ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 73 - 84

73. இந்திரியரூபமான சாரங்கமென்னும் சிறந்த வில்லை உடையவரும், பூததன் மாத்திரைகளின் வடிவான வைஜயந்திமாலையை அணிந்திருப்பவரும், யமம், நியமம், ஆஸனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தியானம், தாரணை, ஸமாதி என்னும் சிறந்த அஷ்டாங்க யோகத்தை நிறைவேற்றுபவராயும், மறுபடி ஸம்ஸாரத்தில் திரும்பாமலிருக்கும் உயர்ந்த ஸ்தானமாயிருப்பவராயுமுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

74. விஸ்தாரமான உலகத்தை பிரளய காலத்தில் சுருக்குகிறவராயும், யுத்தங்களில் நிச்சயமான ஜயத்தை உடையவரும், உலகங்களை ரக்ஷிப்பதற்காக மனதுதத்துவமாகிய ஸுதர்ஸனர் என்னும் சக்கரத்தையும், புத்திதத்துவமாகிய கதையையும் தரித்துக் கொண்டிருப்பவராயும், தம்முடைய நாமத்தை நினைத்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகிறவராயும், ஸ்ரீதேவிக்கு இருப்பிடமாயுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

75. பரஸ்வரூபத்தை போலவே வியூஹ, விபவ அவதாரங்கள் முதலியவற்றிலும், தமக்கு ஒத்தபடி லக்ஷ்மியை அவதரிக்கச்செய்கிறவரும், அவரது தேவதா ரூபத்தில் லக்ஷ்மியும், தேவதாரூபமாகவும் அவரது மனுஷ்யாவதாரத்தில் லக்ஷ்மியும் மானிடவடிவாகவும், அவரெடுக்கும் திருமேனிக்கு தக்கபடி எல்லாம் தானும் அதற்கு தகுந்தபடி திருமேனி எடுப்பவரும், மணிக்கு ஒலிபோலவும், மலருக்கு மணம் போலவும், அமுதத்திற்கு சுவை போலவும், இயற்கையாகவுள்ள ஸம்பந்தத்தினால் எப்போதும் லக்ஷ்மியை சேர்ந்திருப்பவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

76. தவத்திற்கும், வேதத்திற்கும், ஞானத்திற்கும், பிராம்மணர்கட்கும், பக்தி செலுத்துவோரிடத்தும் அனுகூலமானவரும், எங்கும், எப்போதும் எல்லாவற்றையும் தனது ஞான ஒளியில் காண்பவரும், சக்கரத்திற்கு குடம் ஆதாரமாயிருப்பது போல் அனைத்திற்கும் ஆதாரமாயிருப்பவரும், காலசக்கரத்தின் வட்டையாகிய அவித்தை எனப்படும் கலிகல்மஷத்தை தம்மிடம் சேர்ந்த மாத்திரத்தில் அழிப்பவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

77. பொன்மயமான சரீரத்தை உடையவராயும், பொன்மயமான வீர்யத்தை உடையவராயும், தத்துவமாகவும், சத்தாகவும், சித்தாகவும், ஒளிர்பவரும், பிராண்களுக்கு உறைவிடமான ஜீவாத்மா வடிவினரும், எல்லோராலும் துதிக்கப்படுபவரும், யாராலும் எந்த பாஷையாலும் எவ்வகையாலும் செய்யப்படும் ஸ்தோத்திரங்களை சொற்பிழை, பொருட்பிழை இருந்தாலும் குணங்களை சொல்வதாக எண்ணி அன்புடன் அங்கீகரிப்பவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

78. எங்ஙனம் சிலந்திப் பூச்சியானது தனது சரீரத்திடமிருந்து உண்டாகும் உமிழ்நீரை நூலாக மாற்றி வலைபின்னி தனது இரையை தேடிக்கொண்டு, பிறகு தனக்குள்ளேயே வலையை இழுத்துக்கொள்கிறதோ, எங்ஙனம் பட்டுப்பூச்சியானது தன்னைச்சுற்றி பஞ்சை உருவாக்கி தான் அதில் வாழ்கிறதோ, அங்ஙனம் தம்மிடமிருந்தே விஸ்தாரமான பிரபஞ்சத்தை உருவாக்குபவரும், நிலையாக வைத்திருப்பவரும், பிரகிருதியை அனுபவிப்பவரும், பிரளய காலத்தில் அழிப்பவரும், உலகம் அடங்குமிடமாயிருப்பவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

79. கீழேயுள்ள பிரபஞ்சத்திற்கெல்லாம் மேலாயிருப்பவரும், வேதங்கள் என்னும் இலைகளோடு கூடிய ஸம்ஸார விருக்ஷவடிவினரும் பல தேவதைகளிடம் பக்தி வைத்திருக்கும் பலரை அவரவர் விருப்பப்படி தாமே நடத்துபவராயும், விஷ்ணுபதம் அல்லது ஆதித்யன் எனப்படும் ஆகாயத்தில் உறைபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

80. காயத்ரீ, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ருஷ்டுப், ஜகதீ என்னும் சந்தஸ்களோடு கூடிய வேதமந்திரங்களுக்கு அதிஷ்டான தேவதைகளாகிய சூர்யனுடைய தேர்க்குதிரைகள் ஏழையும் தமக்கு வாகனங்களாக உடையவரும், ஏழு நாவுடைய அக்னி வடிவாயிருப்பவரும், ஏழு பிராண்களாயிருப்பவரும் ஏழு ஹோமங்களாயிருப்பவரும், ஏழு ஸமித்துக்களாயிருப்பவரும், எவ்வேழாய் ஹ்ருதய குகையில் ஒடுங்கி நின்று எவ்வேழாய் விரிந்து பரந்து பிராண்களாய் சஞ்சரிக்கும் இந்த ஏழு லோகங்களாய் பரவி விஸ்வரூபமாயுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

81. அவரவர்க்கு தக்கபடி கர்மங்களை கூட்டி வைப்பதில் நியாயத்துடன் கூடியவராயும், நான்கு வர்ணாசிரம் தர்மங்களை பின்பற்றி நடப்போர்க்கு புகலிடமாய் இருப்பவரும், தம்முடைய ஸ்வரூபத்தை அனுபவிக்கும் திறமை உண்டான யோகிகளுக்கு மாலைப்பொழுதில் புஷ்பம் மலர்வதுபோல், தாமே மலர்ந்து மிக்க போக்யராகப் பிரகாசிப்பவரும், புஷ்பம் மலர்வதுபோல் சிருஷ்டி காலத்தில் தாம் மலர்கிறவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

82. தயிரிலும், பாலிலும் வெண்ணெய் போல் சேதனா அசேதனங்களாகிய பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் ஸாரமாயிருப்பவரும், வெண்ணெயிலிருந்து எடுக்கப்படும் நெய் போன்று சுத்தஸத்வத்தை மோக்ஷத்திற்கு இருப்பிடமாக கொண்டவரும், தாமே தமது ஸ்வரூபத்தை அறிபவரும், எல்லோராலும் அன்னம் போல் அனுபவிக்கப்படுகிறவரும், உலகனைத்தையும் அன்னம் போல் ஸம்ஹார காலத்தில் உண்பவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.
(உண்ணும் உணவும், தின்னும் வெற்றிலையும், பருகு நீரும் எல்லாம் எம்பெருமான் கண்ணனே - நம்மாழ்வார்)

83. யாகங்களுக்கு தலைவரும், யாகங்களை ரக்ஷிப்பவரும், யாகம் செய்பவராயிருப்பவரும், யாகத்தை செய்பவர்களுக்கு அதன் பலனை கொடுப்பவரும், யாகத்தை ஏற்றுக்கொள்பவரும், ஆதிகாலத்தில் யக்ஞத்தை சிருஷ்டித்தவரும், யாகங்களை அனுபவிப்பவரும், யாகங்களை தம்மை அடையும் சாதனமாக காட்டிவிப்பவரும், யாகங்களுக்குள் ரகசியமான ஞானயக்ஞத்தை உடையவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

84. யாகங்களை தமது உறுப்புகளாகக் கொண்ட யக்ஞவராஹ வடிவினரும், யாகம் செய்பவர்களுக்கு சக்தியையும், சிரத்தையும், அதிகாரத்தையும் கொடுத்து யாகத்தை நடத்துகிறவராயும், யாகத்திற்கு குறைவு வராமல் காப்பவரும், யாகங்களில் ஊக்க குறைவினால் எந்த கிரியை தவறுகிறதோ அது விஷ்ணுவை நினைத்த மந்திரத்தில் பூர்ணமாகிறது என்ற தத்துவத்தை உடையவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.



 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.