ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

புகழுரை 97 - 108

97. உலகின் முதல் காரண புருஷனாகவும், உலகாகவும், உலகிற்கு ஆத்மாவாகவும், உலகு முழுவதும் தன்னாலேயே வியாபிக்கப்பட்டவராயும், எல்லா உலகங்களும் போற்றுவதும், யோகமாயையான பலவடிவினராகவும், யோகமாயையை நடத்துகிறவரும், ஸகல கல்யாண குணங்களுடன் பிரபஞ்சத்திற்கும் அப்பால் உள்ளவராயும், ரிஷிகளின் ஸ்தானத்திற்கும் உயர்ந்த ஸ்தானமாயுள்ள பரமபதத்தில் திருமேனியுடன் கூடியிருப்பவராயும், பரமபதத்திலிருந்து தனது ஸங்கல்ப மாத்திரையாலேயே பிரபஞ்சத்தை உண்டாக்குபவராயும் உள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

98. எம்பெருமானிடம் இச்சராசரப் பிரபஞ்சம் அனைத்தும் வஸ்திரத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் நூலிழைகளைப்போல் கோர்க்கப்பட்டுள்ளது. அவருடைய அம்சத்தில் தோன்றியவர்களாலேயே இவ்வுலகில் படைத்தல், காத்தல், அழித்தல், முதலியவை உண்டாகின்றன. மூக்கணாங்கயிற்றினால் வசப்படுத்தப்பட்ட காளையைப்போல் இவ்வுலகு அனைத்தும் எம்பெருமானிடம் வசப்பட்டே இயங்குகிறது. தவம் அவரது ஹ்ருதயம், வித்தை சரீரம், கிரியைகள் வடிவம். தேவதைகள் அங்கங்கள். தர்மம் மனதாகும். பிராண்கள் தேவர்கள். இவ்வாறு வேதங்களில் சிறப்புறக் கூறப்பட்டுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

99. படைத்தல், காத்தல், ஆளுதல், அழித்தல், தாங்குதல், ஸகலகல்யாண குணங்களுடன் இருத்தல், எதிலும் உயர்ந்தததாய் இருத்தல், எல்லாவற்றிலும் வேராக இருத்தல், அனைத்தையும் அளவிடும் காலஸ்வரூபியாக இருத்தல், ஆத்மாவிற்கு மூலகாரணமாகிய பரமாத்மாவாயிருத்தல் ஒருவிசேஷமான நிலையில் ஸகல புவனங்களை சரீரமாகக் கொண்டிருத்தல் என்று ஸ்ரீமான் ராமனுஜரால் போற்றப்பட்டவராகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

100. தர்மம் மிகுந்துள்ள க்ரேதாயுகத்தில் சுத்தஸாத்வீக நிறமான வெள்ளை நிறத்திலும், மூன்று பங்கு தர்மம் ஒரு பங்கு அதர்மம் நிறைந்துள்ள திரேதாயுகத்தில் அந்திக்கருக்கலில் மறையும் சூர்யனின் சிகப்பு நிறமும் மஞ்சள் நிறமும் கலந்த மேனியாயும், இரண்டு பங்கு தர்மம் இரண்டு பங்கு அதர்மம் நிறைந்துள்ள துவாபரயுகத்தில் பச்சை நிறமேனியாயும், ஒரு பங்கு தர்மம், மூன்று பங்கு அதர்மம் நிறைந்துள்ள கலியுகத்தில் காயாம்பு நிற வண்ணணாயும், நீலநிறமேனியாயும் மக்களிடத்தே அவ்வப்பொழுது நிறைந்துள்ள குணத்தை அனுசரித்து காட்சி அளிக்கும் மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

101. மலைபோல் பெரிதாகுதல், அணுபோல் சிறியதாகுதல், இரும்பு போல் கனத்தல், காற்று போல் லேசாகுதல், கூடுவிட்டு கூடு பாய்தல், எல்லாவற்றையும் தன்வசப்படுத்ததல், எல்லாவற்றையும் தனது எண்ணங்களைப்போல் மாற்றியமைத்தல், நினைத்ததை சாதித்து ஆனந்தமடைதல் என்பதான அஷ்டமாசித்திகளை யோகிகளுக்கு அளித்து தன்னை வந்தடையும் படி செய்யும் மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

102. தியானம், பூஜை, அர்ச்சனை, யாகம், நமஸ்கரித்தல் போன்ற கர்மயோகத்தின் மூலமாகவும், சிரவணம், கீர்த்தனை, பஜனை, பாதஸேவை, பணிவிடை, வன்தனம் போன்ற பக்தி யோகத்தின் மூலமாகவும், தியானம், ஜபம், அஷ்டமாசித்திகள் போன்ற ஞானயோகத்தின் மூலமாகவும், இம்மூன்றும் ஒருங்கே ஒருவருக்கு அமையப்பெற்றால் அது ராஜயோகமெனவும் கூறி, இம்மூன்று மார்கங்களில் ஏதேனும் ஒன்றின் மூலமாக தன்னை வந்தடையும்படி உபதேசித்தருளிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

103. தனது சரீரமாக விளங்கும் காரண-காரிய பிரபஞ்சத்திற்கு ஏழு ஆதாரங்களை நிர்மாணித்து, அவ்வாறே தனது அம்ஸமாகிய மனிதனுக்கும் மூலாதாரம் (வயிற்றின் அடிப்பாகம்), சுவாதிஷ்டானம் (தொப்புளுக்கும் வயிற்றின் அடிப்பாகாத்திற்கும் மையம்), மணிபூரகம் (தொப்புள்), அனாஹதம் (ஹ்ருதயம்), விசுத்தி (கழுத்து) ஆக்ஞை (புருவமத்தி), ஸஹஸ்ராரம் (உச்சந்தலை) ஆகிய ஏழு ஆதாரங்களை அமைத்து மூலாதாரத்தில் உள்ள குண்டலி சக்தியின் துணையுடன் ஹ்ருதய ஆகாசத்தில் உள்ள ஆத்மாவை புருவமத்தியில் நிலை நிறுத்தி ஆயுட்கால முடிவில் எம்பெருமானின் நினைவுடன் ஸஹஸ்ராரம் மூலமாக ஆத்மாவை வெளிப்படுத்தி மேல்நோக்கிய பாதையில் சூர்ய மண்டலத்தின் உள் நுழைந்து பரமபதத்தை அடைவதான ஞானமார்க்க்கத்தை உபதேசித்து அருளிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

104. பரம்பொருளாகிய ஸ்ரீமந் நாராயணனுடைய பரமபதத்தை அடைந்து ஆத்மா மோக்ஷம் பெறுவதிலும் ஸாலோக்ய மோக்ஷம் எனப்படும் பரமபதவாசலில் நுழைவது, ஸாமீப்ய மோக்ஷம் எனப்படும் எம்பெருமானை கண் இமைக்காமல் பார்த்து ரசிப்பது, ஸாரூப்ய மோக்ஷம் எனப்படும் அப்படியே உருகி அவரது அம்ஸமாக மாறிவிடுவது, ஸாயுஜ்ய மோக்ஷம் எனப்படும் அவருடன் ஒன்றி இணைந்து விடுவது என்னும் நான்கு நிலைகளை கொண்டுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

105. நாமங்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பினும், முக்யமாக வேதங்களில் கூறப்பட்டுள்ள பன்னிரு திருநாமங்களாகிய கேசவன் (க் எனப்படும் பிரம்மனாகவும் ஈஸ எனப்படும் ருத்திரனாகவும் அ எனப்படும் விஷ்ணுவாகவும் இருப்பவர்), நாராயணன் (நாரமாகிய ஜீவாத்மாக்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவர்), மாதவன் (ஜீவாத்மாக்களின் முன்னேற்றத்திற்காக பெருந்தவத்தை மேற்கொண்டிருப்பவர்), கோவிந்தன் (ஜீவாத்மாவாகிய பசுக்களை கட்டி மேய்ப்பவரும், ஆத்மாவிற்கு திரும்பி வருதலற்ற மோக்ஷத்தை அளிப்பவரும், விஷ்ணு (எங்கும் வியாபித்து அருள்பாவிப்பவர்), மதுசூதனன் (அமிர்த கலசத்தை தாங்கியவர்), திரிவிக்ரமன் (முப்புரங்களையும் வெற்றி கொள்பவர்), வாமனன் (மூவுலகையும் திருவடிகளால் அளந்தவர்), ஸ்ரீதரன் (ஸ்ரீயாகிய லக்ஷ்மியை ஹ்ருதயவாஸமாக கொண்டிருப்பவர்), ருஷிகேஸன் (பிரம்ம அண்டங்களை தமது கேசங்களினால் தோற்றுவிக்கக்கூடிய ரோமஸரிஷி போன்றவர்களையே கேசங்களாக உடையவர்), பத்மநாபன் (பிரம்மாவை தொப்புளிலிருந்து தோன்றச்செய்பவர்), தாமோதரன் (கயிற்றைனால் கட்டப்பட்டுள்ள வயிற்றை உடையவர்) போன்றவற்றால் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ள மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

106. மேலும் வழக்கில் உள்ள திருநாமங்களாகிய ராமன் (ரம்யமானவர், ரமிக்கச்செய்பவர்) கிருஷ்ணன் (கிருஷி எனப்படும் பயிர் போன்ற பூமியில் ண எனப்படும் விதையாகிய ஆத்மாவை விதைத்து பலனை அறுவடை செய்பவர்), பெருமாள் (பெரிதிற்கும் பெரியதான ஆளாயிருப்பவர்) திருமால் (ஆத்மாக்களை கவர்பவர்) சுந்தரராஜன் (அழகிய திருமேனியுடன் ஆள்பவர்) வரதராஜன் (பக்தர்களுக்கு விரும்பிய வரத்தை அளித்து ஆள்பவர்) கண்ணன் (அனைத்திற்கும் ஸாக்ஷியாய் உடைய கண் போன்ற ஸ்தானத்தை உடையவர்) ஸ்ரீநிவாஸன் (ஸ்ரீயாகிய லக்ஷ்மியை ஹ்ருதயத்தில் கொண்டிருப்பவர்) ஆதித்யன் (சூர்ய மண்டலத்தின் நடுவில் உறையும் ஆதிமுதல்வனாகிய புருஷன்), பரந்தாமன் (உயர்ந்த ஜோதியாய் ஒளிவிடுபவர்) ஸ்ரீமான் (சிறப்புடையவர்) போன்றவற்றால் துதிக்கப்படுபவருமாகிய மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

107. வேதங்களை காத்திடவும் (மச்சாவதாரம்), அஸுரர்களின் ஆதிக்கத்தை அகற்றவும் (கூர்மாவதாரம்), தமோ குண மிகுதியால் பூமியானது மஹாப்ரளய ஜலத்தில் மூழ்காமல் தாங்கி பாதுகாக்கவும் (வராஹ அவதாரம்), நாராயண நாம மஹிமையை உலகிற்கு உணர்த்தவும் (நரஸிம்ஹ அவதாரம்), மூவுலகையும் தமது திருவடிகளால் அளந்து நிற்பவரும் (வாமன அவதாரம்) பெற்றோர் சொல்லை மதித்து நடக்கவும் (பரசுராம அவதாரம்) தர்மத்தின் வழி நடப்பவரும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை வலியுறுத்தியும் (ராம அவதாரம்), மஹாபலம் பொருந்தியவரும், தர்மத்திற்கு உறுதுணையாயிருப்பவரும் (பலராம அவதாரம்) அரசு முறைகளை நெறிப்படுத்த குருக்ஷேத்ர யுத்தத்தை மேற்கொள்பவரும் ஆத்மா மோக்ஷம் பெறுவதற்கான மார்க்கங்களை கீதையின் மூலம் உபதேசிப்பவரும் (கிருஷ்ண அவதாரம்) அழகிய குதிரை தாவி ஓடுவதைப் போன்ற ஒழுங்கான வழிப்பாதையில் கால ஓட்டத்தை நடத்தி யுகதர்மத்தை நிலைநிறுத்துபவரும் (கல்கி அவதாரம்) ஆகிய தஸாவதாரங்களை மேற்கொள்பவரான மஹாவிஷ்ணுவிற்கு நமஸ்காரம்.

108.     ஸாந்தாகாரம் புஜகஸயனம் பத்ம நாபம் ஸுரேஸம் | விஸ்வாதாரம் ககன ஸத்ருஸம் மேகவர்ணம் சுபாங்கம் |
லக்ஷ்மீ காந்தம் கமலநயனம் யோகி: ஹ்ருத்-த்யான கம்யம் |
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் ||

சாந்தஸ்வரூபமான சுத்தஸத்வ குணமானவரும், அரவணை மேல் ஸயனித்தவரும், நாபிக்கமலத்தை உடையவரும், தேவாதி தேவனாகவும் உலகிற்கு ஆதாரமானவரும், ஆகாயம் போன்று எங்கும் வியாபித்தவரும், நீலநிறமேக வண்ணனும், சங்கு, சக்ர, கதாதாரிகளுடன் கூடிய திருமேனியை உடையவரும், லக்ஷ்மிதேவியை ஹ்ருதயத்தில் கொண்டிருப்பவரும், தாமரக்கண்ணனும், யோகிகளின் ஹ்ருதயத்தில் தியானத்தால் அடையப்படுபவரும், பிறவித்துன்பத்தை போக்கி மோக்ஷத்தை அளிப்பவரும், அனைத்துலகிற்கும் ஒரு நாயகராய் (புருஷனாய்) விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்


* * * * * * *

காயேந வாசா மனஸேந்திரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதே: ஸ்வாபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணயேதி ஸமர்பயாமி ||

இயற்கையின் ஸ்வபாவத்திற்கேற்ப மனதாலும் வாக்காலும் ஸரீரத்தாலும் செய்யும் செயல்களில் பலன்கள் யாவுமே ஸ்ரீமந் நாராயணனுக்கே ஸமர்ப்பணம். 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.