ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 37 - 48

37. அனைத்திற்கும் மூலமாய், ஸதஸத்துகளுக்கு மேற்பட்டதாய், ஆதி, மத்ய, அந்தரம் சஹிதமாய், அசையாததாய், நிலைநிற்பதாய், யோகேஸ்வரனாய், ஜகத்பதியாய், ஜயசாலியாய், பரமஸூக்ஷ்மமானவராய், பரமவிசித்ரனானவராய் மாயக்கலையில் மன்னவராய் விளங்கும் மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

38. மூலப்ரகிருதியை உண்டாக்கியவரும், ஸமஷ்டிரூபமான க்ஷேத்ரஞ்னை உண்டாக்கியவரும் சராசரத் மகமான ஸகல பிரபஞ்சத்தையும் ஜனிக்கச் செய்பவரும் சகல துக்கங்களுக்கு இருப்பிடமான சம்சார ஸாகரத்தை கடக்கச் செய்பவரும், சகல பிரபஞ்சமும் ஸர்வாத்மாவான தனது ஸ்வரூபமாயுள்ளவரும், கர்த்தாவும், வளர்ப்பவரும், சங்கரிப்பவரும், உலகநாதனும், எல்லோருடைய இதயத்திலிருப்பவரும், எல்லாவற்றையும் அனுபவிப்பவரும், அனுபவிக்கப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

39. பரமநிலையில் எப்பொழுதும் இயல்புடைய திவ்ய மங்கள விக்ரகம் உடையவராயும், ஏனைய நிலையில் படைக்கும் போது பிரம்மரூபமாகி உலகங்களை படைத்துக்கொண்டும், தனது விஸ்வரூபமாகி ரக்ஷித்துக்கொண்டும், கல்ப அந்தத்திலே ருத்ரரூபமாகி ஸங்கரித்துக்கொண்டும், தடைகளை அகற்றுவதில் கணபதியாகவும், சுகபோகங்களை அனுபவிப்பதில் இந்திராதி தேவர்களாகவும், படைத்தளபதிகளில் சுப்ரமண்யராகவும், இக பரசுகங்களை அளிக்கும் மற்ற தேவதைகளாகவும் உருக்கொண்டு அவர்களுக்கு அந்தர்யாமியாய் இருந்து தானே அருள்பாவிப்பவராயுமுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

40. ஓம்காரவாச்யனாகவும், அக்ஷர்ம் என்ற பெயரை உடையவராகவும், பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் கோர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் உள்ளதோ, அவரே உண்டாக்கிய உயிர்கள் அனைத்திற்கும் ஸூக்ஷ்மமானவர் (ஸூத்ராத்மா) அத்தகைய ஸூத்ராத்மாவான பகவான் சித்தத்தால் அறியக்கூடியவராயும், தியானத்தால் அறியக்கூடிய பரிபூர்ணராயும், பரிசுத்தமான உள்ளத்தில் தானே பிரகாசிப்பவருமாக உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

41. பிரபஞ்சங்களுக்கெல்லாம் மேற்பட்டவராயும் ஸகல கல்யாண குணங்களுக்கு ஆதாரமானவரும், பிராகிருத குணமற்றவரும், வியக்தம் எனப்படும் வெளிப்பாடு உடைய தன்மையும், அவ்யக்தம் எனப்படும் வெளிப்பாடில்லா தன்மையை உடையவராயும், மஹாமூர்த்தியான விஸ்வரூபமும், சூக்ஷ்ம மூர்த்தியான வியூகரூபமும், வெளிப்படையாகத் தோன்றும் விபவரூபமும், அப்படி தோன்றாத பரஸ்வரூபமும், சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும், சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவராகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

42. உலகத்தோடு ஒட்டாதவரும், பிரகிருதி குணரஹிதமான க்ஷேத்ரக்ஞனே கௌஸ்துப மணியாகவும், ஜகதாதி காரணமான மூலப்ரகிருதியே ஸ்ரீ வத்ஸம் என்ற மருவாகவும், புத்தியே கௌமேதகி என்ற கதாயுதமாகவும், தாமஸ அஹங்காரமே பாஞ்ச சன்னியம் என்ற சங்காகவும், சாத்வீக அஹங்காரமே சாரங்கம் என்ற வில்லாகவும், சலனாத் மகமான மனமே மஹாவேகத்தில் வாயுவையும் மிஞ்சக்கூடிய சுதர்ஸனம் என்ற சக்கரமாகவும், பஞ்சமஹா பூதங்களும், முத்து, மாணிக்க, மரகத, இந்திர, நீல வஜ்ரமாய் உடைய பஞ்சவர்ணமயமான வைஜயந்தி என்ற வனமாலையாகவும், ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் அம்புகளாகவும், வித்தையே அத்யந்த நிர்மலமான கத்தியாகவும், அவித்தையே அந்தக் கத்தியின் உறையாகவும் பிரகிருதி புருஷர்களையெல்லாம் இவ்வாறு அஸ்திபூஷண சொரூபமாக தரித்துக் கொண்டு விசித்ர சக்தியுக்தனாகி சேதனருக்கெல்லாம் அருள் பாவித்து நன்மை செய்து கொண்டிருப்பவருமாகிய ஸ்ரீமந் நாராயணனாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

43. காஷ்டை, கலா, முஹூர்த்த, அஹோராத்ர, மாஸ, அயன, ஸம்வத்ஸரமான காலஸ்வரூபமும், தேவ, மனுஷ்ய, பசு, பக்ஷியாதி உயிர்வகைகளும், ஈரேழு 14 லோகங்களும், ருக், யஜுர், சாம, அதர்வணம் என்கிற வேதங்களும், உபநிஷத்துகளும், இதிஹாஸங்களும், வேத அங்கங்களும், மனுவாதிஸ்மிருதிகளும், கல்ப சூத்திரங்களும், காவியங்களும், கீதங்களும் மற்றும் உண்டான இதர சாஸ்திரவகையும் மூர்த்தங்களாயும், அமூர்த்தங்களாயும் இருக்கும் பதார்த்தங்களும் வித்தையும், அவித்தையும், சேதனமும், அசேதனமும், இவ்வாறு ஸகலமும் ஆகி இவற்றிற்கெல்லாம் ஆத்மபூதனாய் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

44. வேதத்தின் காரண வாக்யங்களின்படி எங்கிருந்து இந்த உலகமெல்லாம் உண்டாகுமோ, எங்கே நிலை பெற்றிருக்குமோ, எங்கே லயத்தை அடையுமோ, எதனால் வியாபிக்கப்பட்டிருக்குமோ, ஸத்து, அஸத்துகளெல்லாம் யாரால் உண்டாயினவோ, அவ்யக்தமான மூலப்ரகிருதிக்கு ஸரீரகனுமாயும், வ்யக்தமான லோக ஸரீரகனாகவும், உலகங்கள் யாவற்றிலும் வித்யாசமின்றி அந்தர்யாமியாய் வியாபித்தவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

45. தன்னைப்பெறுவதற்கு சாதனமான யாகாதிகளுக்கு கர்த்தாவாகவும், உத்தேச தேவதையாகவும், கிரியாஸ்வரூபியாகவும், அதன் பயனாகவும், அந்த கிரியைகளின் உபகாரணங்களான ஸ்வரூபம் முதலியனவாகவும், வளர்ச்சியும் தேய்வும் இல்லாதவரும், சமஷ்டி, வியஷ்டி என்று சொல்லப்பட்ட அவியக்தமும், வியக்தமுமான ஸ்வரூபமுடையவராயும், பல அதிசய மேன்மை உடையவராக உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

46. பரிசுத்தமானவற்றுள் மிகவும் பரிசுத்தமானவராயும், மங்களமானவற்றுள் மிகவும் மங்களமானவராயும், தேவதைகளுக்குள் அந்தர்யாமியான உயர்ந்த தேவதையாகவும், உயிர்களுக்குள் உயிர்தரும் பிதாவாயும் யார் உள்ளாவரோ அவரே உலகில் ஒன்றாகிய தெய்வம். அத்தகைய ஒன்றேயாகிய தெய்வமாயுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

47. நீலமேகம் போல் உள்ளவரும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸ்ரீவத்ஸமென்னும் மருவை அடையாளமாய் கொண்டவராயும், கௌஸ்துப மணியால் பிரகாசிக்கும் அங்கங்களை உடையவராயும் நித்யஸூரிகளால் சூழப்பெற்றவராய் விளங்கும் ஸர்வலோக நாயகரான மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

48. சங்கும் சக்கரமும் தாங்கியவராய், கிரீடமும், குண்டலமும் அணிந்தவராய், பொன்னாடை உடுத்தியவராய், தாமரைக்கண்ணனாய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் பிரகாசிப்பவராய், நான்கு புஜங்களுடன் விளங்குபவராய், நீண்ட அகன்ற கண்களை உடையவராய், பாரிஜாதவிருக்ஷ நிழலில் தங்க சிங்காஸனத்தில் அமர்ந்தவராய் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம். 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.