ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 85 - 96

85. பூர்ணாஹூதியால் யாகத்தை முற்றுப்பெறச் செய்பவரும், யாகத்தின் பலனான தத்துவ ஞானத்தை உடையவரும், கர்மங்களெல்லாம் முடிவடையும் ஞானரூபமாக உள்ளவரும், உலகிற்கு வழிகாட்டுதலாய், சிறந்த யாகங்களை செய்பவரும், தலைசிறந்த ஜபயக்ஞமாயிருப்பவரும், சிறந்த யாகம் செய்பவரை தம்மவராய் கொள்பவரும், வேண்டியவற்றையெல்லாம் அளிக்கும் கற்பக விருக்ஷமாயுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

86. பாஞ்சஜன்யம் என்னும் சங்கை தரிப்பவரும், நந்தகமென்னும் வாளை ஏந்தியவரும், ஸுதர்ஸனமென்னும் சக்கரத்தை உடையவரும், சாரங்கமென்னும் வில்லை உடையவரும், கௌமேதகி என்னும் கதையை தரிப்பவரும், எய்துவன எல்லாம் ஆயுதமாகக் கொண்டவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

87. புலன்களை கிரணங்களாய் உடையவரும், புலன்வழி அனைத்தையும் உணர்பவராயும், காலவடிவாகி காலசக்கரத்தை சுழலவைப்பவரும், ஆத்மாக்களை பிரகிருதியாகிய இயற்கையில் நுழைப்பவரும், தத்துவங்களை தொகுத்து ஆள்பவரும், உலகங்கள் அனைத்தும் தம்மிடம் மரத்தில் பழங்கள் தொங்குவது போல் தொங்கும்படி இருப்பவராயும், தாமரை வடிவில் உலகங்களை உண்டாக்கியவரும், மலர்ந்த தாமரைக்கண்ணனாய் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

88. அனைத்திலும் உள்ளிருந்து இயக்கக்கூடிய பரமபுருஷனே அனைத்திற்கும் வெளியேயிருந்தும் இயக்குபவராயும், அத்தகைய பரம புருஷனின் முக்கால் பகுதி பிரபஞ்சத்திற்கு மேலே விளங்குவதாயும், அவருடைய ஒரு பகுதி இங்கே இப்பிரபஞ்சத்தில் மீண்டும் மீண்டும் தோன்றுவதாயும், அதிலிருந்து உணவை உண்டு வாழும் உயிர்களும், உணவை வேண்டாத ஜடப்பொருட்களும், ஆகிய எல்லாம் வெளிப்படையாகத் தோன்றுவதாகவும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

89. அன்னமயமான பூதாத்மாவாகவும், பிராணமயமான இந்திரியாத்மாவாகவும், மனோமயமான ஸங்கற்பாத்மாவாகவும், விஞ்ஞானமயமான காலாத்மாவாகவும், ஆனந்தமயமான லயாத்மாவாகவும், இரண்டற்ற ஒன்றேயாகவும், எல்லா சித்திகளையும் தனது பக்தர்களுக்கு அளிப்பவராயும், அனைத்திற்கும் ஆதிகாரணமாயிருப்பவராயுமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

90. பரமபுருஷனே இவ்வுலகனைத்தும். தவமே சிறந்தகர்மம். தவத்தால் பிரம்மம் வளர்கிறது. பிரம்மத்தினிடமிருந்தே அனைத்தும் உண்டாயியன. எல்லாவற்றையும் அறிந்தவரும், அறிபவருமாகிய தவச்சக்தியானவரிடமிருந்தே காரிய பிரபஞ்சமும், நாமரூபங்களும், ஜடப்பொருள்களும் உண்டாயின. உலகம் தவச்சக்தியான பரப்ரம்மத்தின் உள்ளுறைவதாலேயே உயிருள்ளதாயிற்று. இத்தகைய பெருமை வாய்ந்த தவச்சக்தியாய் விளங்கும் மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

91. அன்னத்தினால் உயிரினங்கள் வாழ்கின்றன. அன்னம் மேகத்தால் உண்டாகிறது. மேகம் வேள்வியினால் உண்டாகிறது. வேள்வி கர்மத்தால் உண்டாகிறது. கர்மம் வேதத்தால் உண்டாகிறது. வேதமும், உயிரினங்களும் அழிவற்ற பிரம்மத்திலிருந்து உண்டாயிற்று. ஆகவே, எங்கும் பரவியுள்ள அந்த வேதம் எப்போதும் வேள்வியில் நிலை பெற்றுள்ளது. இவ்வாறு வேத புருஷனாகவும், வேள்வியாகவும், வேதமாகவும், உயிராகவும் (ஆத்மாவாகவும்) உள்ளதாக பகவத்கீதையில் உபதேசித்தருளிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

92. பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என்று காரிய பிரபஞ்சமாயிருக்கும் ஸ்ரீகிருஷ்ணருடைய பிரகிருதியானது எட்டுவிதமாக பிரிந்துள்ளது. இது அவரது பிரகிருதியில் தாழ்மையானது. அதைக்காட்டிலும் உயர்ந்த பிரகிருதியானது மேலேயுள்ளது. அதுவே ஜீவன் என்றும், ஸுத்ராத்மா என்றும் மூலப்ரகிருதி என்றும் அழைக்கப்படுகிறது. அதன் வழியாக ஸகல லோகங்களையும் தாங்குவதாகவும் இவ்விரண்டு பிரகிருதிகளிலிருந்தே ஸகல பூதங்களும் தோற்றக்காரணமும், அழிவுக்காரணமும் ஆகி, நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் போல் இவையாவும் ஸ்ரீகிருஷ்ணரால் பற்றிக்கொண்டு நிற்பதுமாயுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

93. பழமையானவரும், அவ்வப்பொழுது புதியதாய் தோன்றுபவரும், உலகை ஆள்பவரும், அணுவைக்காட்டிலும் அணுவானவரும், அனைத்தையும் படைத்தவரும், ஆதித்யனின் ஒளி போன்ற ஞானஒளியுள்ளவரும், அஞ்ஞான இருளைக்கடந்தவருமாகிய பரமபுருஷனை, எவனொருவன் அந்திமஸ்மரணை எனப்படும் மரணகாலத்தின் கடைசி நினைவாக மனத்தை நிலைநிறுத்தி புருவங்களின் மத்தியில் பிராணனை நிலைநிறுத்திச் சிந்திப்பானோ அவர் அந்த ஒளிப்பிழம்பான பரமபுருஷனை அடைகிறான் என்று கீதையில் உபதேசித்தருளிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

94. பன்னிரு ஆதித்யர்களில் விஷ்ணுவாகவும், ஜோதிகளுக்குள் ஒளிமிக்க சூர்யனாகவும், நக்ஷத்திரங்களுக்குள் சந்திரனாகவும், வேதங்களில் ஸாம வேதமாகவும், தேவர்களுக்குள் இந்திரனாகவும், பதினொரு ருத்ரர்களில் சங்கரன் என்ற ருத்ரனாகவும், புரோஹிதர்களில் உயர்ந்தவரான பிரஹஸ்பதியாகவும், ஸேனாதிபதிகளுக்குள் சுப்ரமண்யனாகவும், பொருள்சொற்களில் ஓர் எழுத்தான ஓம்காரமாகிய ப்ரணவமாகவும், மரங்களில் அரசமரமாகவும், பக்ஷிகளுக்குள் கருடனாகவும், மிருகங்களுக்குள் சிங்கமாகவும், மனிதர்களுக்குள் அரசராகவும் மற்றும் மக்கள் எவற்றையெல்லாம் உயர்ந்ததாக எண்ணுகிறார்களோ அவற்றிற்கெல்லாம் அதிபதியாக தான் உள்ளதாக பகவத்கீதையில் உபதேசித்தருளிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

95. ஸம்ஸாரமென்ற அஸ்வத்த விருக்ஷமானது (மரம்) மேலே வேரும், கீழே கிளைகளும் கொண்டது. அது அழிவில்லாதது. வேதங்கள் அதன் இலைகள். விருக்ஷத்தின் கிளைகள் மேலும், கீழும் பரவியுள்ளன. அவை, ஸத்வம், ரஜஸ, தமஸ் என்ற முக்குணங்களால் வளர்ந்தவை. சப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்தம் என்னும் புலன்களின் விஷயங்களைத் தளிர்களாககக் கொண்டவை. கர்மங்களைப் பின்பற்றி அந்த மரத்தின் வேர்கள் கீழே மனுஷ்ய லோகத்திலும் பரவி உள்ளன. இந்த ஸம்ஸார விருக்ஷத்திலிருந்து விடுபட, தெய்வசிந்தனையுடன் பற்றில்லாமல் கடமையை செய்து இந்த பழமையான ஸம்ஸாரவிருஷம் யாரிடமிருந்து உண்டாயிற்றோ அத்தகைய ஆதிபுருஷனை சரணமடைந்து ஆத்மமுக்தி அடையவேண்டுமென கீதையில் உபதேசித்தருளிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

96. தனியொருவராக உலகிற்கு ஆதாரமாகியவரும், மஹாபுருஷரும், பெரியதெற்கெல்லாம் பெரிதான பரவஸ்துவாய் இருப்பவரும் (பெருமாள்) மனுஷ்யர்களைப்போல் கர்ப்பவாஸம் இல்லாதிருப்பவரும், ஹ்ருதயத்தில் குடிகொண்டிருப்பவரும், மாயையாகிய திரைக்கு பின்னிருப்பவராயும், ஒவ்வொரு கல்பந்தோறும் தானே தன்னிடத்தில் தன்னால் தன்னையே ஆக்கவும், அளிக்கவும், அழிக்கவும் செய்து, பின்னர் மீண்டும் தோன்றுவதாயும் உள்ள ஆதிபுருஷனாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம். 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.