ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

இரண்டாம் அத்யாயம்
( அந்தர் யாமித்வ நிலையில் அறியப்படும் ஸூர்ய மண்டலம் )
அம்ப4ஸ்யபாரே பு4வநஸ்ய மத்யே ..... க3ர்ப்பே4 அந்த: !

(மஹா நாராயண உபநிஷத்)

Hanuman

கரை காணவொன்னாத ஸமுத்ரத்திலும், ஸகல புவனங்களுக்கு நடுவிலும், வைகுண்ட லோகத்தின் மேலும் பெரியவற்றை காட்டிலும் பெரியவனான பிரஜாபதி தன்னுடைய தேஜஸ்ஸினால் சூர்யன் முதலான ஜோதிகளை வியாபித்துக்கொண்டு ஹிருதய குகையில் அந்தர் யாமியாய் வசிக்கிறார் என்பது இந்த நாரயண வல்லியின் முதல் மந்திரம்.

கரை காணவொன்னாத ஸமுத்ரத்திலும் என்பதால் க்ஷீராப்தி நாதனையும், ஸகல புவனங்களுக்கும் நடுவில் மேலானதொரு ஸ்தானத்தில் என்பதால் பரமநாதனையும், பெரியவற்றை காட்டிலும் பெரியவனான பிரஜாபதி என்பதினால் ராமகிருஷ்ணாதி அவதாரங்களையும் தன்னுடைய தேஜஸ்ஸினால் சூர்யன் முதலிய ஜோதிகளை வியாபித்திருப்பதால் அர்ச்சா நிலையம், ஹிருதய குகையில் அந்தர்யாமியாய் வசிப்பவர் ஆதலால் அந்தர்யாமித்வ நிலையும் உணர்த்தப்பட்டுள்ளன.

இதில் அந்தர்யாமியாய் பகவான் எழுந்தருளியுள்ள ஹிருதய குகையும் (ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ள ஆன்மீக இதயம்) ஒவ்வொரு சூர்யமண்டலமாக புருஷ ஸூக்தத்தின் மூலமாக அறியப்படுகிறது.

அந்த மவ்யயம் ..... ஸப்3ரஹ்மா ஸஸிவஸ்
ஸேந்த்3ரஸ் ஸோக்ஷர ! பரமஸ்வராட் ! - (நாராயண ஸூக்தம்)

எண்ண முடியாத அவதார ரூபங்களை உடையவனும், (அப்படி அவதாரம் செய்தும்) குறைவற்றவனாய் (பூர்ணமாயிருப்பவனும்), பாற்கடலில் பள்ளிகொண்டவனும், உலகிற்கெல்லாம் நன்மையைச் செய்பவனும் பகவான் நாராயணனே. இத்தகைய மஹிமை வாய்ந்த பகவான் ஒவ்வொரு மனிதனின் கழுத்தின் மூலத்திற்கு கீழேயும் தொப்புளுக்கு மேலேயும் கட்டை விரல் அளவில் தாமரை மொட்டு போல் தலைகீழாக ஹ்ருதயம் இருக்கிறது (இந்த இதயமானது நாம் நினைப்பது போன்ற பௌதீக இதயம் அல்ல, இது ஆன்மீக இதயம்). இந்த ஆன்மீக இதயமானது பௌதீக இதயத்திற்கு சற்று தள்ளியே நடுவில் உள்ளது. உலகிற்கெல்லாம் சிறந்த உறைவிடம் இந்த இதயம். அந்த இதயத்தின் நடுவே நுட்பமான துவாரம் உள்ளது. அந்த துவாரமானது ஒரு சிறிய ஆகாசத்தைப்போன்றது. (சிறிய கண்ணாடியில் இந்த வான்வெளி மண்டலத்தையும் சூரியனையும் காண்பது போல்) வெளியில் நாம் காணும் அத்தனையும் அதிலும் நுட்பமாக இடம் பெற்றுள்ளன. வானுலகும், பூவுலகும், சூர்யமண்டலமும் இதில் அடங்கும்.

அதன் நடுவில் எல்லா இடங்களிலும் பரவிய ஜ்வாலையுடன் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் ஜாடராக்னி இருக்கிறது. அந்த அக்னியானது அணையாததாகவும், ஒலித்துக்கொண்டும், சாப்பிட்டதை பிரித்துக்கொண்டும் தன்னுடைய சரீரத்தை உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையில் சூடு படுத்துகிறது. அந்த இதயத்தின் நடுவில் மெல்லியதாயும் மேல்நோக்கியதாய் இருக்கும் வந்ஹி சிகை இருக்கிறது. அது நீல மேகத்தை நடுவில் கொண்ட மின்னல் கொடி போல் ஒளியுடனும், நெல் உமி போல் மெல்லியதாகவும் மஞ்சள் நிறமானதாகவும் ஒப்பற்றதாகவும் இருக்கிறது. இந்த சிகையின் (திவ்ய மங்கள விக்ரஹத்தின்) நடுவில் பரமாத்மா எழுந்தருளியிருக்கிறார். அவரே பிரம்மனுக்கும், சிவனுக்கும், இந்திரனுக்கும் அந்தர்யாமி.

இந்த வானம் (நம் தலைக்கு மேல் தெரிகிற வானம்) எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இதயகாசம். வானுலகம், பூலோகம், கீழுலகம் இதில் அடங்கும். அக்னியும், வாயுவும், சூரியனும், சந்திரனும், மின்னலும், நக்ஷத்ரமும் இன்னும் வானத்தில் என்னென்ன உண்டோ அத்தனையும் இதில் அடங்கும் என்று சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது.

ஆத்மா தான் அடைந்துள்ள சரீரத்தின் புண்ய-பாப பலன்களை அனுசரித்து வாழ்வை அனுபவித்த பிறகு சரீரத்திற்கு மரணம் உண்டான பின் மறு சரீரத்திற்கு செல்வதாலும் (மறு ஜென்மம் அடைவதாலும்) எந்த ஒரு பிறப்பில் பகவானிடம் பக்தி பூண்டு பகவானைப் பற்றிய ஞானம் உண்டாகிறதோ அப்பொழுது ஆத்மாவானது சகல புவனங்களுக்கும் மேலானதொரு ஸ்தானமான பரமபதத்தை வந்தடைந்து ஆத்மாவிற்கு பிறப்பற்ற தன்மையாகிய முக்தி நிலையை அடைய தன்னுள் நுழைகிறது என்று பகவத் கீதையில் பகவான் கூறியுள்ளபடியால் நமது இதய ஆகாசமானது நிலையான ஓர் சூர்ய மண்டலமாகாது. மேலும், ப்ரஹ்மாவின் பகல் பொழுதாகிய ஸ்வேத வராஹ கல்பம் முடிவதற்கான ஆயிரக்கணக்கான யுகங்கள் வரை அவரவர்களின் கர்ம வினைக்கேற்ப பல சரீரங்கள் உண்டாகி பல ஜன்மங்களை எடுக்கிறது என்று வேதங்களிலும், பகவத்கீதையிலும் கூறப்பட்டுள்ள படியால் ஹ்ருதய ஆகாசத்தில் கூறப்படும் சூர்ய மண்டலமானது நிலையானதல்ல என்று அறிய முடிகிறது.

மேலும் வேதங்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. பகவான் விஷ்ணுவானவர் உள்ளும், புறமும் வியாபித்தும், அழிவுறும் ஜடப்பொருள்களிலும், அழிவற்றதாய் உள்ள ஆத்மாவிலும் அணுப்பிரவேசமாய் (அழிவற்றதாய்) வியாபித்தும் மேலானதாகவும், ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாற்பட்டதாகவும், நித்ய ஸூரிகளுடன் கூடியதாய், பரமபதநாதனாகிய மேலானதொரு சூர்ய மண்டலத்தில் ஆயிரம் கோடி சூரியர்கள் ஒரு சேர உதித்தாற்போல ஒளியுடையதாகவும், சங்கு, சக்ர, கதாதாரிகளுடன் கூடிய திவ்ய மங்கள விக்ரஹத்தை உடைய புருஷன் (பகவான்) எழுந்தருளியுள்ளார் என்று வேதங்கள் கூறுகிறபடியால் அந்தர்யாமியாய் உள்ள ஹ்ருதய ஆகாசத்தை தவிர்த்து, நாம் வாழும் பூமிக்கு பிரதான சக்தியாக விளங்கும் சூரியனையும், சூர்ய மண்டலத்தைப் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.