உளைச்சலை அறிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பீஷ்மரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற அறிவை அறிந்துகொள்வதற்காக. அவரிடம் செல்லுமாறு யுதிஷ்டிரரை அறிவுறுத்துகிறார்.

சிறந்த விஷயஞானம் உள்ள பன்னிரண்டு பேர்களில் பீஷ்மரும் ஒருவராக கருதப்படுகிறார். பிரம்மன், நாரதர், சிவன், சுப்ரமணியன், கபிலர், மனு, ப்ரஹ்லாதர், ஜனகர், பலி, சுகர், யமன் ஆகியோர் மற்ற பதினோரு பேர்கள் ஆவார்கள்.

பகவானின் அறிவுரையின்படி பீஷ்மரை சந்தித்த யுதிஷ்டிரர், அவரிடம் ஆறு கேள்விகளை முன் வைக்கிறார்.

1. இந்த உலகின் ஆகச்சிறந்த கடவுள் யார்?
2. அனைவருக்கும் அடைக்கலம் தருபவர் யார்?
3. யாரை மஹிமைப்படுத்துவத்தின் மூலம் அமைதியும் செழிப்பும் உண்டாகும்?
4. யாரை வழிபட்டால் மங்களம் உண்டாகும்?
5. உங்கள் கருத்துப்படி எது உலகின் சிறந்த தர்மம்?
6. எதை ஜபிப்பதின் மூலம் பிறப்பு இறப்பு எனும் பந்தத்திலிருந்து விடுபட முடியும்?

அவருக்கு பதில் கூறும் வகையில் பீஷ்மர் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உச்சரிக்கிறார். மேலும், இந்த நாமங்களை தியானிப்பதன் மூலமாகவோ அல்லது அர்ச்சனை செய்வதின் மூலமாகவோ ஒருவரின் மனம் உயர்ந்த நிலையை அடையும் என்றும் கூறுகிறார். இந்த ஆயிரம் நாமங்களே "விஷ்ணு ஸஹஸ்ரநாமம்" என வழங்கப்படுகிறது.

இந்த மாதிரி வார்த்தைகளை உச்சரிப்பதால் ஒருவருக்கு பெரிய சக்திகள் கிடைக்குமா என்று ஒருவருக்கு நியாயமான சந்தேகம் எழக்கூடும். சற்று நினைத்துப்பாருங்கள். ஒரு பெரிய கூட்டம் அமர்ந்துள்ளது. அப்போது கூட்டத்தில் ஒருவர் "வண்டி" என்று கூறுகிறார். அதை கேட்பவர்களிடம் எந்தவித பாதிப்பும் இருக்காது. அதுவே அவர் "பாம்பு" என்று கூறட்டும். உடனே, மொத்த கூட்டமும் அலறியடிக்கும். இவ்வாறு, வார்த்தைகளுக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் நல்லவற்றை கூறும் போது மனம் அமைதியடைந்து சிறந்த சக்திகளை பெறுகிறது. அது போலவே, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிப்பதன் / தியானிப்பதன் / அர்ச்சனை செய்வதின் மூலமாக நம் மனம் அமைதியடைந்து சிறந்த சக்திகளை பெறுகிறது.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் மஹா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் மொத்தம் 107 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாமங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் ஒவ்வொரு நாமங்களும் பரமாத்மாவின் ஒரு குறிப்பிட்ட குணங்களை குறிப்பிடக்கூடியது. இந்த நாமங்கள் பகவானிடம் நமக்கு ஒருவிதமான பந்தத்தை தூண்டுகிறது. எனவே, இப்படிப்பட்ட பெருமையுடைய விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை கூறி அதற்கான பலனை அடைவோம்.

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.