ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 1 - 12

1. ஓம் ஸர்வ வல்லமை பொருந்தியவரும் எங்கும் வியாபித்து அருள் பாவிப்பவராயும், மாறுபாடற்றவராயும், பரிசுத்தமானவராயும், அழிவற்றவராயும், ஸ்திரமானவராயும், என்றும் ஒரே வடிவினராயும், அனைத்தையும் வெல்பவராயும் விளங்கும் பரமாத்மாவாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

2. ஓம் பிரம்மம். அது பூர்ணம். உலகு இதுவும் பூர்ணம். பூர்ணத்திடமிருந்து பூர்ணமே தோன்றியுள்ளது. பூர்ணத்திடமிருந்து பூர்ணத்தை எடுத்தும் எஞ்சியிருப்பதும் பூர்ணமாயுள்ளது. ஆகவே, இது எல்லாம் பூர்ணம். இவ்வாறு பூர்ணமாயுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.
(குறிப்பு: - இவ்வாறு பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மஞானியாகின்றான். அவனுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும்)

3. மேல் கீழ் நடு முதலான அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமான பகவான் நமது ஹ்ருதய ஆகாசத்தில் அந்தர்யாமியாய் எழுந்தருளி உள்ளார். (பரமாத்மாவிற்கு சரீரமாய் விளங்கும் ஆத்மரூபமாய்) அந்த பரமாத்மாவை நற்காரியங்களை இயக்குவதின் பொருட்டு தியானிப்போமாக ! என்ற காயத்ரி மந்திரத்தை விஸ்வாமித்திரர் ரிஷிமூலம் உலகிற்கு உபதேசித்தருளிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

4. ஸகல புவனங்களையும் கர்ப்பமாக தரிப்பவரும், ஸ்ருஷ்டியை விதிப்பவரும், உண்டாக்குகிறவரும், மாறுதலடையச்செய்பவரும் ஆதியும் அந்தமும் அற்றவராயும், உலகத்தையும் (காண்பதற்கு காரணமாயுள்ள மேலே உள்ள வித்யாஸ்தானத்திலிருந்து) பார்த்துக் கொண்டிருப்பவரும், இவரிடத்து எல்லாப் பொருள்களும் அடங்கி இருப்பதாலும், இவர் எல்லாப்பொருள்களிலும் வசிப்பதாலும் "வாஸுதேவர்" என போற்றப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்

5. ஜகத்காரணனாய், திவ்யதிருமங்களமேனியை உடையவனாய், ஸகல கல்யாண குணபூர்ணனாய், தேவாதி தேவனாய், ப்ரஹ்மானந்தம் உடையவராய், ஆகாசத்தைப் போன்று எங்கும் வியாபித்திருப்பவராய், ஆயிரங்கோடி ஸூர்யர்களை ஒத்த பிரகாசத்தை உடையவராய், உலகிற்கெல்லாம் கண்ணாயிருப்பவராயும் உள்ள பரமபதநாதனாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

6. எந்த ஜகத்தானது முன் கல்பத்தில் இருந்ததோ, எந்த ஜகத்தானது இனி வரும் கல்பத்தில் உண்டாக போகிறதோ, எந்த ஜகத்தானது இந்த கல்பத்தில் உள்ளதோ, எந்த ஜகத்தானது இந்திரியங்களால் அனுபவிக்கப்படும் விஷயங்களினால் மறையாமல் உள்ளதோ, ஆயிரம் யுகங்களைக்கொண்ட சஞ்சாரத்தை உடையதாய் உள்ளதோ, இந்த ஸமஸ்தானமான ஜகத்துடன் மோக்ஷத்திற்கு பிரபுவும், "நாராயணன்" எனப்போற்றப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

7. யார் இந்த பூமியை தாங்குகிறாரோ, யார் இந்த பூமியின் உள்நுழைந்து இயக்குகிறாரோ, யார் இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உள்ளும் புறமும் வியாபித்து நின்று அருள்பாவிக்கிறாரோ, யாருக்கு இந்த பூமி ஸரீரமோ, யாரை இந்த பூமி அறியாதோ, அவரை தியானத்தின் மூலம் அறிவாயாக என்று வால்மீகி மஹரிஷியின் மூலமாக ராமாவதாரத்தில் போற்றப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

8. ஆகாஸம், காற்று, அக்னி, நீர், பூமி எனப்படும் ஐந்து பூதங்களும் இவற்றால் உணரப்படும் ஸப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்த தன்மாத்திரைகளாகிய ஐந்து தன் மாத்திரைகளும் (ஒலி, தொடு உணர்வு, வடிவம், சுவை, வாசனை என்ற ஐந்து உணர்வுகளும்) இவற்றை செயல்படுத்தக்கூடிய வாய், கை, கால், வயிறு, விஸர்ஜன இந்திரியங்களாகிய ஐந்து கர்ம இந்திரியங்களும், இவற்றை அறியக்கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐந்து ஞான இந்திரியங்களும், அந்தக்கரணங்களாகிய ஆத்மா, மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் எனப்படும் 25 வகை தத்துவங்களால் ஆன இந்த பிரபஞ்சத்திற்கும், இதன் பிரதிபலிப்பான 25 வகை தத்துவங்களால் ஆன நமது ஸரீரமும், இவற்றிற்கு அப்பாற்பட்டு 26-வது தத்வமாய் விளங்கும் பரமாத்மாவான மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

9. ப்ரகிருதி மண்டலத்திற்கு மேற்பட்டவரும், மூல ப்ரகிருதியை ஸரீரமாக கொண்டிருப்பவரும், ஒளிமயமானவரும், எல்லா சரீரங்களையும் தோற்றுவித்து, அவைகளுக்கும் பெயர்களை கொடுத்து, அவைகளை உச்சரித்து கொண்டிருப்பவரும், விகாரமற்றவரும், ஸூரியன் போன்ற வர்ணத்தை உடையவரும், ஸூர்யமண்டலத்தில் உறைபவரும் எல்லாவிதத்திலும் பெரியவருமாகிய "புருஷன்" எனப்படும் மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

10. இந்திரியங்களைவிட அவைகளுக்கு காரணமாக உள்ள ஸூக்ஷ்ம பூதங்கள் மேலானவை. அவற்றை விட மனது மேலானது. மனதை விட புத்தி மேலானது. புத்தியை விட மேலானது ஸூத்ராத்மா; ஸூத்ராத்மாவை விட மேலானது மூலப்ரகிருதி. மூலப்ரகிருதியை விட மேலானவர் "புருஷன்". புருஷனை விட மேலானது வேறொன்றுமில்லை. இதுவே உன்னதமான நிலை. இத்தகைய உன்னதமான நிலையாகிய வீடு பேற்றை (மோக்ஷ சுகத்தை) பரமபதத்திலிருந்து அருள்பாவிக்கும் மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

11. ஸ்ருஷ்டிக்குரிய பிரம்மனாலும், ஸம்ஹாரத்திற்குரிய ருத்ரனாலும் மற்ற தேவாதி தேவர்களாலும் தியானிக்கப்படுபவராயும் தன் மஹிமையினால் எல்லா உலகங்களையும், தேவர்களையும், ஆத்மாக்களையும், பூதங்களையும் ஒளிவிடச்செய்பவராயும், பிரகாசிப்பவராயும், பிரகாசப்படுத்துபவராயும், ப்ரஹ்ம அண்டத்தை உருவாக்கியவரும், அநேக கோடி பிரஹ்ம அண்டங்களை தனது மூலப்பிரகிருதியில் தாங்கிக் கொண்டிருப்பவரையும், "ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்" எனப் போற்றப்படுபவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

12. எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவரும், நித்யமானவரும், எல்லாமா யிருப்பவரும், ஆத்மாக்களுக்கு ஸ்வாமியாக பரமாத்மாவாகவும், ஜனன, மரணமற்றவரும், மங்களகரமானவரும், தன்னை அடைந்தவர்களை நழுவவிடாதவரும், முக்யமாக அறியத்தக்கவருமாகிய உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம். 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.