ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 25 - 36

25. ஆயிரக்கணக்கான உருவங்களை உடையவரும் ஆயிரக்கணக்கான கால்கள், கண்கள், தலை, தொடைகள், கைகள் ஆகியவைகளை உடையவரும் ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவரும் ஆயிரக்கணக்கான ப்ரஹ்ம அண்டங்களை தோற்றுவிக்கக்கூடிய மூலப்பிரகிருதியாகிய ப்ரஹ்மவித்துக்களை ஸரீரமாக உடையவராயும், புருஷஸப்தத்தினால் வேதங்களில் சொல்லப்படுபவராயும் சாஸ்வதமாயிருப்பவரும், ஆயிரங்கோடி யுகங்களை தரிப்பவருமாகிய அனந்தன் எனப்போற்றப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

26. யாரொருவர் தன் பக்தர்களுக்கு தன்னையும் கொடுத்து, தன்னை அனுபவிக்கத்தகுந்த பலத்தையும் அளிக்கிறாரோ, யாருடைய அருளை அனைவரும் விரும்புகிறார்களோ, தேவர்களும் யாருக்கு தாஸபூதர்களோ (ஸம்சாரமும்) யமனும் யாருக்கு வசப்பட்டு உள்ளாரோ, யாரிடத்திலிருந்து ஜீவராசிகள் உண்டாகின்றனவோ, உண்டானவை யாரால் வாழ்கின்றனவோ, யாரை மோக்ஷத்திலும் ப்ரளய காலத்திலும் அடைகின்றனவோ, அத்தகைய பெருமையை உடைய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

27. காரண புருஷனும், லோகஸ்வாமியும், பிரஜாபதியும், சூரியனையும் பிரகாசப்படுத்துபவராயும், ப்ரகிருதி மண்டலத்திற்கு அப்பாற்பட்டு விளங்குபவராயும், பூமியையும் ஆகாசத்தையும் வியாபித்து தன்சக்தியாலே அவற்றை சுற்றிலும் தரித்து நிற்பவராயும் ஜீவாத்மா ஸமூஹத்தை தன்னுள் கொண்டிருக்கையாலே "ஹிரண்யகர்ப்பன்" எனப்போற்றப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

28. யாரிடம் பிரளய காலத்தில் எல்லாம் ஒடுங்குகின்றனவோ, யாரிடமிருந்து இவை மீண்டும் ஸ்ருஷ்டி காலத்தில் வெளிவருகின்றனவோ, யார் எல்லாமும் ஆகின்றாரோ, எல்லாவற்றினின்றும் யார் பிரகாசிக்கிறரோ, அவரே முன்னிருந்த வஸ்துக்களாகவும், இனி வரப்போகும் பொருள்களாகவும் யாரிடமிருந்து எல்லா தேவதைகளும் ஒரே சமயத்தில் தோன்றினார்களோ அத்தகைய "பகவான்" எனப்போற்றப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

29. ஸத்யமாகவும், ருதமாகவும் (ப்ரகிருதி மண்டலத்தை ஒழுங்கான பாதையில் கொண்டு செல்பவராகவும்), பவித்ரமாகவும், புண்யமாகவும், சாஸ்வதமாகவும், பரப்ரஹ்மமாகவும், எல்லாவற்றையும் நியமிப்பவராகவும், கர்மபந்தமற்றவராகவும், மஹிமை பொருந்தியவராகவும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

30. ஹ்ருதயத்தின் நடுவில் இருப்பவராயும், வெளியில் உள்ள சூரிய மண்டலத்தின் நடுவிலும், புகையற்ற அக்னி மண்டலத்தின் நடுவிலும், சுத்தஸத்வ மூல பிரகிருதியின் திருமேனியை உடையவராயும், ஸத்யமான தர்மத்தை உடையவராயும், ஸ்தூல ஸூக்ஷ்ம பிரபஞ்சமாயும் விரிந்துள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

31. பரிசுத்தமான மனத்தினால் கிரஹிக்கத்தக்கவரும், வீணாகாத ஸங்கல்பத்தை உடையவரும், ஸர்வகர்மங்களால் ஆராதிக்கப்படுபவரும், எல்லாகந்தங்களையும் ரஸங்களையும் தன்னுள் கொண்டிருப்பவரும், தனது அகடிதகடினா சாமர்த்தியத்தினாலே தன்னால் வெளியே சூழப்படாத ஒன்றும் இல்லை; தன்னால் உள்ளே வியாபிக்கப்படாததும் ஒன்றும் இல்லை என்ற கீர்த்தியை உடையவராகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

32. ரதச்சக்கரத்தின் நாபியிலும் நேமியிலும் (வெளி வளையத்திலும்) ஆரங்கள் எவ்வாறு கோர்க்கப்பட்டிருக்கின்றனவோ, அவ்வாறே இந்த பரமாத்மாவிடமும் எல்லா பிராணன்களும், எல்லா லோகங்களும், எல்லா தேவர்களும், எல்லா பூதங்களும், எல்லா ரஸங்களும், எல்லா ஆத்மாக்களும் கோர்க்கப்பட்டிருக்கின்றன என்று உபநிஷத்துகளில் பெருமைபடக்கூறப்பட்டுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

33. யாகமேடையில் அக்னி வியாபித்திருப்பதைப் போன்று பகவான் ஜீவாத்மாவின் வெளியில் வியாபித்திருப்பவராயும், தன்னை விட மேலானது இல்லாதவராயும், தன்னைக்காட்டிலும் சிறியதாகவும் வேறொன்றுமில்லாதவராயும், தன்னைக்காட்டிலும் பெரியதாகவும் வேறொன்றுமில்லாதவராயும், விருக்ஷம் (மரம்) போல் வணங்காதவராயும், பரமபதத்திலிருக்கும் புருஷனாலேயே இவையெல்லாம் வியாபிக்கப்பட்டு விளங்குவதாகவும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

34. ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், காரண ப்ரகிருதியில் ஒன்றாய் சூட்சுமமுமாய், அவ்யக்தமுமான ரூபத்தையும், காரிய பிரபஞ்சத்தில் அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான (வெளிப்பட்ட) ரூபத்தையும் உடையவராகி அனாதியான ப்ரகிருதி வாசனையாலே, கட்டுப்பட்ட சேதனங்களுக்குகெல்லாம் மோக்ஷ காரணமான மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

35. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய் நிமிஷம், நாளிகை, மேஷ சூர்யகமனாதி சகலயதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது ஸ்ரீரமாக உடையவராகவும், அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும், பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் அதிசூக்ஷ்மத்திற்கும் சூக்ஷ்மமான ரூபமாய், ஷட்குணபூர்ணனாயிருக்கையால் வியாபிக்கப்படும் பொருள்களின் தோஷங்கள் ஒட்டாமல் பரிசுத்தமாயிருப்பவராயும் கல்யாணகுணங்களால் "புருஷோத்தமன்" என்று வழங்கப்படுபவருமான எம்பெருமானாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

36. தன்னைவிட உயர்ந்தோர் இல்லாதவருமாயும், சேதன அசேதனங்களுக்கெல்லாம் தானே ஆதரமாயும், தனக்கு வேறு எதுவும் ஆதாரமில்லாதவராயும், தன்னிடத்திலே தானிருப்பவராயும், ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாம் தன்னால் விளங்கும்படி பிரகாசிப்பவராயும், பிரதானம் என்கிற பிரகிருதியும், புருஷன் என்கிற ஆத்மாவும் உண்டாகி, படைப்பிற்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய், அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டுள்ளதோ அது அவருக்கு காலம் என்கிற பெயரை உடைய ஒரு சொரூபமாயுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம். 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.