ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

10-வது அத்யாயம்
( தொகுப்புரை )

முதலாவது அத்யாயத்தில் நாம் வாழும் பூமியானது எத்தனை யுகங்கள் கடந்திருக்கிறது என்றும், நமது பாரத நாட்டின் தென்பகுதியில் புண்யமான க்ஷேத்திரத்திலிருந்து குருவின் மூலமாக நடத்திக் கொண்டிருக்கும் வேள்வியானது சிறப்பாக நடக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறோம். இதன் மூலம் (மஹாஸங்கல்பத்தில்) பரநிலை, வியூஹ நிலை, விபவ நிலை, அந்தர்யாமித்வ நிலை, அர்ச்சா நிலை ஆகிய ஐந்து நிலைகளுடன் கூடிய பரமாத்மா உடன் ஒரு தொடர்பை உண்டாக்கி கொள்வதாய் நமது முன்னோர்கள் ஸங்கல்பத்தை உருவாக்கி உள்ளனர். மேற்கூறிய ஐந்து நிலைகளிலும் பர நிலையில் (பரமபதத்தில்) எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீமந் நாராயணனிடம் இகபர சுகங்களுடன் த4ர்ம, அர்த்22, காம, மோக்ஷமாகிய நான்கு புருஷார்த்தங்களையும் வேண்டுகிறோம்.

அத்தகைய பரமபதமானது ஆயிரங்கோடி ஸூர்யர்கள் ஒரு சேர உதித்தாற் போன்ற ஒளி உடையதாகவும், பொன்மயமானதாகவும், நித்யமானதாகவும், அழிவற்றதாகவும், பூர்ணமாகவும், கால, தேச, வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்டுள்ள சூர்யமண்டலமாக வேதங்களின் சாராம்சமாக விளங்கும் உபநிஷத்துகளில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளன. ஆனால் நாம் வாழும் சூர்யமண்டலத்திற்குட்பட்ட இந்த பூமியானது கால, தேச, வர்த்தமானமுடையதாகவும், பிரம்மாவின் ஆயுட்காலமான 1000 சதுர் யுகங்கள் முடிவடைந்த பிறகு இந்த சூர்யமண்டலத்தின் ஆயுள் முடிவுறும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த சூர்யமண்டலம் நிலையானதல்ல என்பதை முதல் அத்யாயத்திலும், மூன்றாவது அத்யாயத்திலும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

பரமபதமான சூர்யமண்டலத்தைப்பற்றி அறிவதற்கு முன் வேறு பல சூர்யமண்டலங்களின் விபரமும் வேதங்களில் கூறப்படுவதால், ஒவ்வொரு சூர்யமண்டலமாக விளக்கி, இறுதியில் ஜீவனுக்கு பிறப்பற்ற தன்மையாகிய (அழியாத்தன்மையாகிய) மோக்ஷத்தை அளிக்கக்கூடிய கால, தேச, வர்த்தமானத்திற்கும் அப்பாற்பட்டதுமான பரமபதமான சூர்யமண்டலத்தைப் பற்றி கூறியுள்ளேன்.

இனி ஒவ்வொரு மண்டலத்தைப் பற்றிய விவரத்தை சுருக்கமாக காணலாம். இரண்டாவது அத்யாயத்தில் ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒரு ஆத்மீக இதயம் தலைகீழாக தொங்கும் தாமரை போல் தொப்புளுக்கு மேலேயும், கழுத்தின் மூலத்திற்கு கீழேயும் உள்ளது. இந்த இதயமானது பௌதீக இதயமன்று. இது ஆன்மீக இதயம். இதன் நடுவில் நுட்பமான துவாரம் ஒன்று உள்ளது. அதனுள்ளே ஜீவாத்மாவாகிய தெய்வீக ஒளி உள்ளது. அந்த ஜீவாத்மாவாகிய ஆத்ம ஒளியையும் ஸரீரமாகக் கொண்டு பரமஅணுவாய் பகவான் அந்தர்யாமியாய் (அதனுள்) எழுந்தருளியுள்ளார். அவர் நாம் செய்யும் கர்மங்கள் அனைத்திற்கும் சாக்ஷியாய் விளங்குகிறார். சிறியதொரு கண்ணாடியில் மேலே உள்ள பெரியதொரு ஆகாஸம் தெரிவது போன்று, இந்த ஆத்மீக இதயமும், ஆகாஸமும், நக்ஷத்திரங்களுடன் கூடிய சூர்ய மண்டலத்தைப் போன்று விளங்குகிறது. எனினும், கர்மவினைகளுக்கேற்ப, ஆத்மாவிற்கு பல ஸரீரங்களானது பிரம்மாவின் பகற்பொழுதாகிய 1000 சதுர் யுகங்கள் முடியும் வரை உண்டாகும் என்றும், எந்த ஜன்மாவில் பகவானைப் பற்றிய சிந்தனை உருவாகி ஆத்மாவானது மோக்ஷத்தில் நாட்டம் கொள்கிறதோ, அந்த காலம் வரை பிறவிகள் தொடரும் என்று வேதங்கள் கூறுவதால், இந்த சூர்யமண்டலம் நிலையானதல்ல என்பதால், அடுத்ததாக மூன்றாவது அத்யாயத்தில் கூறப்படும் சூர்யமண்டலத்தை பற்றிய சுருக்க உரையை காணலாம்.

வேதங்களானது பகவானின் மூச்சுக்காற்றாக விளங்குகின்றன. அதில் ஜோதிடமும் ஒரு அங்கமாகும். அந்த ஜோதிடத்திலும் நாம் வெளியே காணும் சூர்யமண்டலத்தை பற்றிய விவரங்களும், கிரஹங்களை பற்றிய காரகத்வங்களும், கிரஹங்கள் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் (முக்யமான கிரஹங்கள் சேரும் காலகட்டத்தில்) தனிப்பட்ட மனிதனின் வாழ்வில் உண்டாகும் மாற்றங்களும் உலகில் பூகம்பம், யுத்தம், எரிமலை சீற்றம், பஞ்சம், அரசியல் மாற்றம் போன்ற சம்பவங்களும் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளன. தற்போது உள்ள விஞ்ஞான சாதனங்கள் எதுவும் இல்லாத காலத்திலேயே, தெய்வீக ஞானத்தைக் கொண்டு இவற்றை பற்றி அறிந்துள்ளனர். பஞ்சபூதங்களான பொருட்கள் அனைத்திலும், ஸப்தஜீவராசிகளிலும், வியாபிக்கப்படும் பொருட்களின் தோஷங்கள் ஒட்டாமல் ஒரு விசேஷமான நிலையில் பகவானின் லீலாவிபூதியாக உள்ள இந்த பூலோகத்தில் இயற்கையின் ஸத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகிய முக்குணங்களுடன் கூடியதாய் வியர்வை ஸ்ருஷ்டி, தாவர ஸ்ருஷ்டி, அண்டஸ்ருஷ்டி, கர்ப்ப ஸ்ருஷ்டி ஆகியவை ஒரே சமயத்தில் தோன்றியதாக (பகவானது அருளால் உண்டான பிரம்மனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டதாக) வேதங்களில் கூறப்பட்டுள்ளன. (விஞ்ஞானம் கூறுவதைப் போன்று பரிணாம வளர்ச்சி உண்டாகி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறவில்லை. இவ்வாறு நடந்துள்ளது என்பது உண்மை என்றால் தற்போது ஏன் அவ்வாறு உண்டாவதில்லை என்ற கேள்வி எழும்)

அவ்வாறு உண்டாக்கப்பட்டவர்களில் ஸாத்வீக குணமுடைய ரிஷிகளும், முனிவர்களும், ரஜோகுணத்தை உடைய தேவர்களும், மனுஷ்யர்களும், தமோ குணத்தை உடைய அசுரர்களும் இருந்ததாகத்தான் வேதங்கள் கூறுகின்றன. இவர்களில் ஸாத்வீக குணமுடைய ரிஷிகளால் பகவானுடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்றவாறு மந்திரங்களும், வேள்விகளும், இந்த காரண, காரிய பிரபஞ்சத்திலிருந்து கிரஹிக்கப்பட்டு, பாமர மக்களுக்கு அவர்கள் உணரச் செய்தார்கள் என்பது தான் உண்மை. இவ்வாறு விவரங்களை கூறும் வேதங்களில், அதன் அங்கமாக கருதப்படும் ஜோதிடத்தில் சூர்யனை பிரதானமாக்கொண்டு ஏனைய கிரஹங்களும், இவற்றிற்கு அப்பாற்பட்டு உள்ள நக்ஷத்திரமண்டலமும் நகரும் தன்மை உடையவை என்று கூறப்பட்டு, அவையாவும் 1000 சதுர் யுகங்கள் முடிந்த பிறகு, பகவானுக்கு ஸரீரமாக விளங்கும் ருத்ரனால் ஸம்ஹாரிக்கப்பட்டு, ஆலிலை மேல் பாலகனாய் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் வயிற்றுள் சென்றடைவதாக கூறப்பட்டுள்ளதால் நமது புறக்கண்களுக்கு தென்படும் நாம் காணும் சூர்யமண்டலமும் நிலையானதல்ல என்பதை கூறுவதாக அமைந்துள்ளது மூன்றாவது அத்யாயத்தில் கூறப்பட்டுள்ள சூர்யமண்டலமாகும்.

இனி நான்காவது அத்யாயத்தில் எம்பெருமானுடைய விஸ்வரூப நிலையில் மூவேழ் உலகங்களும் (பூலோகம் உட்பட) ஆவரண ஜலத்தில் அமிழ்ந்து விடாமல், நிற்பதெல்லாம் நெடுமால் என்ற ஆழ்வார்களின் போற்றுதலின் படி, தரித்து நிற்கப்பட்டுள்ளன என்றும், இந்த மூவேழ் உலகங்களும் எம்பெருமானின் திரிவிக்கிரம அவதாரத்தில் முதல் அடி வைப்பால் பூமி முதலான ஏழு லோகங்களும், இரண்டாவது அடி வைப்பால் தேவலோகமாகிய ஏழு லோகங்களும், மூன்றாவது அடி வைப்பால், மாபலியின் சிரசின் மீது கால் வைத்துக்கொண்டே பாதாள லோகம் வரையிலான கீழான ஏழு லோகங்களும் அளக்கப்படுவதாய் உபநிஷத்துகளில் (விஷ்ணு ஸூக்தம், புருஷ ஸூக்தம் போன்றவற்றில்) கூறப்படுள்ளன. இதில் ஏழு என்ற எண் முக்யத்துவம் பெறுகிறது. ஏழு ப்ரகாரங்களை கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதன், ஏழுமலைகளை சுற்றுகளாக கொண்டுள்ள ஸ்ரீ ஏழுமலையான், பகவானின் அம்ஸமாக விளங்கும் அரச இலையிலும், ஆலிலையிலும் படர்ந்துள்ள ஏழு ரேகைகளும், வராஹ ரூபம் போன்ற வடிவமைப்புடன் (ஒரு ரேகைக்கும் மற்றொரு ரேகைக்கும் நடுவில் உள்ள வடிவமைப்பு) உள்ளதை காட்டுகிறது. இதனால் தான் இன்றளவும் ஸங்கல்பத்தின் போது ஸ்வேத வராஹ கல்பம் என்றே கூறப்படுகிறது.

இந்த இரண்டு விளக்க உரைகளுமே திரிவிக்கிரம அவதாரத்தையும், வராஹ அவதாரத்தையும் பிரதானமாக கொண்டுள்ளன. ஆகையால் இன்றளவும் பகவானின் அவதாரங்களினாலேயே ஸகல புவனங்களும் தாங்கப்பட்டுள்ளன. இதுவே ஞானிகளின் பார்வையில் பூலோகம் (பூமி மற்றும் ஏனைய கிரஹங்கள், நக்ஷத்திர கூட்டங்கள் ஆகியவை அடங்கிய மண்டலமானது தட்டை போன்ற வடிவைமைப்பில் உள்ளதால்) தட்டையானது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு லோகங்களுக்கும் ஒரு சூர்யன் இருப்பதாகவும், அவை யாவும் பிரம்மாவின் பகற்பொழுது முடிந்தவுடன் பகவானிடத்திலேயே லயமடைவதாக வேதங்களிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளதால் இந்த சூர்யமண்டலங்களும் நிலையானதல்ல.

இனி ஐந்தாவது அத்யாயத்தில் சூர்யபுராணத்தில் வரும் சூர்யமண்டலத்தை பற்றியும், அதில் பன்னிரெண்டு ஆரங்களும் ஏழு குதிரைகளும் பூட்டிய ஒற்றை சக்கர தேரில் மூவேழ் உலகங்களுக்கும் சூர்ய ஒளியாகிய தனது கிரணங்களால் சூர்ய பகவான் ஒளியைக் கொடுத்து பவனி வருவதாக கூறப்படுள்ளது. வடதிசையாகிய மேலான திசையை நோக்கி சஞ்சரிக்கும் ஆறு மாத காலமானது உத்தராயண காலமாகவும், தென் திசையாகிய கீழான திசையை நோக்கி சஞ்சரிக்கும் ஆறு மாத காலம் தக்ஷிணாயன காலமாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக சஞ்சரிக்கும் காலமானது நமக்கு ஒரு வருஷமாகவும், மேலான உயர்ந்த இடத்தில் (வடதிசையில்) வாழும் தேவர்களுக்கு ஒரு நாளாகவும் கணக்கிடப்படுகிறது.

இந்த சூர்ய மண்டலமானது பகவானது விராடஸ்வரூபத்தில் பகவானின் வலது கண்ணாகவும் (கிழக்கு புறம்) அதற்கு நேர் எதிரில் பகவானுக்கு இடது கண்ணாக சந்திரமண்டலமும் (மேற்கு புறம்) விவரிக்கப்பட்டுள்ளது. மேல் புறமாகிய வடதிசையானது காரிய பிரபஞ்சத்தின் வடக்கு புறமாகவும், தேவர்கள் வாழும் பகுதியாகவும். அந்த பகுதிக்கும் மேலே தேவர்களின் உபாஸனைக்குறிய மூலப்ரக்ருதியும், திரிபாத் விபூதியும், பரமபதமுமாகவும், கீழ் புறமானது காரிய பிரபஞ்சத்தின் தென் திசையாகவும் அசுரர்கள் வாழும் பகுதியாகவும், நடுப்பகுதியானது நாம் வாழும் மனுஷ்ய லோகமாகவும் வர்ணிக்கப்படுகிறது.

காரிய பிரபஞ்சத்தின் மேற்கு புறம் அதாவது சூர்ய பகவானின் சூர்ய மண்டலத்தின் நேர் எதிர் தட்டில் சுருங்கி விரியும் பதினைந்து கலைகளை கொண்ட சந்திர மண்டலமாகவும் கூறப்பட்டுள்ளது. ( இந்த சந்திரமண்டலமானது உபநிஷத்தில் யக்ஷன் ஒருவனால் வைக்கப்பட்ட புல் ஒன்றினை வாயுவால் அசைக்க முடியவில்லை என்றும், அக்நியால் தஹிக்க முடியவில்லை என்றும் கூறி, இந்திரனே நேரில் வரும் போது, இந்திரனது புகழுக்கு பங்கம் ஏற்படக்கூடாது என்று எண்ணி அங்கு உமையானவள் தோன்றி, இது பரப்ரம்மத்தின் வெற்றி என்று தேவர்களுடைய கர்வத்தை நீக்கினதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இட்ட புல்லானது (ஒரு கலையானது) விரிந்து, பதினைந்து கலைகளாகி சூர்ய பகவானுக்கு எதிரே வரும் போது பௌர்ணமியாகவும், பதினைந்து கலைகளாகி சுருங்கி சூர்யனை நெருங்கி வரும் போது அமாவாசையாகவும் உலகில் கால அளவு உண்டாகிறது. இந்த விபரம் கேனோபநிஷத்தில் உள்ளது.)

சூர்ய புராணத்தில் வரும் சூர்யன் பவனி வரும் பன்னிரெண்டு ஆரங்களும், பன்னிரெண்டு மாதங்களாகவும், ஏழு குதிரைகளும் ஒரு வாரத்திற்குரிய ஏழு நாட்களாகவும் கருதப்படுகிறது. (விஞ்ஞானமும் சூர்யனின் ஒளியானது பிரமிடு போன்ற வடிவமைப்புள்ள முப்பட்டக கண்ணாடியில் பட்டு வெளி வரும் போது VIBGYOR என்ற ஏழு வகை வர்ணங்களாக காட்சி அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.)

ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் ஒரே அம்பால் ஏழு மராமரங்களை துளையிட்டதையும், மஹாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை அடக்கியதையும், ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழலால் ஏழு ஸ்வரங்களால் மதுரமான கானம் ஒலிப்பதையும் இங்கு அனுசந்திக்கதக்கது. திருவிழாவில் பன்னிரெண்டு தொட்டில்களை கொண்ட மேலிருந்து கீழ் நோக்கி வரும் பெரிய ராட்டிணமானது மின்சக்தியால் தூண்டப்பட்டு சுழல்கிறது. மின் சக்தி இல்லாத நேரத்தில் ஏழு பேர் ராட்டிணத்தின் மையப்பகுதியில் உள்புறம் நுழைந்து கால்களால் அழுத்தி சக்கரத்தை சுழற்றுவதை உவமையாக கொள்ளலாம். ஆனால் இந்த சூர்யனுக்கும் தாழ்வுகள் உண்டு என்று கூறி, பிரம்மனின் பகற்பொழுது முடியுந்தருவாயில் பகவானிடமே லயமடைவதாக கூறப்படுவதால் சூர்ய புராணத்தில் வரும் இந்த சூர்யமண்டலமும் நிலையானதல்ல.

இனி ஆறாவது அத்யாயத்தில் திருமால் பிரம்மாவின் கர்வத்தை நீக்குவதற்காக ப்ரஹ்ம கர்வ பங்கம் என்ற நிகழ்வின் மூலமாக, 3 1/2 கோடி (ப்ரஹ்ம அண்டங்களை ப்ரஹ்ம வித்துக்களை) கேசங்களாக கொண்ட ரோமஸ ரிஷியைப்பற்றி கூறி, ஒரு காரிய பிரபஞ்சத்தின் ஆயுள் முடிந்தவுடன் அதாவது ஒரு பிரம்மாவின் ஆயுள் காலம் முடிந்தவுடன், ரோமஸ ரிஷியிடமிருந்து ஒரு ரோமம் (ஒரு பிரம்ம வித்து) வெளிப்பட்டு மீண்டும் மூவேழ் உலகங்களை கொண்ட பகவானின் லீலா விபூதியாக பரிணமிப்பதாகவும், இவ்வாறு 3 1/2 கோடி ரோமங்களும் வரிசைக்கிரமமாக விழுந்து எப்பொழுது ரோமங்கள் இல்லாத ஸரீரமாக உண்டாகிறதோ அப்பொழுது தனது ஆயுட் காலம் முடியும் என்றும் ரிஷியின் வாக்காலேயே சொல்லப்படுகிறது.  

இவ்வாறு பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்வதற்கான ஆயுளைப் பெற்றிருந்தும் ரோமஸ ரிஷியானவர் எந்த வித கர்வமும் கொள்ளாமல் ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணனை நினைத்து அழியாத் தன்மையாகிய மோக்ஷத்தை அடைய விரும்பி தவமிருப்பதாக கூறுகிறார். இதற்கு பிறகும் எட்டு கோணல்களையுடைய அஷ்டவக்ர ரிஷியை திருமாலும், பிரம்மாவும் சந்தித்து அவரது ஆயுட் கால விவரத்தை கேட்க, அவரும் நீங்கள் சந்தித்த ரோமஸ ரிஷியின் ஒருவரது ஆயுட்காலம் முடிந்த பிறகு, தனது ஒரு கோணல் நிமிர்வதாகவும், இவ்வாறு எட்டு கோணல்களும் நிமிரும் வரை, தனது ஆயுட்காலம் உண்டு என்று கூறி, இருப்பினும் அழியாத்தன்மையாகிய மோக்ஷத்தை விரும்பி தானும் ஸ்ரீமந் நாராயணனை நினைத்தே ஆசிரமத்தில் தவமிருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த நிகழ்வின் மூலம் பிரம்மாவின் கர்வம் நீங்குவதாகவும், ஆனால் மேற்கண்ட ஒளிமண்டலங்களை ரோமங்களாக கொண்டுள்ள ரிஷியின் வாழ்வும், அஷ்டவக்ர ரிஷியின் வாழ்வும் நிலையானதல்ல என்பதை அவர்களது வாக்காலேயே கூறப்படுவதால் இந்த சூர்யமண்டலங்களும் ( பிரம்ம வித்துக்களும் ) நிலையானதல்ல என்பதை அறிகிறோம். இந்த நிகழ்வின் மூலம் 1000 சதுர் யுகங்களை கால அளவாக கொண்ட சூர்ய மண்டலமானது அதனை காட்டிலும் பல கோடி சதுர் யுகங்களை ஆயுளாக கொண்ட பகுதியை நோக்கி சென்று, கால, தேச, வர்த்தமானத்தை மிஞ்சக்கூடிய ஒளி மிக்க ஒரு சூர்யமணடலத்தை நோக்கி செல்வதை அறிய முடிகிறது.

பாலை தயிராக்கி, தயிரை கடைவதின் மூலம் வெண்ணெய் எடுக்கப்பட்டு, அதனின்றும் நெய் வார்த்து எடுக்கப்படுவதைப் போன்று இது வரை அறிந்த சூர்யமண்டலங்களையெல்லாம் கடைந்து, அதை காட்டிலும் பன் மடங்கு ஒளி மிக்க சூர்ய மண்டலங்களை உருவாக்கக்கூடிய ஒளிக்கடலை நோக்கி செல்வதாக ஏழாவது அத்யாயம் கூறப்படுள்ளது. கீழேயுள்ள மேலிருந்து கீழ் நோக்கி ஞானத்தை கொண்டு வரும் பட்சத்தில் ஒளிக்கடலிருந்து ஒரு திவலை வெளிப்பட்டு இதுவரை கூறப்பட்ட சூர்யமண்டலங்களை உருவாக்குவதாகவும் கொள்ள வேண்டியது. இந்த ஆறாவது அத்யாயத்தில் கூறப்பட்ட ரோமஸ ரிஷியின் ஒவ்வொரு மயிர்கால்களும் மூலப்ரக்ருதியில் பிரம்ம அண்டங்களானது மரத்திலிருந்து பூக்கள் பூத்துக் கனியாய் தொங்குவதைப் போன்று உவமை கூறப்பட்டுள்ளது. மாதுளம்பழத்தை சம பங்காக அறுத்து, மேலே ஒரு நூலில் தொங்கவிட்டு பார்த்தால், அதில் காணப்படும் மாதுளம்பழங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதையை காணுகிறோம். அந்த ஒவ்வொரு விதைக்கும் தலை ஒன்று, கண் ஒன்று, பாதம் ஒன்று;

அதே போன்று ஆண் மயில் ஒன்று தோகை விரித்தால் அந்த ஒவ்வொரு தோகைக்கும் தலை ஒன்று, கண் ஒன்று, பாதம் ஒன்று; மேலும் திருவீதிகளில் பகவான் அமர்ந்து உலாவரும் புஷ்ப பல்லக்கின் மேலான மூன்று அடுக்குகளில் தொடுக்கப்படும் காகிதப்பூ ஒவ்வொன்றுக்கும் தலை ஒன்று, கண் ஒன்று, பாதம் ஒன்று என்பதாக தோன்றுகிறது. இந்த மூன்று உவமைகளும் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:! ஸஹஸ்ராக்ஷ! ஸஹஸ்ரபாத்! என்ற புருஷ ஸூக்தத்தின் ஆரம்பத்தை நினைவில் கொள்ள வேண்டியது. பகவானின் லீலாவிபூதியில் ராமாவதாரத்தில் வரும் ராம பக்தனாகிய ஹனுமானின் ஒவ்வொரு ரோமங்களிலும் ஸ்ரீராமநாமம் ஒலிப்பதை உவமையாக கொள்ளலாம்.

இனி ஏழாவது அத்யாயத்தில் சூர்யமண்டலமாக கருதப்படும் திருப்பாற்கடலாகிய ஒளிக்கடலை பற்றிய விபரம் கூறப்பட்டுள்ளது. பகவான் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது ஸயனித்த நிலையில் ஜகத்ரக்ஷன சிந்தனையுடன் கூடிய மோனநிலையில் உள்ளார். இது அவர் முதல் அவதாரமாகும். காரிய பிரபஞ்சமாயிருக்கும் மூவேழ் உலகங்களையும் பிரதிபலிக்கும்படியான தேவதைகளை தமது தேஜஸ்ஸின் மூலம் உருவாக்கி அவர்களுக்கு அதிகாரங்களை அளித்து திட்டமிட்டு இயக்கும்படியான வியூஹ நிலையில் உள்ளார். அவர் எழுந்தருளியிருக்கும் திருப்பாற்கடலானது பொன்மயமானதாய் விவரிக்கப்பட்டுள்ளது.  

ஆகாஸத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்நி, அக்நியிலிருந்து நீர், நீரிலிருந்து மண் இவ்வாறாக ஒன்றின் திரண்ட திரட்சியாக மற்றொன்று உள்ளதைப் போன்று காலவியூஹமான பத்மமானது எட்டு இதழ்களாக வியூஹநிலையை மூடியுள்ளது. இந்த பத்மத்தில்தான் அஷ்டலெட்சுமி வாஸம் செய்கிறாள். இந்த அஷ்டலெட்சுமியின் வெளிப்பாடாக அஷ்டவக்ர ரிஷியின் வடிவமைப்பு உள்ளது. அந்த அஷ்டவக்ர ரிஷியின் வெளிப்பாடாக வேதங்களில் கூறப்படும் அஷ்டவஸுக்கள் (எட்டு சூர்யர்கள்) உள்ளது. இவை அனைத்துமே அஷ்டாங்க விமான கோபுரத்தின் வடிவமைப்பை போன்றே உள்ளது. இதற்கும் கீழே ஏழு சூர்யர்கள் ஏழு பீடமாகவும், ஏழு ரிஷிகளாகவும் வேதங்களில் கூறப்பட்டுள்ளன.

மேற்கூறிய இவை அனைத்துமே பகவானுக்கு மூலப்ரக்ருதியாகும். பகவானின் நாபிக்கமலத்திலிருந்து ஸ்ருஷ்டிக்குரிய பிரம்மன் இந்த மூலப்ரக்ருதியிலிருந்து வெளிப்பட்டு, முப்பத்து முக்கோடிதேவர்களையும், மூவேழ் உலகங்களையும் தோற்றுவித்து பகவானுடைய அருளால் தனது தொழிலை நடத்துகிறார். மூலப்ரக்ருதியில் அடங்கியுள்ள 8 x 3 1/2 = 28 கோடி அண்டங்களை வரிசைக் கிரமமாக பிரம்ம வித்துக்கள் தோன்றி அழியும் போது இந்த வியூஹமாகிய அனந்தபத்மநாபன் தனது மூலவியூஹமான அநிருத்தனிடம் சென்றடைகிறது. இது மஹாப்ரக்ருத ப்ரளயமாகும். ஆகவே திருப்பாற்கடலாகிய சூர்யமண்டலமும் நிலையானதல்ல

இதுவரை கூறப்பட்டது பகவானின் லீலாவிபூதியாகும். பகவானின் திருவடி பதிந்த ஷடாரியும், மூன்றாவது அடுக்கு விரிந்தும் முதல் அடுக்கு சுருங்கி உள்ளதையும் இங்கு அனுசந்திக்கதக்கது.

இனி எட்டாவது அத்யாயத்தில் இதுவரை கூறிவந்த சூர்யமண்டலங்களாகிய லீலாவிபூதியை காட்டிலும் பன்மடங்கு பெரியதான திரிபாத் விபூதியைப்பற்றிய விளக்கத்தையும் அதற்கும் மேலாக உள்ள பரமபதமாகிய நித்யமானதும், அழிவற்றதும், என்றும் நிலையானதுமாகிய பொன்போன்று பிரகாசித்து விளங்கும்படியான, ஆயிரம் கோடி சூர்யர்கள் ஒரு சேர உதித்தாலும், அவரது ஒரு திவலைக்கு ஈடாகாது என்பதற்கிணங்க உள்ள சூர்யமண்டலத்தைப் பற்றிய விளக்கமும் கூறப்பட்டுள்ளது. இந்த திரிபாத் விபூதியானது ஸங்கர்ஷனர், ப்ரத்யும்நர், அநிருத்தர் என்று மூன்று வியூஹ நிலைகளை (மூன்று பிரிவுகளாக உள்ள மும்மூர்த்திகளை) உடையதாக வேதங்கள் கோஷிக்கின்றபடியால் அநிருத்தனிடமிருந்து தோன்றிய பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மஹாவிஷ்ணுவானவர் அநிருத்தனிடமே லயமடைந்த பிறகு அதற்கு பிறகு வரிசைக்கிராமமாக மீதமுள்ள ஸங்கர்ஷனர், ப்ரத்யும்நர், போன்ற மூர்த்திகளிடமிருந்தும் மஹாவிஷ்ணுவானவர் அவதாரமாக மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு மீண்டும் தோன்றிய மஹாவிஷ்ணுவிடமிருந்து மீண்டும் லீலாவிபூதி இயங்க வாய்ப்புண்டு.

இவ்வாறு இந்த மூன்று வியூஹ மூர்த்திகளிடமிருந்து ஒவ்வொன்றாக முறையான ஒரு சுழற்சியாக லீலாவிபூதி தோன்றி இயங்க வாய்ப்புண்டு. மறுசுழற்சி வரும் போது பரவாஸுதேவனிடமிருந்து (ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து) மீண்டும் திரிபாத் விபூதி உண்டாகக்கூடியது என்பதால் இது நித்ய விபூதியாகும் இந்த நித்ய விபூதியானது நித்யஸூரிகளால் என்றும் பூர்ணமாயுள்ளது. இந்த நித்ய விபூதிக்கும் மேலாக உள்ளதுதான் பரமபத ஸ்தானமாகும்.

இந்த  பரமபதத்தில்  தான்  ஒன்றேயாகிய  பரம்பொருளாகிய  ஸ்ரீமந்  நாராயணன் அனைத்து ஆத்மாவிற்கும் மறு பிறப்பற்ற தன்மையாகிய மோக்ஷத்தை அளிப்பவராய் வீற்றிருக்கிறார். அவரே பரந்தாமன்! அவரே பரமாத்மா! அவரே பரப்ரஹ்மம்! அவரே பரஞ்ஜோதி! அவரே காயத்ரி மந்திரத்தில் கூறப்படும் பர்கோ தேவன் (ஒளிமிக்க தேவன்). அவரே தியானிக்க தக்க மேலான வஸ்து! அவரே உத்தமமான புருஷன்! அவரிடமிருந்து தான் லீலா விபூதியும், நித்ய விபூதியும் தோன்றுகின்றன. அவரிடத்திலே தான் மீண்டும் லயமடைகின்றன. நாம் எவையெல்லாம் உயர்ந்த தத்வங்களாக எண்ணுகின்றோமோ அவையெல்லாம் அவரிடத்தின்றே தோன்றி மீண்டும் லயமடைகின்றன. அவர் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த பரமபத சூர்யமண்டலமே நித்யமானது. அழிவற்றது. காலம் அங்கு ஆட்சி செலுத்துவதில்லை, கால, தேச, வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்ட ஸ்தானமாகும். முதலாவது அத்யாயத்தில் கூறப்பட்ட ஸங்கல்பத்தில் மேற்கொள்ளப்படும் யக்ஞமானது லயமடையும் ஸ்தானமாகும். ஸ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா! ஸ்ரீவிஷ்ணவே பரமாத்மநே இதம் நமம!!

இனி ஒன்பதாவது அத்யாயத்தில் முதலாவது அத்யாயத்தில் கூறியுள்ளபடி கர்ம மார்க்கமாய் ஸங்கல்ப ஞானத்தின் மூலம் பரம்பொருளை தியானிக்க தக்க வகையிலும் அல்லது பக்தி மார்கத்தின் மூலமாக அல்லது ஞானமார்க்கத்தின் மூலமாக பரம்பொருளை தியானிக்க தக்க வகையிலும், (ஞானமார்க்கமானது ஸந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம், அஷ்டாக்ஷ்ரா மந்திரமாகிய ஓம் நமோ நாராயணாய என்ற மந்திர ஜபத்தினை மேற்கொண்டு தவம் செய்வது) பகவானின் லீலாவிபூதியையும் நித்ய விபூதியையும் ஒரு சேர தியானிக்கதக்க வகையிலும், இறுதியாக பரமபதமாகிய மேலான சூர்யமண்டலத்தை ஒரு சேர தியானிக்கதக்க வகையிலும், தேரின் வடிவமைப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மைல்களை சுற்றளவாகக் கொண்ட உலகின் தோற்றமானது ஒரு சில சிறிய வரிகளைக் கொண்ட வரைபடமாக மனதில் கொள்ளப்படுகிறதோ, அது போலவே பகவானின் விராடஸ்வ ரூபத்தில், காரிய காரண பிரபஞ்சமானது தேரின் வடிவமைப்பாக கூறப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பின் மூலமாக பரம்பொருளை உயர்ந்த ஸ்தானத்தில் (கோவில் கருவறையின் மேலுள்ள அஷ்டாங்க விமான கோபுரமும் அதனினும் மேலாக உள்ள பரமபதமாக சூர்யமண்டலத்திற்கு உவமையாக உள்ள தங்க கலசமும்) தியானித்து ஜபம் செய்வது மூலமாக புருவமத்தியாகிய ஆக்ஞா சக்கரத்தில் ஒளி பெற்றவர்கள் ஆத்மசாதனையில் முன்னேற்றம் அடைவார்கள் என்பது உறுதி. இந்நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்த தேரின் வடிவமைப்பானது மிகவும் எளிதான முறையில் பகவான் குருவாயூரப்பன் பாடலில் திரு. சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களின் குரலில் கீழ்கண்டவாறு பாடப்பட்டுள்ளது.

உலகு என்னும் தேரினையே ஓடச் செய்யும் சாரதியே
காலம் என்னும் சக்கரமே அது உன் கையில் சுழலும் அற்புதமே
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா உன்
கோயில் வாஸலிலே தினமும் திருநாள் தானப்பா

தேரின் மேல்பாகத்தை வடக்கு திசையாகவும், ( உயர்கதியை வேண்டுவோர் வடதிசை நோக்கி தவம் இருத்தலை குறிக்கும்) கீழ் பாகத்தை தென் திசையாகவும், கிழக்கு திசையில் சூர்ய புராணத்தில் வரும் ஏழு குதிரைகளுடன் பூட்டப்பட்ட பன்னிரெண்டு ஆரங்களுடன் கூடிய ஒற்றை சக்கரத்தில் வரும் சூர்யனையும், மேற்கு திசையில் சுருங்கி விரியும் பதினைந்து கலைகளை கொண்ட சந்திரனையும் தியானிக்க வேண்டியது.

4ர்ம, அர்த்22, காம, மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களில் அர்த்தம் எனப்படும் செல்வமானது தர்மத்தை நாடியும், காமம் எனப்படும் விருப்பமானது மோக்ஷத்தை நாடியும் இருப்பது ஆத்ம முன்னேற்றத்திற்கு சிறந்தது என்று பெரியோர்களால் உரைக்கப்படுகிறது. அதுபோலவே,

ப்ரக்ஞானம் ப்3ரஹ்ம (ருக் வேதம்) பரப்ரஹ்மம் (ஸகல கல்யாண குணங்களை கொண்ட) உயர்ந்த ஞான வடிவமானது (தூய பேரறிவானது).

அயமாத்மா ப்3ரஹ்ம (அதர்வன வேதம்) இந்த ஆத்மாவும் ப்ரஹ்மத்திலிருந்தே தோன்றியதால் ப்3ரஹ்மத்தின் அம்ஸமே.

அஹம் ப்3ரஹ்மாஸ்மி (யஜூர் வேதம்) இந்த ஆத்மஞானத்தின் மூலமாக) நான் எப்போதும் பரப்ரஹ்மத்துடன் தொடர்புடையவனாய் இருக்கிறேன்.

தத்வமஸி (ஸாம வேதம்) (அவ்வாறு பகவானுடன் ஜீவாத்மாவானது பரமாத்வைப் பற்றிய ஞானத்துடன் தொடர்புடையதாக இருப்பதால்) அவரது அருளால் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

இந்த நான்கு வாக்யங்களையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது ஸகல கல்யாண குணங்களை கொண்ட பரப்3ரஹ்மமானது உயர்ந்த ஞானமுடையதாகவும், தூய பேரறிவாகவும் உள்ளது. நமது ஹ்ருதயத்தில் உள்ள ஆத்மாவும் பரப்3ரஹ்மத்தின் அம்ஸமே.

அதாவது ஆத்மாவானது பரமாத்மாவின் உடைமையாகவும், பரமாத்மாவிற்கு ஸரீரமாகவும் விளங்குகிறது. இந்த ஆத்ம ஞானத்தின் மூலமாக நான் எப்போதும் பரப்3ரஹ்மத்திடம் தொடர்புடையவனாக இருக்கிறேன். அவ்வாறு பகவானிடம் ஜீவாத்மாவானது எப்போதும் பரமாத்மாவைப் பற்றிய ஞானத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், அவரது அருளால் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்று தேறுகிறது.

ப்3ரஹ்மம். அது பூர்ணம். உலகு. இதுவும் பூர்ணம் பூர்ணத்திடமிருந்து பூர்ணத்தை எடுத்தும் எஞ்சியிருப்பதும் பூர்ணமாய் உள்ளது. ஆகவே இதுவெல்லாம் பூர்ணம். இவ்வாறு பரப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்ம ஞானியாகிறான். அவனுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும்.

- ஈஸாவாஸ்ய உபநிஷத்


கடலிலிருந்து மேகம் உருவாகி மழையாக வர்ஷித்து அருவிகளில் நீரோடையாக தவழ்ந்து நதிகளின் வழியாக குளம், கிணறு முதலியவற்றில் பரவி இறுதியில் கடலையே சென்றடைகிறது. இது பூர்ணமாயுள்ள ஒர் சுழற்சியாகும். அதே போன்று பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணாபரமாத்வானவர் கூறியுள்ளபடி அன்னத்தினால் உயிரினங்கள் வாழ்கின்றன, அந்த அன்னமானது மேகத்தால் மழை பொழிவதன் மூலமாக உண்டாகிறது. மேகமானது வேள்வியினால் உண்டாகிறது. வேள்வி கர்மத்தால் உண்டாகிறது. கர்மமானது வேதத்தில் நிலைபெற்றுள்ளது. வேதமானது அழிவற்ற பரப்ரஹ்மத்தின் மூச்சுக்காற்றால் உண்டாயிற்று. ஆகவே எங்கும் பரவியுள்ள வேதமானது எப்போதும் வேள்வியில் நிலைபெற்றுள்ளது. இது ஒரு சுழற்சியாகவே நடைபெற்றுக்கொண்டுள்ளது.

- கீதை 3-15


இந்த சுழற்சியைப் போன்றே திருப்பாற்கடலில் அனந்த ஸயன நிலையில் உள்ள மஹாவிஷ்ணுவின் திருவடிகளானது மஹாலெட்சுமியால் வருடப்பெறுவதால் உண்டாகும் ஆகாய கங்கை நீரானது மூவேழ் உலகங்களுக்கும் பரவி அனைத்து உணவுப்பொருட்களின் ரஸமாய் ஊடுறுவப்பெற்று "உண்ணும் உணவும், பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் எம்பெருமான் கண்ணனே " என்று நம்மாழ்வர்கள் பாடியபடி (தாழ்ந்த ப்ரக்ருதியில் சுத்த ஸத்வமாய் எப்போதும் நிலைத்திருக்கும்) ஆலிலை மேல் பாலகனாய் உள்ள கண்ணனின் திருவடி மூலம் சுவைக்கப்பெற்று ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்கிறபடி திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள எம்பெருமான் ஸ்ரீமாந் நாராயணனையே சென்றடைவதால் பூர்ணத்திலிருந்து பூர்ணத்தை எடுத்தும் எஞ்சியிருப்பதும் பூர்ணமாய் உள்ளது. அவதாரங்களின் மூலம் எப்போதும் லீலாவிபூதியானது ரக்ஷிக்கப்படுகிறது.

சூர்ய புராணத்தில் வரும் சூர்யனது ஒளியை காட்டிலும் பன்னிரு ஆதித்யர்களுடைய ஒளி விஞ்சியிருக்கும். பன்னிரு ஆதித்யர்களுடைய ஒளியை காட்டிலும் இந்திரன் முதலான தேவர்களின் ஒளி மிகுந்திருக்கும். அதனைக்காட்டிலும் உலக படைப்புக்கு காரணமான மூலப்ரக்ருதியினுடைய ஒளி அதிகமாயிருக்கும். மூலப்ரக்ருதிக்கு பரமபதத்தின் ஒளி மெருகூட்டும். இவ்வொளிக்கும் மேலே திருவாழியாழ்வானின் ( சுதர்ஸன சக்கரத்தின் ) ஒளி விஞ்சியிருக்கும். இவ்வனைத்து ஒளிக்கும் ஒளியூட்டக்கூடியது ஸ்வயம் பிரகாசமாய் உள்ள பரமபதநாதனாகிய எம்பெருமானுடைய திவ்ய மங்கள திருமேனியாகும். இந்த கூற்றானது பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் கூற்றாகும்.

விவேகானந்தர் கூறுகிறார்! உபநிஷதங்கள் அளவற்ற பலத்தை அனைவருக்கும் அளிக்கும் சுரங்கங்களாக உள்ளன. உலகங்கள் முழுவதற்கும் பலமளிக்கக்கூடிய தெய்வீக சக்தி அவைகளில் இருக்கின்றன. அவைகளின் மூலம் அனைவருக்கும் புத்துயிரும், புதுஉணர்ச்சியும் புது சக்தியும் அளிக்க முடியும். இந்த தெய்வீக ஒளியானது அலை, அலைகளாக இந்த உலகம் முழுவதும் நமது பாரதநாட்டிலிருந்து தான் பரவிச்செல்வதை எனது மனக்கண் முன் காண்கிறேன்.

பொன் போன்று பிரகாசித்து விளங்கும் சிறந்த புத்தி கோசத்தில் (பரமபதத்தில்) ஒன்றேயாகிய பரப்ஹ்மம் எழுந்தருளியுள்ளது. அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியாய் உள்ளது. ஸ்வயம் பிரகாசமான இதனை பின்பற்றியே மற்ற அனைத்தும் ஒளி விடுகின்றன. அங்கே சூர்யன் பிரகாசிப்பதில்லை; சந்திரன் பிரகாசிப்பதில்லை; நக்ஷத்திரங்கள், மின்னல், அக்நி ஆகிய எதுவும் பிரகாசிப்பதில்லை; இந்த பரப்ரஹ்மமே மேலும், கீழும், கிழக்கும், மேற்கும், தெற்கும், வடக்கும் எங்கும் வியாபித்துள்ளது.

- முண்டகோபநிஷத் 3-15


பேரொளியை உடைய ஆதித்யனுடைய மண்டலத்தில் எல்லா உலகிற்கும் ஆத்மாவாய், புருஷன் எனப்படுபவனாய் சங்கு, சக்ர கதாதாரிகளுடன்கூடிய திருமேனி உடையவனாய், எல்லா உலகங்களையும் ஒளிவிடச்செய்பவனாய், உலகிற்கு ஒரே சாக்ஷியான பரமாத்மாவை ஸகல புவனங்களுக்கும் மேலான பரமபத ஸ்தானத்தில் தியானித்து, அந்த உத்தம புருஷனே நான் என்ற அஹங்கார தத்துவத்தை உடையவனாய், நான் என்கிற எண்ணம் ஒடுங்கும் ஸ்தானமாய், புருவமத்தியில் அஷ்டாக்ஷர மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே எம்பெருமானின் திவ்ய திருமேனியை நிலை நிறுத்தும் பக்குவத்தை அடைவது மோக்ஷத்திற்குரிய சிறந்ததொரு ராஜபாட்டையாகும். (உபாயமாகும்)

கணக்கற்ற சித்தும் (ஜீவர்களும்) அசித்தும் (ஜடப்போருட்களும்) அடங்கியது உலகம். இவற்றை ஆட்சி புரியும் பரம்பொருளான திருமாலுக்கு காரண காரிய பிரபஞ்சமானது உண்மையான சரீரமாக உள்ளது. கர்ம மார்க்கத்தாலோ, பக்தி மார்க்கத்தாலோ, ஞான மார்க்கத்தாலோ ஜீவன் திருமாலைத் தஞ்சமாக பற்றி, பரமபதம் சென்று, ஞான விரிவு பெற்று, பேரின்பமடைந்து, திருமாலுக்கு தொண்டு செய்து கொண்டே, திருமாலுடன் ஒன்றி விடுவதே மோக்ஷம் என்பது எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம் ஆகும். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே படிப்படியாக எம்பெருமானைப் பற்றிய ஞானத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதே இந்நூலின் லட்சியமாகும்.

அடியேன் முன்னுரையில் கூறியிருப்பது போல், பகவானிடம் பக்தி செலுத்துவதின் மூலமாகவும், ஸந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம், அஷ்டாக்ஷர மந்திர ஜபம் முதலியவற்றை குல வழக்கப்படி அனுஷ்டிப்பதாலும் கிடைக்கப்பெற்ற மிகச்சிறிய ஞானத்தை கொண்டே இந்நூலை இயற்றியுள்ளேன். இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று உறுதியாக கூறாமல் "இது இவ்வாறு இருக்கலாம்" என்று கூறிக்கொண்டு அபிப்பிராய பேதமிருப்பின் "விஷ்ணுவின் புகழ் பாடும் நூல்" என்ற அளவில் கொண்டு எம்பெருமானின் அருளைப்பெற்றுய்யுமாறு பகவானிடம் வேண்டுகிறேன்.

காயநே வாசா மனஸேந்தி3ரியை வா
பு3த்3த்4யாத்மநாவா ப்ரக்ருதே: ஸ்வபா4வாத்!
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந்நாராயணயேதி ஸமர்ப்பயாமி!!

(இயற்கையின் ஸ்வபாவத்திற்க்கேற்ப சரீரத்தாலும், வாக்காலும், மனதாலும், இந்திரியங்களினாலும், புத்தியினாலும் செய்யும் செயல்களின் பலன்கள் யாவுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே ஸமர்ப்பணம்)

சுபம்

Lord Krishna

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.