ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 61 - 72

61. உலகமென்னும் யந்திரத்தை நடத்துபவராயும், ஸம்ஸார சக்கரத்தை சுழற்றும் இயல்பினராயும், அவித்யை என்னும் யோக மாயையினால் மூடப்பட்டவராயும் பகலை உண்டாக்கும் சூர்ய வடிவினராயும், யாகங்களில் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை தேவர்களுக்கு கொண்டு சேர்க்கும் அக்னி வடிவினராயும், பிறவிப்பிணிக்கு மருந்தாகியவரும், மந்திரங்களினால் அறியப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

62. சென்றது, வருவது, நிகழ்வது ஆகிய அனைத்திற்கும் மூலகாரணமானவராயும், யுகம் முதலிய காலவேறுபாடுகளை உண்டாக்கியவராயும், யுகங்களை ஆரம்பித்து வைப்பவராயும், காலவடிவங்கொண்டு நான்கு யுகங்களையும் அவற்றின் தர்மத்திற்கேற்ப வழிநடத்திச் செல்பவராயும், பல மாயைகளைச் செய்பவராயும், 1000 யுகங்களாக எண்ணப்படும் பிரளய காலத்தை யோக நித்திரையிலிருந்து ஜயிப்பவராயுமுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

63. யோகிகளுக்கு ஸ்தூல பிரபஞ்சமாகப் புலப்படும் உருவமுள்ளவராயும், மாயையால் உயிர்களை கட்டுகிறவராயும், மறைந்திருத்தல், வெளிவருதல், ஓங்கி வளர்தல், வளர்தலின் முடிவை அடைதல், தேய ஆரம்பித்தல், முற்றிலும் தேய்ந்துவிடல் என்னும் ஆறு வகையான மாறுதல்களை உடைய பிரபஞ்சரூபத்தை சரீரமாகக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

64. தாய் கர்ப்பத்தில் சிசுவை வைத்து ரக்ஷிப்பது போல் உலகங்களை தமக்குள் வைத்தும், பக்ஷிகள் சிறகுகளினால் குஞ்சுகளை அணைப்பது போல் தீங்குகள் வராமல் மூடிக்காப்பாற்றியும், அமுதாகப் பெருகிறவராயும், உலகிற்கு முதல் காரணமாகப் பிரகாசிப்பவராயும், 14 லோகங்களாகிய பத்மத்தை தமது நாபியில் உடையவராயும், பிரபஞ்சரூபமாய் விருத்தியடைகிறவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

65. ஸ்வயம் பிரகாசமானவரும், சிருஷ்டி காலத்தில் பிரகிருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவராயும், எல்லாவற்றையும் நடத்துகிறவராயும், தாம் யாராலும் நடத்தப்படாதவராயும், சிருஷ்டியின் தொடக்கத்தில் பஞ்ச பூதங்களைச் சிதறிப்போகாமல் ஒன்று சேர்த்து கட்டுப்படுத்துபவராயும், பிரம்மாவின் உற்பத்திக்கு காரணமாகிய பொன்மயமான அண்டத்தை தம்முள் வைத்திருப்பவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

66. பிராணமய கோசம், அன்னமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஞானமய கோசம் என்னும் ஐந்து பெரிய கோசங்களுள் உறைபவராயும், பிரளயகாலத்தில் கார்யங்கள் அனைத்தும் அழிந்தபோதும், காரண ரூபியாகிய தாம் மட்டும் தனித்திருப்பவராயும், நக்ஷத்திரமணடலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

67. தாம் தர்ம, அதர்மங்களுக்கு அப்பாற்பட்டவராயினும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக தானே தர்மத்தை அனுஷ்டிப்பவராயும், தர்மத்தை காப்பதற்காக தர்மம் குறையும்போது அவதாரமெடுப்பவராயும், தர்மங்களை தாங்குகிறவராயும், தர்மங்கள் எல்லாம் சேருமிடமாயும், தாம் எல்லாவற்றையும் காப்பாற்றுவதற்காக தர்மத்தையே பொதுவான கருவியாக வைத்திருப்பவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

68. சூர்யமண்டல வடிவினராயும், நக்ஷத்திரமண்டலத்திற்கு நாயகரான சந்திரவடிவினராயும், கிரணங்களால் பிரகாசிக்கும் ஆயிரம் முனைகளோடு கூடிய சக்கரத்தை உடையவராயும், சூர்யன், சந்திரன், அக்னி ஆகியவற்றிடம் உள்ள எந்த ஒளி உலகத்தையும் பிரகாசப்படுத்துகிறதோ அந்த ஒளியினை தன்னுடையதாக கொண்டுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

69. சாஸ்திரப்படி மந்திரங்களைச் சொல்லி அக்னியில் செய்யப்படும் ஹவிஸ்ஸூகள் எல்லாம் அமிர்தமாக்கப்பட்டு தேவர்களின் வடிவில் நின்று ஸோமபானம் செய்பவராயும், தர்மத்தை நிலை நிறுத்த யாகங்களை செய்து தக்ஷினைகளை அளிப்பவராயும், ஆத்மானந்தமாகிய அமிர்தத்தை பானம் செய்பவராயும், கடலை கடைந்து உண்டான அமிர்தத்தை தேவர்களுடன் பானம் செய்பவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

70. ஸங்கல்பம் தவறாதவராயும், சரீரத்திற்கு காரணமான பஞ்சபூதங்களை பிராண ரூபியாக தாங்குகிறவரும், தமது ஸ்வரூபானந்தத்தை அனுபவிப்பவரும், தனது மாயையினால் தானே உலகாகி தனக்குள்ளே தான் அடங்கி இருப்பவரும், தனது மாயையினால் பலவடிவில் சிறந்து விளங்குபவராயும், மிகச்சிறந்த தமது மஹிமையால் ஹ்ருதய ஆகாசத்தில் நிலைத்திருப்பவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

71. அப்ராகிருதமான பொன்மயமான தோள்வளைகளை உடையவராயும், குகை எனப்படும் ஹ்ருதய ஆகாசத்தில் இருப்பவரும், ஞானம் ஐஸ்வர்யம், பலம், கீர்த்தி, வீர்யம், மோக்ஷம் முதலியவற்றில் கம்பீரமாக விளங்குபவராயும், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் பத்மம் (தாமரை), சங்கு, சக்கரம், கதாயுதம் போன்றவற்றில் தம்மிடம் எப்போதும் இருக்கப்பெற்றவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

72. தமது ஸ்தானத்திலிருந்து வழுவாதவர் ஆதலால் அச்யுதன் என்றும் சேதன, அசேதனங்களை தம்மிடம் ஒன்று சேரும்படி ஆகர்ஷிப்பதால் ஸங்கர்ஷணர் என்றும், மூன்று உலகங்களுக்கும் ஈஸ்வரனாகியும் மூன்று உலகங்களுக்கும் அந்தர்யாமியாகவும், மூன்று உலகங்களிலும் தம்மைவிட உயர்ந்தவர் வேறு அல்லாதவரும் அவருடைய ஒளி ஆகாயத்தையும், பூமியையும் வியாபித்திருப்பதாலும், பாதத்தினால் உலகங்களை ஆக்ரமிப்பதனாலும் "மஹாவிஷ்ணு" என்று சொல்லப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம். 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.