ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் I

ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்

முன்னுரை

நமது ஹிந்து மதத்தின் மூலாதாரமாக உள்ளவை ருக், யஜுர், ஸாமம், அதர்வணம் என்னும் நாங்கு வேதங்களும் மற்றும் ஈஸாவஸ்ய, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, தைத்திரீய, ஐதரேய, சாந்த்தோக்ய, ப்ருஹதாரண்ய என்னும் குறிப்பிடத்தக்க பத்து உபநிஷத்துகளாகும். இவை அனைத்திலும் நாராயணனே பரம்பொருளாக ரிஷிகளாலும், தேவர்களாலும் புகழ்ந்து துதிக்கப்பட்டுள்ளார். பதினெட்டு புராணங்களை இயற்றியுள்ள வியாஸ மஹரிஷியாலும் ஸாத்வீக குண தெய்வமாக நாராயணனையே குறிப்பிட்டு ஸாத்வீக புராணங்களாக ஆறு புராணங்களையும் இயற்றி உள்ளார்.

மேற்கூறியவைகளில் உயர்ந்த தத்துவமாக் குறிப்பிடப்படுள்ள பரபிரம்மம், ஓம்கார வாச்யன், ஸத், பரமாத்மா, பரஞ்ஜ்யோதி, பரதத்வம், விஷ்ணு, ஈஸ்வரன், பிரஜாபதி, பகவான், பிராணன், புருஷன் ஆகிய வாக்யங்களெல்லாம் ஒரு தெய்வத்திடம் லயமடைந்து தான் ஆகவேண்டும். ஏனெனில் பல தெய்வங்கள் ஒரே சமயத்தில் தோன்றி இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்ததாக வேதங்கள் கூறவில்லை. இருக்கிறது ஒரு பிரபஞ்சம். அந்த ஒரு பிரபஞ்சத்தையும் ஆதியில் ஒரேயொரு தெய்வம் தான் தோற்றுவித்ததாக வேதங்கள் கூறுகின்றன. ஆகவே, நமது ஹிந்து மதத்தில் நாராயணன், பிரமன், சிவன், ருத்ரன், விநாயகர், சுப்ரமண்யர், துர்கை, ஆஞ்ஜநேயர், ஐயப்பன், கருப்பணன் போல பல தெய்வங்களை உயர்ந்த தத்துவமாக மக்கள் கொண்டிருப்பினும் பிரம்மன், ஆஞ்ஜநேயர், ஐயப்பன், கருப்பணன் போன்ற தேவதைகள் நாராயணனைச் சார்ந்தும், துர்கை, விநாயகர், சுப்ரமண்யர், ருத்ரன் போன்ற தேவதைகள் சிவனைச் சார்ந்தும் உள்ளவை என்பது அனைவரும் அறிந்ததே.

வேதத்தில் ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்ம ந ஈஸாந (ஸ்ருஷ்டிக்கு முன் நாராயணன் ஒருவர் மட்டுமே இருந்தார். அப்போது பிரம்மனும் இல்லை. ஈஸ்வரனுமில்லை) என்ற வாக்யத்தின் மூலமாகவும், நாராயண மந்திரத்தில் உள்ள "ண" என்ற ரூடிஸப்தத்தின் மூலமாகவும், மற்ற தேவதைகளைக் குறிக்கும் மந்திரத்தில் ஓம்காரம் தனித்தும், நாராயணனைக் குறிக்கும் மந்திரத்தில் ஓம்கார சப்தத்தையும் இணைத்து "ஓம் நமோ நாராயணாய" என்னும் அஷ்டாக்ஷர மந்திரமாக குறிப்பிட்டுள்ளபடியால் நாராயணனே பரம்பொருள் என்பது புலனாகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த நாராயணனை உயர்த்தி கூறும் புகழுரைகளை சிதறிக்கிடக்கும் முத்துக்களை ஒன்று கோர்த்து மாலையாக தொடுப்பது போல் "வேதங்கள், உப நிஷத்துகள், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, விஷ்ணுஸஹஸ்ர நாமாவளி" போன்றவற்றிலிருந்து எடுத்து 108 புகழுரைகள் அடங்கியதாக இந்நூலை அளித்துள்ளேன். இந்நூலில் உள்ள எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை புகழ்ந்து கூறும் வாக்யங்களை தினந்தோறும் ஒவ்வொரு வாக்யமாக படித்து எம்பெருமானுடைய பெருமைகளை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் பக்தன் ஒருவருக்கு ஆத்மீக முன்னேற்றம் உண்டாகுமானால் அதுவே நான் செய்த பெரும்பாக்யமாக கருதுகிறேன்.

இந்நூலை வெளியிட காரணமே தெய்வத்தை தொழும்போது ஸாதரணமாக மக்கள் மனதில் ஸர்வ வல்லமை பொருந்த்தியவர், எங்கும் வியாபித்து அருள்பாவிப்பவர், மேலான பரம்பொருள் வேண்டிய வரங்களை அளிப்பவர், இயற்கைக்கும் மனிதனுக்கும் அப்பாற்பட்ட மேலான சக்தி, கஷ்டங்களை நிவர்த்தி செய்பவர், மோக்ஷம் எனப்படும் பிறப்பற்ற தன்மையாகிய பேரானந்தத்தை அளிப்பவர் போன்ற ஒருசில வாக்யங்கள் மட்டுமே பதிந்துள்ளன. ஏனைய பிற வல்லமைகளையும் மக்கள் அறிய வேண்டும், உணவினை ருசியறிந்து சாப்பிடுவதைப் போன்று ஆழ்ந்து சிந்தித்து எம்பெருமானை தியானிக்க வேண்டும் என்ற நோக்கமேயாகும்.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்


Vanakkam

கட்டுரை ஆசிரியர்
அ. நாகநாத ஐயங்கார். B.Sc.,
2/21, பெருமாள் கோவில் தெரு,
எமனேஸ்வரம். 623 701.
பரமக்குடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம்
Cell : 98659 87270
Email : vishnuthathuvamahimai@gmail.com


 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.