ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

நாராயணனே பரம்பொருள்

தற்போது ஹிந்து மதம் என்று வழங்கப்பட்டு வருவதானது பண்டைக்காலத்தில் ஸநாதன தர்மம் என்றும் வைதீக தர்மம் என்றும் போற்றப்பட்டன. மதம் என்றால் வாழ்க்கையை நன்னெறிப்படுத்தி ஆத்மா உய்வதற்கான வழிகாட்டுதல் முறைகள் கொண்டதாகும். தூரத்தில் புகை தெரிகிறதென்றால் அங்கு நெருப்பு உண்டென்பதை அறியலாம்.

மட்பாண்டம் ஒன்று உண்டென்றால் அதை செய்த குயவன் உண்டு என்பதை அறியலாம். அதைப்போலவே இக்காரிய பிரபஞ்சமானது ஒரு ஒழுங்கான முறையில் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அதனை இயக்கக்கூடிய பேரறிவு உண்டு என்பது தெளிவு. இந்த பேரறிவுடைய புருஷனை தெளிவுபடக்கூறுவதாக் அமைந்துள்ளதே நமது முன்னோர்களாகிய ரிஷிகளாலும் தவசிரேஷ்டர்களாலும் இயற்றப்பட்ட வேதங்களாகும். வேதம் என்றால் வித்யை, ஸத்யம், தர்மம், அறிவு, மூலபிரகிருதி பற்றிய ஞானம், நீதிசாஸ்திரம் முதலியவற்றை கொண்டதாயும் இவற்றாலே நிரப்பப்பட்டதாயும் அமைந்துள்ளது. அவை ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களாகும். இவை பிரபஞ்சத்தின் நான்கு தூண்களாகும்.

இத்தகைய பெருமை வாய்ந்த வேதங்கள் நான்கிலும் ஸ்ருஷ்டிக்கு முன் யார் இருந்தார்? என்ற கேள்விக்கு வேதத்தில் ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்ம ந ஈஸாந என்ற ஸ்லோகத்தின் மூலம் நாராயணன் ஒருவர் மட்டுமே இருந்தார். அப்போது பிரம்மனும் இல்லை. ஈஸனும் இல்லை; மற்ற எவரும் இல்லை என்று கூறுகிறது. பிறகு, நாராயணாத் ப்ரஹ்ம ஜாயதே ! நாராயணாத் ருத்ர ஜாயதே ! நாராயணாத் இந்திர ஜாயதே ... என்ற ஸ்லோகத்தின் மூலம் நாராயணனுடைய உந்திக் கமலத்திலிருந்து பிரம்மன் தோன்றியதாகவும், இவ்வாறே அவரிடமிருந்தே இந்திராதி தேவர்கள் தோன்றியதையும் விவரிக்கிறது.

இதனையே, பகவத்கீதையிலும் ஸ்ரீகிருஷ்ண பகவான் படைப்பில் பிரம்மன் நானே, காத்தலில் விஷ்ணு நானே; ஸம்ஹரிப்பதில் ருத்ரன் நானே; படைத்தளபதிகளில் சேனாதிபதியாகிய சுப்ரமண்யன் நானே; தடைகளை நீக்குவதில் கணபதி நானே; என்று கூறி ஒவ்வொரு தேவதைகளிலும் உள்ளிருந்து இயக்குபவர் தானே என்று கூறி, எவரெவர்கள் எந்த வடிவில் என்னை வணங்குகிறார்களோ அவர் அவர்களுக்கு அந்தந்த வடிவில் நானே நின்று அருள்பாவிக்கிறேன் என்பதையும் கூறி, மற்ற தேவதைகளை வணங்குபவர்கள் அந்தந்த தேவதைகளை அடைகிறார்கள் என்றும், என்னை வணங்குபவனோ அழியாத்தன்மையாகிய எனது பரமபத ஸ்தானமான மோக்ஷத்தை இப்பிறவியிலேயே அடைகிறான் என்றும், மற்ற தேவதைகளை அடைந்தவர்கள் 1000 யுகங்கள் முடிந்து எப்போது அந்த தேவதைகள் தன்னை வந்து அடைகிறார்களோ அப்பொழுது தான் அவர்களும் தன்னை வந்து அடைவார்கள் என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

மேலும், "ப்ரஹ்மம்" என்றால் காரிய பிரபஞ்சமாயிருக்கும் பெரிதாயிருக்கும் வஸ்து "பரப்ரஹ்மம்" என்றால் காரிய பிரபஞ்சத்தின் மேல் எழுந்தருளி இயக்குவது என்று பொருள். "தத்வம்" என்றால் அறிவு பூர்வமானது; உண்மையான வஸ்துக்களில் உயர்ந்த்து "பரதத்வம்" என்பதாகும். "ஜ்யோதி" என்றால் பிரகாசமான ஒளி என்று பொருள். ஆயிரங்கோடி சூர்யர்களை ஒத்த பிரகாசத்தை உடைய ஸ்வயம் பிரகாசமானதற்கு "பரம்ஜ்யோதி" என்று பெயர். ஆத்மா என்றால் ஹ்ருதய ஆகாசத்தில் தனது அகடிதகடினா சாமர்த்தியத்தில் உள்நுழைந்து 25 வகை தத்துவங்களால் ஆன மனுஷ்ய சரீரத்தை நியமிப்பவன் என்று பொருள். அத்தகைய ஆத்மாவையே சரீரமாக கொண்டதற்கு "பரமாத்மா" என்று பெயர். ஆத்மா அணு என்றால் அணுவிலும் அணுவாகிய விபுவாகிய பரம அணுவே பரமாத்மா எனப்படுவது. இவை நான்கும் சுட்டிக்காட்டுவதாய் அமைந்துள்ளவர் நாராயணனே என்பதை கீழ்க்கண்ட தைத்திரீய உப நிஷத் வாக்யம் மூலமாக அறியலாம்.

நாராயண பர ப்ரஹ்மம் ! தத்வம் நாராயண : பர : !
நாராயண பரோஜ்யோதி : ! ஆத்ம நாராயண : பர : !

இத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான் ஐந்து நிலைகளில் இருந்து அருள்பாலிப்பதால் "நாராயணன்" எனப்பட்டார். அவையாவன :- 1) பரம நிலை 2) வியூக நிலை 3) விபவ நிலை 4) அர்ச்சா நிலை 5) அந்தர் யாமித்வ நிலை ஆகும்.

பரமநிலையில் நாரம் எனப்படும் ஜீவாத்மாக்களுக்கு மோக்ஷத்தை அளிக்கும் ஸ்தானமாகவும், ஜீவாத்மாக்கள் பிரபஞ்சத்தை நாடி ஸ்ருஷ்டியின் ஆரம்பநிலையில் கிளம்பும் ஸ்தானமாகவும் இருப்பதாலும், வியூகநிலையில் பாற்கடலில் ஸயனித்த மோன நிலையில் தனக்கு கீழ்பட்ட அதிகாரிகளை தம்தம் காரியங்களை செய்ய தூண்டுபவராகவும், விபவநிலையில் அவதாரங்களினாலும், 33 கோடி தேவர்களாயும், தேவதைகளாகவும், ஓம்காரம் தத்துவத்தினால் ஈரேழு புவனங்களையும் படைத்து, எங்கும் வியாபித்து, ஆவரண ஜலமாகிய மஹாப்ரளய ஜலத்தை பிரபஞ்சத்தை சுற்றி அமைத்துக்கொண்டு அதில் பிரபஞ்சம் அமிழ்ந்து விடாமல் தனது விஸ்வரூபத்தால் ஒரு விசேஷமான ஸரீர நிலையில் அனைத்தும் தாங்குபவராயும், அர்ச்சனாநிலையில் பஞ்ச பூதங்களாகிய ஆகாசம், காற்று, அக்னி, நீர், பூமி முதலியவற்றை யாகரூபியாய் ஆராதிக்கப்பட்டு அதை ஞானாக்கினியாக்கி கும்பத்திலுள்ள ஜலத்தில் அர்ச்சனாதிகள் மூலம் எழுந்தருளச் செய்து, அமிர்த கலஸமாக்கி, சிகையாகிய விமானத்தின் மூலம் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதின் மூலம் திருமூர்த்திகளில் எழுந்தருளி அருள்பாவிப்பவராகவும், அந்தர்யாமித்வ நிலையில் ஸகல ஜீவராசிகளில் ஆத்மா ஸ்வரூபமாகவும், "நரன்" எனப்படும் மனிதனின் ஹ்ருதய ஆகாஸத்தில் ஆத்ம ஒளியாகவும், அதனுள் உறையும் ஆத்மாவையே ஸரீரமாகக் கொண்ட பரமாத்மாவாகவும் அணுவிற்குள் அணுவாகவும் பரம அணுவாகவும் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதாலும் "நாராயணன்" எனப்பட்டார் என்று வேதங்கள் பறை சாற்றுகின்றன.

இவ்வுலகில் ஸகல ஜீவராசிகளின் ஸ்ருஷ்டியானது மனது ஸ்ருஷ்டி, நயன ஸ்ருஷ்டி, வியர்வை ஸ்ருஷ்டி, விதை ஸ்ருஷ்டி, கரு ஸ்ருஷ்டி போன்றவற்றால் உண்டாகின்றன.

நாராயணன் ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்க கடவேன் என்று மனதினால் ஸங்கல்பித்தார். அவ்வாறு ஸங்கற்பம் செய்தவுடன் நெற்றியில் இருந்து வியர்வை விழுந்தது. அதுவே எங்கும் உள்ள ஜலமாக ஆயிற்று. அந்த நாராயணனிடமிருந்து ஒளிமயமானதும், அதில் நான்முகனாகிய பிரமன் பிறந்தான். பிரமன் பலயுகங்கள் தவம் செய்து நாராயணனிடமிருந்து ஸ்ருஷ்டிக்கான உபதேசம் பெற்று ருத்ரன், இந்திரன் மற்ற ஜீவராசிகளை படைத்ததாக மஹோனிஷத் வாக்யம் கூறுகிறபடியால் மனது ஸ்ருஷ்டி, வியர்வை ஸ்ருஷ்டி, அண்டஸ்ருஷ்டி முதலியவை நாராயணனிடமிருந்தே உண்டாயின என்பது தெளிவு.

மேலும், சக்ஷுஸெ ஸர்வ லோகா நாம் ஜெனார்த்தனா என்று வேதம் உரைக்கின்றபடியால், ஸகல புவனங்களயும் பார்வையாலேயே ரக்ஷிப்பவர் என்றும், ஸூபால உபநிஷத்தில் பீஜப்ரஹ்மம் என்று கூறப்பட்டிருப்பதால் ஸகல சேதநா அசேதநங்களுக்கும் பிரம்மமே பீஜம் (விதை) என்றும் ஏற்படுகிறது. இதையே பகவத்கீதையிலும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவானவர் ஸகல புவனங்களும் தோற்றுவிக்கப்படும் இடமாகவும் முடிவில் ஒடுங்குமிடமாகவும் ஸகல பூதங்களுக்கெல்லாம் ஆதிகாரண வஸ்து ஆகி, இவற்றிற்கெல்லாம் மூல பிரகிருதியாகிய அழியாத்தன்மை கொண்ட விதை நானே என்றும் என்னுடைய க்ஷேத்ரம் மஹத்தான பிரகிருதி அதில் நான் கர்ப்பாதாரணம் போன்ற விதையை விதைக்கிறேன். அதனால், ஸகல பூதங்களும் உண்டாகின்றன. ஸகல ஜீவராசிகளின் தனித்தனியாக யோனிகளில் எந்தெந்த உருவங்கள் உண்டாகின்றனவோ அவைகளுக்கெல்லாம் மஹாபிரகிருதியே தாய். நான் விதையை விதைக்கும் தந்தை ஆவேன் என்று உரைப்பதாலும், ஹிரண்ய கர்ப்போ, பூகர்ப்போ, மாதவோ, மதுசூதன என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியில் பொன்மயமான அண்டத்தையும், ஸகல புவனங்களையும் தாயானவள் தனது கர்ப்பத்தில் சிசுவை வைத்து ரக்ஷிப்பது போல் எம்பெருமான் ரக்ஷிப்பதாக உரைப்பதாலும், பார்வை சிருஷ்டி, கர்ப்ப ஸ்ருஷ்டி போன்றவையும் நாராயணனாலேயே தோற்றுவிக்கப்படுகின்றன என்பது புலனாகிறது.

வேதங்களின் பிரிவாய் தோன்றியவை உபநிஷத்துகளாகும். உபநிஷத்துகளுக்கு பிறகு பாமரரும் உணரும்படியாய் அமையுமாறு இயற்றப்பட்டவை புராணங்களும் இதிகாஸங்களும். மிகப்பிற்பட்ட காலத்தில் தோன்றியவை ஸ்தல வரலாறுகள். ஆகவே, வேதங்களுக்கு முரண்பட்ட கருத்துக்களை உபநிஷத்துகளோ, இதிஹாஸங்களோ, புராணங்களோ, ஸ்தல வரலாறுகளோ உரைக்குமானால் அவற்றை ஒதுக்கிவிட்டு வேதத்தையே பிரமாணமாகக்கொண்டு பகவானையும் மற்றுமுள்ள அனைத்து விஷயங்களையும் நிர்ணையிக்க வேண்டும் என்று மனுநீதி சாஸ்திரம் கூறுகிறது.

சங்க காலத்து தமிழர் சமயமும் நாராயணன் திருமால் (ஆத்மாக்களை கவர்பவன்) என்றும், பெருமாள் (இவரிடத்து எல்லா பொருள்களும் அடங்கி இருப்பதாலும் இவர் எல்லா பொருள்களிலும் வசிப்பதாயுமுள்ள பெரிய ஆள் - பரப்ரஹ்மம்) என்றும், கண்ணன் (அனைத்தையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருப்பதாலும் அனைத்திற்கும் சாக்ஷியாய் இருப்பதாலும்) என்றும் போற்றி பறைசாற்றுகிறது.

ஒரு விசேஷமான நிலையில் நாராயணனது சரீரமாய் அனைத்தும் விளங்குகின்றன என்பதே எம்பெருமானார் ஸ்ரீராமானுஜர் அவர்களின் விசிஷ்டாத்வைத தத்துவமாகும். இவ்வாறு ஸரீரமாய் விளங்கும் இந்த காரிய பிரபஞ்சமானது ஸத்வம் ரஜஸ் தமோ குணமென மூன்று பிரிவாக பிரிந்து உள்ளபடியால் மனுஷ்யர்களும் லோகோ பின்ன ருசி (மனிதர்கள் ருசியால் வேறுபடுகிறார்கள்) என்ற கொள்கைப்படி நிறம், இனம், மொழி, அறிவு, குணம், மதம் முதலியவற்றால் நாம் அனைவரும் வேறுபடுகிறோம். இருப்பினும், பகவானிட்ட வழக்காக அவரவர் தத்தமது கடமைகளை செவ்வனே செய்து கொண்டு ஆத்மா முன்னேற்றத்திற்கான வழி வகைகளை தேடுவதிலும் பகவானிடத்து பக்தி செலுத்துவதிலும் அனைவரும் ஒன்று படலாம் என்பதை ஆழ்வார்கள் வலியுறுத்துகின்றனர்.

பகவத்கீதையிலும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவானவர் "என்னை விட உயர்ந்த தெய்வம் எதுவுமில்லை; எனக்கு சமமானவரும் இல்லை; என்னை முழுமையாக அறிந்தவரும் யாரும் இல்லை" என்று கூறியும், "கடமையச்செய், பலனில் பற்றுவைக்காதே, என்னையே சரணடைவாயாக, இகபரசுகங்களுடன் அறம், பொருள், இன்பம், வீடு, பேறு (மோக்ஷம்) ஆகிய நான்கு புருஷார்த்தங்களும் கிட்டும்" என்றும் உரைக்கிறார். பல மந்திரங்களாலும், விரதங்களாலும் கிடைக்கும் பலனைக்காட்டிலும் எம்பெருமானுக்குரிய அஷ்டாக்ஷர மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்னும் தாரக மந்திரத்தை தியானத்தின் மூலமாகவும் ஜபத்தின் மூலமாகவும் மனதிற்குள் எம்பெருமானது திருமேனியை மனதில் நிலைநிறுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும். மந்திரம் என்பது மனனம் செய்பவனை (ஜபிப்பவனை) காப்பாற்றி இகபரசுகங்களை அளித்து பிறப்பற்ற தன்மையாகிய மோக்ஷத்தை அளிக்கவல்லது. நாராயணநாம ஜபம் நம் உள்ளத்தில் ஆன்மீகமயமான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஹ்ருதய கமலத்திலிருந்து ஆத்மீக ஒளியை கிளப்பி ஸுஷும்நா நாடி மூலமாக ஏழு ஆதாரங்களுள் ஆறாவது ஆதாரமாகிய புருவமத்தியில் எம்பெருமானின் திவ்ய திருமேனியை நிலைநிறுத்தி பழக்கவேண்டும். இவ்வுலகில் நாம் எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை விரும்பியவாறே சாதிக்கும் வல்லமை பெறலாம். ஏனெனில், நாம் அனைவரும் பகவானின் ஒரு துளி அம்ஸமான ஆத்ம ஒளியை பெற்றுள்ளோம்.

மொத்தத்தில் சுருக்கமாய் உரைப்பதாயின், "அனைத்தும் நாராயணனே அனைத்திலும் நாராயணனே; நடப்பதெல்லாம் நாராயணன் செயல்" என்பது சாலச்சிறந்தது.

தானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யானென் பானாகி .... ... (நா.தி.பி 3958)
தானே உலகெலாம் தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே ... (நா.தி.பி 3937)

என்று திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமாக ஆழ்வார்கள் "நாராயணனே பரம்பொருள்" என்று ஸத்யாமாக தெளிவுபடக் கூறியுள்ளனர்.

பரித்ராணாய ஸாதூ4னாம் விநாசாய சதுஷ்க்ருதாம் !
4ர்ம ஸம்ஸ்தாபனார்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3 !

(பரதநாட்டு மைந்தனே ! எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் துஷ்டர்களை அழித்து ஸாதுக்களை காப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகயுகந்தோறும் என்னை நானே ஸிருஷ்டித்துக் கொண்டு விசேஷமாக பிறக்கிறேன். எனது பிறப்பின் ரஹஸ்யத்தை ஞானிகள் அறிவார்கள்) 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.