ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 49 - 60

49. உலகனைத்தும் தாமாயிருப்பவராயும், முக்காலங்களையும் நடத்துபவராயும், உள்ளவற்றையெல்லாம் உண்டாக்கி அனைத்தையும் போஷித்து வளர்ப்பவராயும், அனைத்திற்கும் உள்ளிருந்தும், அனைத்தையும் கடந்து அப்பால் நிற்பவராயும், எல்லா தருமங்களை அறிபவரும் எல்லா உயிர்க்கும் பிறப்பு, இறப்பை கூட்டுவிப்பவரும், அனைத்துள்ளும் உறைபவராயும் எல்லாவற்றிற்கும் மேலானவரும், பரம்பொருளாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

50. புரமெனப்படும் சரீரத்தில் இருப்பவரும், ஜீவாத்மா பரமாத்மாவை அடைவதாகிய பல வகை யோகத்தால் அடையத்தக்கவரும், யோகத்தை அறிந்தவர்களது தலைவராயும், அனைத்தையும் அடக்கியாள்பவரும், பிரகிருதிக்கும் ஜீவாத்மாவிற்கும் புருஷனாகவும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

51. தான் தானாகவே உண்டாகியவராயும், ஆதிசேஷவடிவில் உலகை தாங்குபவராயும் சூர்யமண்டலத்தில் உறையும் பரம புருஷராயும், உலகத்திற்கெல்லாம் காரணமாகிய கமலத்தை நாபியில் உடையவராயும், மேல் கீழ் நடுவாகிய மூன்று உலகங்களுக்கு இருப்பிடமாய் உள்ளவராயும், திரிபாத் விபூதி என்னும் பரமபதத்தை உடையவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

52. உயிர்களை நடத்துகிறவராயும், உயிர் வடிவினராயும், உயிர் தொகுதிக்குத் தலைவராயும், பிரஜைகளின் உற்பத்திக்கு காரணமாய் உள்ளவராயும், உலகத்திற்கு வித்தாகியவராயும், எல்லா உயிர்களிலும் வசிப்பவராயும், எல்லா உயிர்களிடத்தும் ஸமமான ஆத்மாவாயிருப்பவராயும், உயிர்த்தொகுதியை வழிப்படுத்துகிறவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

53. பொன்மயமான பிரம்மாண்டத்தினுள் பிரம்மரூபியாக உறைபவராயும், பிரம்மாதி தேவர்களையும் தம்தம் அதிகாரங்களில் நியமிப்பவராயும், ஹிரண்யகர்ப்பர் எனப்படும் பிரம்மாவிற்கும் ஆத்மாவாய் விளங்குவதால் ஹிரண்யகர்ப்பர் என்று போற்றப்படுபவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.
(ஹிரண்யம் எனப்படுவது குற்றமற்ற சுத்த ஸத்வமாகும். அதுவே பரமபதம். அதில் உறைபவர்)

54. பூமியை தமது வயிற்றுனுள் வைத்துக்காப்பவராயும், ஆக்கவும், காக்கவும், அழிக்கவும், மாற்றவும் கூடிய ஸர்வஸக்தி பொருந்தியவராயும், உலகத்தை அளந்தவராயும், தமக்கு மேற்பட்டோர் இல்லாதவராயும், தமக்கு வேறு ஆதாரமின்றி தம் மஹிமையையே தமக்கு ஆதாரமாகக் கொண்டிருப்பவராயுமுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

55. பரமானந்த வடிவினராயும், பகல்போல் பிரகாசிப்பவராயும், பிறப்பற்றவராயும், மாறுபாடற்றவராயும், அழியாத்தன்மை உடையவராயும், என்றும் நிலைத்திருப்பவராயும், உயிர்கட்கெல்லாம் தலைவராகி தனது பிரகிருதியை தானே வசப்படுத்தி தமது மாயையினால் தோன்றக்கூடியவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.
(எல்லா கருப்பைகளிலும் எந்த எந்த உருவங்கள் பிறக்கின்றனவோ, அவைகட்கெல்லாம் மஹத் எனும் பெரும் பிரகிருதியே பிறப்பிடமாகிய க்ஷேத்ரம் அல்லது தாய். நானே கர்ப்பதாரணம் செய்யும் தகப்பன் - கீதை 14:4) (நானே விதையை விதைப்பவன்)

56. எல்லாவற்றிலும் சிறந்த பயனாய் இருப்பவராயும், என்றும் வழுவாதவராயும், தனது பக்தர்களை நழுவவிடாதவராயும், அனைத்திற்கும் ஆதிகாரணமாய் உள்ளவராயும், தர்மரூபியாகவும், ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்மம் என்கிறபடி ஸத்தியத்தையே வடிவாகவும், தூய்மைப்படுத்தும் ரிஷியாகவும் மந்திரமாகவும் உலகனைத்தையும் உடலாகாக் கொண்டவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

57. வேத வடிவாகியவரும், வேதத்தின் பொருளை அறிபவராயும், வேதங்களை அங்கங்களாய் உடையவராயும், வேதங்களை ஆராய்பவரும், வேதங்களை ஸ்ருஷ்டிக்குரிய பிரம்மனுக்கு உபதேசித்தவரும், பிரணவமாகிய ஓம் என்னும் எழுத்தினால் குறிப்பிடப்படுபவராயும், ஓம், தத், ஸத் என்ற மூன்று குறிப்பு பெயர்களை உடையவராயும், வேதமந்திர ரூபமாயும், வேதங்களில் முதன்மையாக துதிக்கப்படுபவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

58. தியானத்தினால் மட்டும் புலப்படக்கூடிய நுண்ணிய ஸ்வரூபமுடையவராயும், தம்மை தியானிப்பவரையும், ஆராதிப்பவரையும், துதிப்பவரையும் சுத்தப்படுத்துகிறவராயும், புலன்களுக்கு எட்டாதவராயிருந்தும் மோக்ஷத்தில் நாட்டமுடையவர்களால், ஆத்மஞானிகளால் அறியக்கூடியவராயும், காரியஸித்தியை அளிப்பவராயும், ஸித்திக்கு சாதனமாகவும், காரணமாகவும், காரியமாகவும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

59. ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம் முதலிய குணங்களால் உலகனைத்தையும் ஜயிப்பவராயும், இயல்பாகவே அனைத்திற்கும் மேம்பட்டிருப்பதால் ஜயசாலியாய் விளங்குபவராயும், பிறப்பு-இறப்பு அற்ற ஒரே நிலையான ஆத்மா வடிவினராயும், எல்லா வித்தைகளையும் அறிந்தவராயும், எல்லா வித்தைக்கும் தலைவராயுமுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

60. பத்மம் போன்றதும் பொன் போன்றதுமான அழகிய நாபியை உடையவராயும், அழகிய சிறகுகளை உடையவராயும், வராஹ அவதாரம் செய்து கோ எனும் பூமியைத்தாங்குபவராயும், வாமனவதாரம் செய்து மூவுலகையும் அளந்தபோது உயர்ந்தவராயும், எல்லா உலகங்களையும் தாங்கும் (பீடம் போன்ற கூர்ம ரூபியாக பாதாளக்கடலில் தம்மாலேயே தாம் வைக்கப்படுகிறவராயும் உள்ள) மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.



 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.