ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 13 - 24

13. எல்லாவற்றையும் அறிவதால் ஞாதாவாகவும், ஞானஸ்வரூபமாக இருப்பதால் ஞானமென்றும், ஞானிகளால் "நேயம்" என்றும் சொல்லப்படுபவராயும், மேலான உபாயமும், எல்லாவற்றிற்கும் ஆதாரமாயும் பாற்கடலில் பள்ளிகொண்ட பரமனாய், நித்யஸூரிகளுக்கு நாதனாயும், அவர்களால் வணங்கப்படுபவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

14. எப்படிப்பட்ட ஸ்வரூபத்தை உடையவராகவும், எந்த ஐஸ்வர்யத்தை உடையவராகவும், எந்த அளவை உடையவராகவும், எந்த திரவியத்தை உடையவராகவும், எப்படிப்பட்ட உயரிய எண்ணங்களை உடையவராகவும், எல்லையற்ற தயை உடையவராகவும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் கல்பிக்கப்படுகிறாரோ அவர் அப்படியே அருள் பாவிக்கும் தன்மை உடையவராகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.
(எவரெவர்கள் எந்ததெந்த வடிவில் என்னை வணங்குகிறார்களோ அவர் அவர்களுக்கு அந்தந்த வடிவில் நின்று நானே அருள்பாவிக்கிறேன் - பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மர்)

15. நல்லெண்ணத்தை உடையவராயும், பிரீதியை உடையவராயும், அம்ருதம் போன்ற பார்வையினாலும், பேச்சினாலும், உலகையெல்லாம் காப்பாற்றுபவராயும், பாற்கடலில் மோன நிலையில் ஜகத்ரக்ஷண சிந்தனை செய்பவராயும், தனது விஸ்வரூபத்தால் உலகங்களை தாங்குபவராயும் உலகில் அதர்மம் மேலோங்கும் போது தர்மத்தை நிலைநிறுத்தவும் பக்தர்களை ரக்ஷிப்பதற்காகவும் தன்னைத்தானே சிருஷ்டித்துக் கொண்டு யுகயுகந்தோறும் அவதாரம் எடுப்பவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

16. அழகிய சிறகுகளை உடைய பக்ஷிகள் இரண்டு ஸமான அந்தஸ்து உடையவை. ஸமானமாக ஒரே விருக்ஷத்தை வாசஸ்தானமாக உடையவை. அவற்றுள் ஒன்று பழத்தை ருசிக்கிறது. மற்றதோவெனில் அதை உண்ணாமல் பிரகாசிக்கிறது (மற்றொன்று சாக்ஷியாகிறது) (பக்ஷிகள் ஜீவாத்மாவும், பரமாத்மாவும்; பழம் கர்மத்தால் உண்டாகும் இன்பதுன்பங்கள்). பக்ஷிகள் ஸமானமாக ஒரே விருக்ஷத்தை உடையதாயினும் ஒன்று தாழ்ந்த நிலையை அடைந்து மோஹித்து நிற்கிறது. அது (ஜீவாத்மா) எப்போது தன்னைவிட மேலானதை பார்க்கிறதோ, அப்போது அது தன்னுடைய மஹிமையை உணர்ந்து சோகமற்றதாய் ஆகிறது. இத்தகைய மஹிமை வாய்ந்த பரமாத்மாவாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

17. ஸர்வ வியாபியும், விகாரமற்றவராயும், பரப்ரஹ்மமாகவும் புருஷன் என்ற பெயரை உடையவராகவும் நீலமேகம் போன்றவர்ணமும் மஞ்சளும் கலந்த வர்ணத்தை உடையவராகவும், உயர்ந்த வீர்யத்தை உடையவராகவும் மாறுபட்ட குணங்களை உடைய கண்களை உடையவராயும், உலகையெல்லாம் உருவமாகக் கொண்டுமிருக்கும் பரமாத்மாவாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.
(ருதகும் ஸத்யம் ................ விஸ்வரூபாயவை நமோ நம) --- நாராயணஸூக்தம்

18. அனைத்து பாபங்களையும் நீக்குபவராயும், சத்ருக்களை அழியச்செய்பவராயும், ஆனந்தத்தை அடைவிப்பவராயும், ஆனந்தமயமானவரும், அழகடையச் செய்பவராயும், அழகியவரும், ஸகல மங்களத்தை உடையவராகவும், திருமேனியுடன் கூடிய நிலையான ஜோதியாகவும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

19. தன் மஹிமையினாலும், ஸ்வரூபத்தாலும், ஞானசக்தியாதி குணங்களினால் எங்கும் சென்று நிற்பவராயும், ப்ரளயகாலத்தில் ஒருவராய் இருக்கும் யார் ஒருவர் இவையெல்லாமாய் விளங்குகிறாரோ, யாரிடமிருந்து இவையெல்லாம் உண்டாயினவோ, யார் இவ்வுலகையெல்லாம் ரக்ஷிக்கிறாரோ, யாரை இவ்வுலகம் ப்ரளய காலத்தில் அடைகிறதோ, எல்லா இடத்திலும் முகத்தையுடைய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

20. எல்லாவற்றுக்கும் ஆதாரமாயிருப்பவரும், எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டிருப்பவரும், ஸத் எனப்படும் ஜீவதத்வத்திற்கும், அஸத் எனப்படும் அசேதந தத்வத்திற்கும் அந்தர்யாமியாய் இருப்பவரும் உருவமுள்ளவையான அசேதநர்களுக்கும், உருவமற்றவையான சேதநர்களுக்கும் வேறுபட்டிருப்பவரும், அஞ்ஞானத்திற்கு காரணமான கர்மஸம்பந்தத்தை நீக்குபவரும், அந்த கர்மஸம்பந்தத்திற்கும் காரணமான ப்ரகிருதி ஸம்பந்தத்தையும் நீக்குபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

21. எவரைக்காட்டிலும் மேலானது வேறு ஒன்றுமில்லையோ, எவரைக்காட்டிலும் ஸூக்ஷ்மமானவரும், பெரியவரும், வேறொருவரும் இல்லையோ, யாருக்கும் வணங்காத மஹாவிருக்ஷம் போல் பரமபதத்தில் யாரொருவர் எழுந்தருளி அருள்பாவிக்கிறாரோ, அந்த புருஷனால் இந்த பிரபஞ்சம் எல்லாம் நிறைந்துள்ளது. ரதச்சக்கரத்தின் மத்தியில் ஆரங்கள் இணைக்கப்பட்டிருப்பது போல் ப்ராணன் முதலிய கலைகள் எந்த புருஷோத்தமனிடம் நிலை நிற்கின்றனவோ அறியத்தக்கவரான அந்த புருஷனாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

22. யாருக்கு பூமி திருவடிகளாகவும், ஆகாசம் நாபியாகவும் வாயுவே ப்ராணனாகவும், சந்திர சூர்யர்கள் கண்களாகவும், திசைகள் செவிகளாகவும், தேவலோகம் தலையாகவும், அக்னி முகமாகவும், கடல் வயிறாகவும், யாருக்கு உள்ளிருக்கும் உலகமானது தேவர்கள், மனிதர்கள், பக்ஷிகள், பிராணிகள், கந்தர்வர்கள், அஸுரர்கள் ஆகியவர்களால் விளங்குகின்றதோ மூவுலகையும் உடலாகக் கொண்டவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

23. பூர்ணமாயிருப்பதாலும், பூர்வத்திலிருந்து (ஸ்ருஷ்டிக்கு முன் ஆரம்பத்திலிருந்து) இருப்பதாலும் தன்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பஞ்சபூதங்களால் ஒளியுள்ள இவ்வண்டத்தை நிர்மாணம் செய்து, அதில் நான்கு வித சேதநர்களாகிய தேவ, மனுஷ்ய, விலங்கு, தாவர ரூபங்களையும் ஸ்ருஷ்டித்து தன்னுடைய சக்தியால் அவற்றை வியாபித்து விளங்குவதாலும், ஸம்பூர்ணமான ஐஸ்வர்யம், கீர்த்தி, வீர்யம், செல்வம், ஞானம், வைராக்யம் என்னும் ஆறு குணங்களும் உடைத்தாயிருப்பதாலும் "புருஷன்" எனப்படுபவராகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

24. பழமையானவரும், உலகை நியமிப்பவராயும், அணுவாகிய ஜீவனைக் காட்டிலும் ஸூக்ஷ்மமாய் உள்ளவரும் அணுவிற்குள் அணுவாய் இருப்பவரும் எப்போதும் இருப்பதால் ஸத்யம் எனப்போற்றப்படுபவரும் ஸர்வ வியாபியாய் இருந்த போதிலும் ஷட்குண பூர்ணனாயிருக்கையால் வியாபிக்கப்படும் பொருள்களின் தோஷங்கள் ஒட்டாமல் பரிசுத்தமாயிருப்பவரும், கால தேச வர்த்தமானம் எனப்படும் மூன்று விதமான அளவுமற்றிருப்பதால் "அநந்தன்" எனப்போற்றப்படுபவராகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம். 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.