ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

மூன்றாம் அத்யாயம்

ஜோதீம்ஷி விஷ்ணு: ! பு4வனானி விஷ்ணு: ! வனானி விஷ்ணு: ! என்று விஷ்ணு புராணத்தில் பராசர மஹரிஷி கூறி உள்ளார்.

ஒளிர்வதெல்லாம் விஷ்ணுவே உலகங்கள் யாவும் விஷ்ணுவே வனங்களும் (காடுகளும்) விஷ்ணுவே என்பதிற்கிணங்க ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி காட்டும் ஜோதிஷமானது விஷ்ணுவின் மூச்சு காற்றாக விளங்கும் வேதங்களின் ஒரு அங்கமாகும். வேதத்தின் ஆறு அங்கங்களாக சிக்ஷ, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், ஜோதிஷம் என்பவை விளங்குகின்றன.

இதில் வேதத்தின் கண்களாக போற்றப்படும் ஜோதிஷமானது கணிதம், ஹோரா என்று இரண்டு ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கணித ஸ்கந்தத்தில் திதி, நாள், நக்ஷத்ரம், யோகம், கரணம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்ட பஞ்சாங்கம் எனப்படும் பஞ்சாங்க கணிதத்தில் யுகம், வருஷம், மாதம், திதி, நாள், நக்ஷத்ரம், போன்ற கால கணிதங்கள் குறிக்கப்படுகின்றன. ஹோரா ஸ்கந்தத்தில் உலக உயிர்களுக்கான பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான ஜாதக சாராம்சங்களும் மற்றும் பலன் முறைகளும் குறிக்கப்பட்டுள்ளன.

ஜோதிஷம் என்பது காலத்தைக்காட்டும் கண்ணாடி போன்றதாகும். இதனைக்கொண்டு, நாம் சுப பலன்களை அடையும்காலத்தை முன்பாகவே அறிந்து வாழ்வில் உயர்வடைவதற்கும், வரப்போகும் கஷ்டத்தை முன்னதாகவே அறிந்து எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கும் வழிகாட்டுவதற்கான ஒரு பாதையாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, மேகங்கள் சூழ்ந்த காலத்தில், மழை வருவதை நம்மால் தடுக்க முடியாது என்றாலும் முன்னெச்சரிக்கையாக ஒரு குடையை கையில் எடுத்துக்கொண்டு செல்வதால் மழையில் நனைவதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். இருட்டான பாதையில் செல்லும் பட்சத்தில் கையில் ஒரு விளக்குடன் சென்றால், பாதையை சரியான முறையில் அறிந்து செல்வதற்கு வழி வகுக்கும்.

இன்னும் இதைப்போன்று ஏராளமான உதாரணங்கள் கூறலாம். ஆதியில் வேதத்தில் கூறப்பட்ட கர்மங்களுக்கு விவாஹம், மனை கட்டுதல் போன்ற சுப காரியங்களுக்கு நல்ல காலம் காண்பதற்கும் சிறந்த பலன் அடைவதற்கும் இந்த ஜோதிஷம் பயன்பட்டது. தற்போது இவற்றுடன், வாழ்வில் இன்ப-துன்பங்களை அறிவதற்கும் உலகமக்கள் அனைவரும் ஜோதிஷத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

திதி2ர்விஷ்ணு:! ததா2வார:! நக்ஷத்ரம் விஷ்ணு ரேவச!
யோக3ஸ்ய கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜக3த்!!

பஞ்ச அங்கங்களாக கருதப்படும் திதி, நாள், நக்ஷத்ரம், யோகம், கரணம் ஆகிய அனைத்துமே (த்ரிபுவனம் விஷ்ணுமீஸம் நமாமி என்ற வேத வாக்கியத்தின்படி) விஷ்ணுமயமாகவே கருதவேண்டும். விஷ்ணுவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாகவே சூர்யன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நக்ஷத்ரங்களும் வேதங்களில் கூறப்படுகின்றன. ஆனால், பகவானின் லீலா விபூதியாக விளங்கும் இந்த காரிய பிரபஞ்சத்திற்கு சத்வம், ரஜஸ், தமோ குணமான மூன்று குணங்கள் உள்ளபடியால் இந்த மூன்று குணங்களின் பிரதிபலிப்பானாது புல் பூண்டு முதல் மனிதன் வரை உள்ள சகல ஜீவராசிகளிலும் காணப்படுகிறது.

பஞ்ச பூதங்களாகிய ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி ஆகியவற்றின் துணையுடன் நவக்கிரகங்களின் காரதத்வத்வங்களையும் இணைத்து பூமியும் அதில் வாழும் புல் பூண்டு முதல் மனிதன் வரை உள்ள சகல ஜீவராசிகளையும் ஸ்ருஷ்டிக்கும் உபகரணங்களாக பகவானால் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் விதிப்பயனை அளிக்கும் நீதிபதிகளாகவும் கிரஹங்கள் அமைந்துள்ளதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உதாரணமாக, ஒரு ராசியில் அதிக காலங்கள் தங்கும் சனி, ராகு, கேது, குரு ஆகிய கிரஹங்கள் ஒன்றுடன் ஒன்று இணையுங்காலத்தில் அல்லது ஒன்று மற்றொன்றை பார்க்கும் காலத்தில், மேலும் பூமிகாரகனான செவ்வாய் சேர்க்கை அல்லது செவ்வாய் பார்வை உண்டாகும் காலத்தில் அரசியல் மாற்றங்களும் உலகநாடுகள் ஒன்றுடன் ஒன்று போர் தொடுப்பதும், பூகம்பம், ஆழிப்பேரலை (சுனாமி), எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்களும் உண்டாகின்றன. மேலும், தனிப்பட்ட மனிதன் வாழ்க்கையிலும் இந்த கிரஹங்களின் சேர்க்கையின் போது குடும்ப பிரச்சினை, திடீர் விபத்து, பொருள் நஷ்டம், உடல் நலக்குறைவு போன்றவை நிகழ்வதற்கு காரணமாக அமைகின்றன.

மேலும், ஜோதிட சாஸ்திரமானது பூமியில் உள்ள ஜீவராசிகளை இயக்கும் கிரஹங்களாகத்தான் ஒன்பது கிரஹங்களையும் கூறுகின்றதேயன்றி பூமியை தவிர்த்து மற்ற கிரஹங்களில் ஜீவராசிகள் வாழ்வதாக கூறப்படவில்லை. ஒரு திண்பண்டத்தை தயாரிக்கும் போது அதற்கு தேவையான பொருட்களை வைத்துக்கொண்டு திண்பண்டத்தை தயாரிப்பது போலவும், ஒரு துணிமணியை உருவாக்கும் போது அதற்கு தேவையான பொருட்களை வைத்துக்கொண்டு துணிமணியை தயாரிப்பது போலத்தான் கிரஹங்கள் பகவானின் பயன்பாட்டிற்கு செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சனி, குரு, செவ்வாய் ஆகிய கிரஹங்கள் இருக்கும் ராசியிலிருந்து 5 ஆம் இடத்திற்கு சூர்யன் வரும்பொழுது, அவை வக்ரகதியை மேற்கொண்டு தான் கடந்து வந்த பாதையில் பின்னோக்கி சென்று, பிறகு 9 ஆம் இடத்திற்கு வரும்பொழுது வக்ர நிவர்த்தியாகி, முன்னோக்கி செல்ல ஆரம்பிக்கின்றன. மற்ற கிரஹங்களில் சூரியனுடன் புதன், சுக்ரன் 10 பாகைக்குள் அடங்கியிருந்தால் வக்ரகதியிலும், 10 பாகை தாண்டி இருந்தால் வக்ர நிவர்த்தியும் ஆகின்றன.

மற்றபடி, சந்திரனுக்கு வளர்பிறையில் ஒளி வளர்வதாகவும் தேய்பிறையில் ஒளி மங்குவதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ராகு, கேது கிரகங்களால் சூர்ய சந்திர கிரஹணங்கள் உண்டாவதையும் அந்த கிரஹணங்கள் உண்டாகும் காலத்தையும் மிகவும் துல்லியமாக கணக்கிட்டும் கூறியுள்ளனர். தொலைநோக்கிக் கருவிகள், மின்சார சாதனங்கள் இல்லாத காலத்திலும் இவ்வாறு கணக்கிட்டு கூறியிருப்பது மிகவும் அதிசயிக்கத்தக்க ஒன்றாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் வக்ரகதி கூறப்படவில்லை. ஆனால், சூரியனை பிரதானமாகக்கொண்டு நீள்வட்ட பாதையில் சலனத்தை செய்து வரும் ஒட்டு மொத்தமான கிரஹங்களின் அமைப்பே நகர்ந்து கொண்டு சென்று 1000 சதுர்யுகங்கள் முடிந்த பின் பகவானின் அம்சமாக விளங்கும் ருத்ரனால் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேற்கூறப்பட்ட வக்ர கதியானது பூமிக்கு உண்டானால் மனிதர்களாலும், ஏனைய ஜீவராசிகளாலும் உயிர் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது. பூமியின் 7 அடிச்சுவடுகளாக விளங்கும் பூமித்தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் போதே பூகம்பம், எரிமலை சீற்றம், ஆழிப்பேரலைகள் தோன்றி மனித குலத்தை அழிக்கும் போது வக்ரகதியில் செல்ல ஆரம்பித்தால் ஒட்டு மொத்த மனித குலமும், ஜீவராசிகளும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆதலால், பூமியை தவிர மற்ற கிரகங்களில் ஜீவராசிகள் முக்கியமாக மனிதகுலம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தான் வேதத்தின் அங்கமாக விளங்கும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

விஷ்ணு சஹஸ்ர நாமாவளியில் இருந்து சில நாமங்கள் :-

வ்யவஸாய நம: ! அனைத்து கிரஹங்களையும், நக்ஷத்ரங்களையும் உறுதியாக தன்னிடம் பிணைத்து வைத்திருப்பவர் (தனது விஸ்வரூபத்தால் அனைத்தையும் தாங்குபவர்)

வ்யவஸ்தாநாய நம: ! காலத்தின் பிரிவுகளான கலை, நாளிகை, பாகை, முஹூர்த்தம், ஹோரை, நிமிடம் ஆகியவற்றுக்கு அடிப்படையானவர்.

நக்ஷத்ர நேமிநே நம: ! நக்ஷத்ரங்களை சுற்றி வரச்செய்பவர். நக்ஷத்திர மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவர்.

நக்ஷத்திரிணே நம: ! நக்ஷத்திரங்களுக்கு உள்ளே இருக்கும் ஆதாரமானவர்

இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள சூர்யமண்டலமும் பிரம்மாவின் பகல் பொழுது முடியுந்தருவாயில் அழிவுறும் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ள படியால், இனி அடுத்ததாக வேதங்கள் கூறும் சூர்ய மண்டலத்தைப்பற்றி ஆராய்வோம்.

Hanuman

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.