ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

ஐந்தாம் அத்யாயம்
ஓம் பா4ஸ்கரயா வித்3மஹே!
மஹத்யுதித4ராய தீ4மஹி !
தந்நோ ஆதி3த்ய ப்ரசோத3யாத் !

பொருள் : தனது தேஜோமயமான ஒளியால் எல்லாப் பொருள்களையம் காண வைப்பவரும் எல்லாவற்றையும் (தனது கிரங்களால்) எடுத்துக்கொள்பவரும் மஹத்தானவரும் (வேதங்களில் மஹான் என்று போற்றப்படுபவரும்) ஆகிய சூரியனை தியானிப்போமாக.

சூர்யபுராணத்தில் கூறப்பட்டுள்ளபடி சூரியபகவான் பனிரெண்டு ஆரங்கள் கொண்ட ஒற்றைச்சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக பூட்டிக் கொண்டு பவனி வருகிறான் இந்த பகவான். இந்த தேரானது பகவான் விஷ்ணுவால் சூரியனுக்கு அளிக்கப்பட்டது.

இந்த சூர்ய பகவான் வடதிசை நோக்கி (மேல் நோக்கி) பயணம் செய்யும் காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு பகற்பொழுதாகும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் உத்தராயண காலமாகும்.

தென்திசை நோக்கி (கீழ் நோக்கி) பயணம் செய்யும் காலம் தக்ஷிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தக்ஷிணாயன காலமாகும். இது அசுரர்களுக்கு பகற்பொழுதாகும். தேவர்களுக்கு இராப்பொழுதாகும்.

எனவே தான் நமது முன்னோர்கள் உத்தராயண காத்தில் சுபகாரியங்களை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த சூரியபகவான் மூவுலகையும் தம்முடைய கிரணங்களால் பிரகாசப்படுத்தியவாறு சஞ்சாரம் செய்கிறார். சூர்யன் 12 ஆரங்களாகிய 12 ராசிகளில் சஞ்சரிக்கும் போது 12 ரூபங்களோடு அனைவரையும் அன்போடு கடாக்ஷிக்கிறார். வேத சாஸ்திரப்படி இங்கு சூர்யன் தான் மூவுலகையும் தனது கிரணங்களாலேயே ரக்ஷிப்பதால் சூர்யன் தான் உலகை சுற்றி வருகிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சூர்யன் தான் பரம புருஷனின் (விராடஸ்வரூபத்தில்) கண்ணாக போற்றப்படுகிறார்.

காஸ்யபருக்கும் அதிதிக்கு புத்திரனாக தோன்றியவர் இந்த சூர்ய பகவான். அந்த அதிதியானவள் மண்ணிலும், விண்ணிலும் பரவி இருக்கும் படியான ஒரு பெரிய அண்டத்தை பெற்றெடுத்தாள். அந்த அண்டத்திலிருந்து 12 வடிவனாக ஆயிரங்கிரணங்களையுடைய சூர்யன் தோன்றினார். மூவுலகங்களிலும் அவர் சஞ்சாரம் செய்து பகலை தோற்றுவிப்பதால் திவாகர் என்ற பெயரை சூர்யன் அடைந்தார். தம்முடைய கிரணங்களினால் அவர் அண்டசராசரம் முழுவதும் வியாபித்து அனைவரையும் காத்து ரக்ஷிப்பதால் சூர்யன் விஷ்ணு போன்ற பெயரால் அழைக்கப்படலானார். ஏனெனில் சூரியனுக்கு அந்தர்யாமியாய் பகவான் விஷ்ணுவே இருந்து இயக்குவதால் விஷ்ணு என்று பெயர் உண்டானது. இந்த சூரியனுக்கு சமுக்ஞா என்னும் உஷாதேவி என்ற பெயரை உடையவள் மனைவியானாள். இவர்களுக்கு வைவஸ்தமனு என்று பிரசித்தி பெற்ற சிரார்த்த தேவன் முதலில் பிறந்தான். அடுத்தது யமன் என்ற பிள்ளையும் யமுனை என்ற பெண்ணும் இரட்டைக் குழந்தைகளாக பிறந்தனர்.

நாளுக்கு நாள் சூரியனுடைய வெப்பம் அதிகரித்து வந்தது. ஸமுக்ஞாவினால் அந்த வெப்பத்தை தாங்க முடியவில்லை. அவள் தனது தந்தையிடம் கூறி தான் பிறந்த வீட்டிற்கே வந்து சேர்ந்தாள். தந்தையானவர் அவளுக்கு கணவருடன் சேர்ந்து வாழ்வதே சரியான வழி என்று பல முறை எடுத்து கூறியும் அவள் கேட்கவில்லை. அவள் தன்னைப் போலவே உருவம் படைத்த சாயாதேவியை உருவாக்கி சூரியனிடம் சிறிது காலம் வாழுமாறு அனுப்பி வைத்தாள். அவளும் ஸமுக்ஞாவின் கட்டளைப்படி சூரியனுடன் வாழ்ந்து வந்தாள். சூரியனும், சாயாதேவியானவள் ஸமுக்ஞாவைப் போன்றே உருவ ஒற்றுமையுடன் இருந்தபடியால் எவ்வித சந்தேகமும் கொள்ளவில்லை. இவர்கள் இருவருக்கும் ச்ருதச்ரவஸ், ச்ருதக்மா என்ற இரு புத்திரர்களும், தபதி என்ற பெண்ணும் பிறந்தார்கள். தனக்கு குழந்தைகள் பிறந்தபிறகு ஸமுக்ஞாவின் குழந்தைகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருதலானாள், இதனால் யமனுக்கு சாயாதேவிக்கும் ஒரு நாள் வாக்கு வாதம் உண்டாகி ஒருவரை ஒருவர் சாபமிட்டுக்கொண்டனர்.

யமன் நடந்த விபரத்தை தந்தை சூரியனிடம் கூற சூரியனும் கோபங்கொண்டு சாயாதேவியிடம் குழந்தைகளிடம் பக்ஷ பாதத்தோடு நடந்து கொண்ட காரணத்தை கேட்டார். சாயாதேவியும் தான் ஸமுக்ஞாவினால் உண்டாக்கப்பட்டதையும் அவள் இடத்தில் தன்னை விட்டு சென்றதையும் விவரமாக கூறினாள். தன்னை மன்னிக்கும் படியும் வேண்டினாள். சூர்யனுடைய கோபம் ஸமுக்ஞாவின் பக்கம் திரும்பியது. அவளைத் தேடிக்கொண்டு மாமனாராகிய விஸ்வகர்மா வீட்டிற்கு சென்றார். விஸ்வகர்மாவிற்கு விஷயம் விளங்கிவிட்டது. அவரை சாந்தம் கொள்ள வேண்டியபடி வரவேற்றார்.

சூரியனுடைய தேஜஸ்ஸின் உக்கிரத்தை தாங்க முடியாததால் தனது மகள் தனது வீட்டிற்கு வந்த விபரத்தை தெரிவித்தார். மேலும் தனது மருமகனாகிய சூரியனிடம் மிகவும் உக்கிரமான தேஜஸ்ஸை சாந்தப்படுத்துவதற்கான வழியை கூறினார். சாணைக்கல்லிலே சாணம் பிடித்து தேவையற்ற அம்சங்களை விலக்கி விட்டால் வெப்பம் தணியும் என்று கூறினார். சூரியனும் சிறிது நேரம் சிந்தித்த பிறகு ஸமுக்ஞாவை அடைவதற்காக அந்த யோசனையை ஒப்புக்கொண்டார். விஸ்வகர்மா மிகுந்த சந்தோஷத்துடன் சாகத்வீபத்துக்கு சூரியனை அழைத்துச் சென்று அங்கே அவருடைய மண்டலத்தை சாணை பிடித்தார். அவருடைய உக்கிரத்தன்மை குறையவே அவர் மேனி முன்னை விட மேலும் அழகாக விளங்கியது.

யோக சக்தியால் ஸமுக்ஞா இருக்குமிடத்தை சூர்யன் அறிந்தார். குதிரை ரூபம் கொண்டு மேய்ந்து கொண்டிருந்த ஸமுக்ஞாவிடம் தானும் குதிரை ரூபங்கொண்டு அவள் அருகில் நெருங்கி அணைத்ததில் வீர்யம் வெளிப்பட்டது. யாரோ அந்நிய புருஷன் என்று நினைத்துக்கொண்டு அந்த வீர்யத்தை தனது கருவில் தங்க வைக்காமல் மூக்கின் வழியாக வெளிப்படுத்தியதில் அது சூரியனது அம்சமாக இரு குழந்தைகளாக தோன்றியது. அவர்களே அஸ்வினி தேவர்கள் ஆனார்கள். சூர்யன் தனது சுய ரூபத்தை எடுத்தவுடன் ஸமுக்ஞாவும் தனது சுய ரூபத்தில் தோன்றினாள். அப்போது அவள் அழகில் மயங்கி அவளை அணைத்ததில் ரைவதன் என்ற மகன் உண்டானான். பிறகு இருவரும் தமது ஸ்தானமான சூர்ய மண்டலத்தை அடைந்தனர்.

சிரார்த்ததேவன், யமன், யமுனை, ச்ருதச்ரவஸ், ச்ருதகர்மா, தபதி, அஸ்விநி தேவர்கள் இருவர், ரைவதன் ஆகியோர் சூர்யனிடமிருந்து உண்டானார்கள். இதில் விஸ்வகர்மாவானவர் சூர்யனுடைய தேஜஸ்ஸின் உக்கிரத்தை குறைக்க அவர் மண்டலத்தை சாணைபிடித்து அவருடைய உக்கிரத் தன்மையை குறைத்ததற்கான தாழ்வு உண்டென்பதாலும் பிரளய காலத்தில் சகல லோகங்களிலும் வியாபித்தவராகவும், சராசரமயனாகவும், இந்த உலகை படைத்து, ரக்ஷித்து, முடிவில் தன்னிடத்தில் ஒடுக்கிக் கொள்ளும் பகவான் ஸ்ரீ மந் நாராயணிடத்தே இந்த சூர்ய மண்டலமும் மூன்று லோகங்களும் ஒடுங்கி விடுவதால் சூர்ய புராணத்தில் வரும் சூர்யனும், சூர்ய மண்டலமும் நிலையானதல்ல என்பதால் இதனை காட்டிலும் பல்லாயிரம் யுகங்கள் ஸரீரமாக கொண்டுள்ள சூர்ய மண்டலத்தை பற்றி வேதங்கள் கூறியுள்ளதை அறியலாம்.

Horses

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.