ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

6-வது அத்யாயம்
(பி3ரம்மக3ர்வ ப4ங்க3ம்)
நமோ அஸ்த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே!
ஸஹஸ்ர பாதா3க்ஷி சிரோரு பா3ஹவே!
ஸஹஸ்ர நாம்நே புருஷாய சாச்வதே!
ஸஹஸ்ர கோடி யுக3தா4ரினே நம:

பொருள் : ஆயிரக் கணக்கான உருவங்களை உடையவனும் ஆயிரக்கணக்கான கால்கள், கண்கள், தலை, தொடைகள், கைகள், ஆகியவைகளை உடையவனும் ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவனும் புருஷ ஸப்தத்தினால் (வேதங்களில்) சொல்லப்படுபவனும் சாச்வதமாயிருப்பவனும் ஆயிரம் கோடி யுகங்களை தரிப்பவனுமான அநந்தனுக்கு நமஸ்காரம் என்று பிரம்மாவால் அநந்த ஸப்தம் விவரிக்கப்பட்டது.

ஸாதாரணமாக ஒரு காரிய பிரபஞ்சத்தை மட்டுமே பகவான் விஷேசமான நிலையில் கம்பீரமாக தரித்துள்ளதாக கூறுவதாயிருந்தால் ஸஹஸ்ர யுக தாரிணே நம: என்று மட்டுமே போற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில்! ஆயிரம் சதுர் யுகங்களோடு ஒரு பிரம்மனின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஆனால் மேற்கூறப்பட்ட பிரம்மனின் உரையில் ஆயிரங்கோடி யுகங்களை தரித்திருக்கிறார் என்று போற்றப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் என்பதற்கு அநந்தம் (எல்லையற்றது, கணக்கற்றது என்பதற்கும்) பொருந்துவதாக இருக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்காணும் பிரம்ம கர்வ பங்கம் என்றொரு நிகழ்ச்சி மிகவும் பொருந்துவதாக அமைந்துள்ளது.

ஒரு சமயம் பிரம்மன் தம்மைப்போல் நீண்ட ஆயுள் உடையவர் யாரும் இல்லையென கர்வம் கொண்டார். வைகுண்டம் சென்று திருமாலை சந்தித்து என் ஆயுட்காலம் போல் ஜீவித்திருப்பவர்கள் யாரேனும் உண்டா எனக்கேட்டார். அதற்கு திருமால் உன் பெருமையை நான் சொல்வதை விட சில முனிவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்று கூறி பிரம்மனை அழைத்துக்கொண்டு ஒரு காட்டு வழியே சென்றார். காட்டில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதை கண்டனர். அவர் உடலெல்லாம் ரோமங்களாக இருந்தன. அதனால் அவர் ரோமஸ ரிஷி எனப்பட்டார்.

முனிவர் திருமாலை பணிந்து, அவர்கள் வந்த காரணத்தை கேட்டார். திருமால், முனிவரே! உங்கள் ஆயுட்காலத்தை அறியவந்தோம் அதை பிரம்மனுக்கு சொல்லுங்கள் என்றார். முனிவர் கூறினார்; ஸ்வாமி! என் உடலில் 3 கோடியே 50 லக்ஷம் ரோமங்கள் உள்ளன. நீங்கள் அழைத்து வந்திருக்கும் இந்த பிரம்மாவின் ஆயுட்காலம் முடிந்தால் என் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிரும் அத்தனை ரோமங்ளும் உதிர்ந்தால் என் ஆயுள் முடியும். "இத்தனை காலம் வாழ்வது என்றால், நீங்கள் சுகபோகத்துடன் இருக்க வீடு வேண்டாமோ!" என்று திருமால் கேட்க; பரமபதநாதனாகிய ஸ்ரீமந் நாராயணனை அடைவதே அழிவற்ற வீடுபேறு (மோக்ஷம்) தேகாபிமானம் வேண்டியதில்லை. இந்த ஆசிரமமும், பாயும், திரிதண்டியும் ஆகிய இவை மட்டுமே போதும். நீர்க்குமிழிக்கு நிகரான நிலையற்ற உடம்பை காக்க கவலைப்படக்கூடாது. அது துயரத்தை தரும் என்று கூறி மீண்டும் நாராயணனை நினைத்து தவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். திருமாலும், பிரம்மாவும் விடைபெற்றனர்.

இருவரும் அடுத்த வனத்தை அடைந்தனர். அங்கே அஷ்டவக்கிரன் எனும் முனிவரை கண்டனர். உடம்பெல்லாம் (சிலந்திப்பூச்சி போன்று) எட்டு கோணல்களை கொண்டதால் இப்பெயர் பெற்றார். திருமால் முனிவரிடம் அவருடைய ஆயுட்காலத்தை பற்றி கேட்டார். அதற்கு அஷ்டவக்கிர முனிவரானவர் கூறினார்; 3 1/2 கோடி பிரம்மாக்கள் இறந்தால் நீங்கள் சந்தித்த ரோமஸ முனிவரின் ஆயுட்காலம் முடியும். அபபொழுது என் உடம்பில் உள்ள எட்டு கோணல்களில் ஒன்று நிமிரும் அவ்வாறு ரோமஸ முனிவர் எட்டு தடவை பிறந்து இறந்தால், என் உடம்பில் உள்ள எட்டு கோணல்களும் நிமிரும் அவ்வாறு எட்டு கோணல்களும் நிமிர்ந்தால் தம் ஆயுள் முடியும் என்றார். அத்தனை காலம் உடலைக் காக்க அழகான வீடு வேண்டாமோ என்று கேட்டார். அதற்கு அவரும் அழியும் உடலை காப்பதில் நாட்டம் கொண்டால் அழியாத வீடு போன்ற (மோக்ஷத்தை தரும்) ஸ்ரீமந்நாராயணனை வழிபடும் எண்ணத்திற்கு தடை உண்டாகும். தேகாபிமானம் உள்ளவரை அஞ்ஞானம் போகாது. என்று கூறி மீண்டும் ஸ்ரீமந் நாராயணனை நினைத்து தவத்தை மேற்கொள்ளலானர்.

பிறகு பிரம்மாவும், திருமாலும் வைகுண்டம் திரும்பினர். திருமால் பிரம்மாவைப் பார்த்து, "பிரம்மனே! நீங்கள் சந்தித்த முனிவர்கள் இருவரும் இந்திரியங்களை வென்றவர்கள் தேகாபிமானத்தை விட்டவர்கள். ஞானம் என்னும் பேரொளியால் (பிரம்ம வித்துக்கள்) அஞ்ஞான இருளை விரட்டியவர்கள் அவர்கள் கூறியதை கேட்டாயா! உன்னிலும் எத்தனை மடங்கு ஆயுள் விருத்தி உடையவர்கள் என்பதை புரிந்து கொண்டாயா! நான் என்ற அகங்காரம் உன்னை ஆட்டி வைத்தது. கர்வம் கொள்பவர்கள் உயர்கதியை அடைய முடியாது. எனவே அகந்தையை விட்டு அடங்குக" என்று அறிவுறுத்தினார்.

மேற்கூறிய நிகழ்ச்சியிலிருந்து, வெளிப்பட்ட ஒரு காரிய பிரபஞ்சத்தில் சிரஞ்ஜீவியாக வாழும் ஹனுமானின் ஒவ்வொரு ரோமத்திலும் ராமநாமம் ஒலிப்பதை போன்று ரோமஸ ரிஷியின் ஒவ்வொரு மயிர்க்காலும் ஒரு பிரம்ம அண்டத்தை உருவாக்கக்கூடிய விதையாகும். வெளிப்பட்ட இந்த காரிய பிரபஞ்சத்தின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவரிடமிருந்து ஒரு மயிர்க்கால் (பிரம்மவித்து) வெளிப்பட்டு மீண்டும் ஒரு காரிய பிரபஞ்சம் உருவாக்கப்பட்டு மூன்று லோகங்கள் கூடியதாய் வெளிப்பட்டு பிரம்மனால் சிருஷ்டி இயக்கம் துவக்கப்படுகிறது. அதை வைத்துதான் மஹா ஸங்கல்பத்தில் இந்த வடிவ ஞானம் பெறுவதற்காக அநேக கோடி பிரமாண்ட கரண்ட மண்டலே என்று வர்ணிக்கப்படுகிறது.

மேலும் ஆழ்வார்களும் அண்டக்குலத்துக்கு அதிபதியாகி என்று பாடியுள்ளனர். உபநிஷத்துகளிலும் ப்ரக்ருதி மண்டலத்திற்கு மேற்பட்டவரும் மூலப்ரக்ருதியை ஸரீரமாக கொண்டிருப்பவரும், சூர்யன் போன்ற வர்ணத்தை உடையவரும் பிரம்ம அண்டத்தை உருவாக்கியவரும், அநேக கோடி பிரம்ம அண்டங்களை தனது மூலப்ரக்ருதியில் தாங்கிக் கொண்டிருப்பவராயும், எல்லாவற்றை காட்டிலும் மேலானவராயும் நித்யமானவரும் ஆத்மாவுக்கு அழியாத்தன்மையாகிய மோக்ஷத்தை பரமபதத்தில் அளிப்பவராயுள்ளவர். பரமபதநாதனாகிய ஸ்ரீமந் நாராயணன் ஆகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மூலப்ரக்ருதியில் அநேக கோடி பிரம்ம அண்டங்கள் உள்ளதாய் குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் இந்த ரோமஸ ரிஷியின் மயிர்க்கால்களும், அஷ்ட வக்கிர மஹரிஷியின் எட்டு கோணல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை அறியவேண்டும். மேலும் அநேக கோடி பிரம்ம அண்டங்கள் இருப்பதாக புண்ய காலங்களில் நாம் சொல்லும் ஸங்கல்பத்திலிருந்து தெரிகிறது. விராட புருஷனுடைய தேஹத்தில் ஒவ்வொரு மயிர்கால்களிலும் ஒவ்வொரு அண்டங்கள் தொங்குவதாக படிக்கப்பட்டிருக்கிறது. பரதத்வம் நிர்ணயம் செய்த பெரியாழ்வாரும், திருப்பல்லாண்டில் அண்டக்குலத்துக்கு அதிபதியாகி என்று அருளிச்செய்து பல அண்டங்கள் உள்ளதென்றும் அதற்கு அதிபதி அச்யுதன் என்றும் காட்டி இருக்கிறார்.

பூமியையும், ஆகாயத்தையும் வியாபித்து தன் சக்தியாலே அவற்றை சுற்றிலும் தரித்து நிற்பவராகவும், ஜீவாத்மா ஸமூகத்தை தன்னுள் கொண்டிருக்கையாலே ஹிரண்யகர்பன் எனப் போற்றப்படுகிறார். கீழே உள்ள பிரபஞ்சத்திற்க்கெல்லாம் மேலாயிருப்பவரும், பிரம்மாவின் உற்பத்திக்கு காரணமாயுள்ள பொன்மயமான அண்டத்தை தம்முள் வைத்திருப்பவராகவும், ரிஷிகள் ஸ்தானத்திற்கும் உயர்ந்த ஸ்தானமாயுள்ள பரமபதத்தில் திருமேனியுடன் கூடியிருப்பவர் என்று உபநிஷத் வாக்யங்கள் கூறியுள்ளதை இங்கு அனுசந்திக்கத்தக்கது.

இவ்வாறு கணக்கற்ற அண்டங்களாகிற பரமாணுக்கள் உலாவுவதற்குறிய ஜன்னல்கள் போன்ற ரோமக்கால்களை உடையவர் என்று ஸ்ரீமந் நாராயணீயத்திலும் கூறப்பட்டுள்ளது. (கீழே பிரமாண்டங்களானது மயில் தோகைக்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.) பற்பல வண்ணங்களை கொண்ட மயில் தோகையால் சுற்றப்பட்டு (ஸ்ரீமந்நாராயணீயம் 100-வது சதகம்) (மயில் தோகை ஒவ்வொன்றுக்கும் ஒரு தலை. ஒரு கண், ஒரு கால் ) ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: (ஸஹஸ்ராக்ஷ) ஸஹஸ்ரபாத்.... என்கிற படி மயில் தோகைகள் 1000 என்று எடுத்துக்கொண்டால் ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள், என்கிற படி ஆயிரம் தலைகளுக்கு இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரம் கால்கள் என்று எடுத்துக் கொள்ள அவசியமில்லை என்பதாகிறது. கணக்கற்ற என்று எடுத்துக் கொண்டாலும் கணக்கற்ற தலைகள், கணக்கற்ற கண்கள்,கணக்கற்ற கால்கள் என்று எடுத்துக் கொள்ள தடையில்லை.

மும்மூன்றான அநேக கோடி பிரம்மாண்டங்களை தன்திருவயிறகத்தே வெளியே தெரியாது அடக்கி கொண்டிருந்தாலும் மெல்லிய கொடி போல் தங்கள் சிற்றிடை விளங்குகிறது. (100 வது சதகம் 7 வது ஸ்லோகம்) என்று குருவாயுரப்பனை புகழ்ந்து பாடியுள்ளார் நாராயண குருஸ்வாமிகள். (இங்கு ஒவ்வொரு அண்டவித்துக்களிலும் தேவலோகம், பூலோகம், கீழுலகம் என மூன்று அடுக்குகளாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. )

ஆயிரக்கணக்கான ப்ரஹ்ம அண்டங்களை தோற்றுவிக்கக்கூடிய மூலப்ரக்ருதியாகி ப்ரஹ்ம வித்துக்களை ஸரீரமாக உடையவரும், புருஷ ஸப்தத்தினால் வேதங்களில் சொல்லப்படுபவராயும், ஸாஸ்வதமாயிருப்பவரும், ஆயிரங்கோடி யுகங்களை தரிப்பவரும், அநந்தன் என போற்றப்படுபவராயுள்ளவர் ஸ்ரீமந் நாராயணன்.

பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என இந்த காரிய பிரபஞ்சமானது. எட்டு விதமாக பிரிந்துள்ளது. இது எனது ப்ரக்ருதியில் தாழ்மையானது. அதைக்காட்டிலும் உயர்ந்த ப்ரக்ருதியானது மேலேயுள்ளது. அதுவே ஜீவன் என்றும் ஸூத்ராத்மா என்றும் மூலப்ரக்ருதி என்றும் அழைக்கப்படுகிறது. அதன் வழியாக ஸகல லோகங்களையும் தாங்குகிறேன். இவ்விரண்டு ப்ரக்ருதியிலிருந்தே ஸகல பூதங்களையும் தோற்றுவிக்க காரணமும், அழிவுக்கு காரணமும் ஆகி, நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் போலும் (மரத்தில் பழங்கள் தொங்குவது போல்) இவையாவும் என்னையே பற்றிக் கொண்டு நிற்கின்றன. (பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா கூறியுள்ளதை இங்கு அனுஸந்திக்கத்தக்கது.)

மேலும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா கூறுகிறார் ஸம்ஸாரமென்ற அஸ்வத்த விருக்ஷ(அரசமர)மானது. மேலே வேரும், கீழே கிளைகளும் கொண்டது. அது பிரளய காலம் வரை அழிவில்லாதது. வேதங்கள் அதன் இலைகள். விருக்ஷத்தின் கிளைகள் மேலும், கீழும் பரவியுள்ளன. அவை ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் வளர்ந்தவை சப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்தம் எனும் புலன்களின் விஷயங்களை தளிர்களாக கொண்டவை. கர்மங்களை பின்பற்றி அந்த மரத்தின் வேர்கள் கீழே மனுஷ்ய லோகத்திலும் பரவியுள்ளன. (ஆலமரத்தின் விழுதினைப் போல்) இந்த ஸம்ஸார விருக்ஷத்திலிருந்து விடுபட என்னைப்பற்றிய சிந்தனையுடன் பற்றில்லாமல் கடமையைச் செய்து இந்த பழமையான ஸம்ஸார விருக்ஷம் யாரிடமிருந்து உண்டாயிற்று என சிந்தித்து அத்தகைய ஆதி புருஷனான என்னை சரணமடைந்து ஆத்ம முக்தி (மோக்ஷம்) அடைய வேண்டுமென்று கீதையில் பகவான் உபதேசித்தருளியதையும் இங்கு சிந்திக்க வேண்டும்.

பா3ஹா பீ3டரபி4 ராமய ராமய குண்ட2 மேத4ஸே!
ரமா மாநஸ ஹம்ஸாய கோ3விந்தா3ய நமோ நம:

மயில் தோகையினால் அழகுடையவனும், உலகையெல்லாம் ரமிக்கச் செய்பவனும், குறைவற்ற ஞானத்தை உடையவனும், லக்ஷ்மி தேவியின் மநஸ்ஸாகிய மாநஸ ஸரஸ்ஸில் விளையாடும் ஹம்ஸமாயிருப்பவனுமான கோவிந்தனுக்கு நமஸ்காரம்

- கோபாலதாயிந்யுபனிஷத்

அண்டக்குலத்துக்கு அதிபதியாகி .. (அண்டங்கள் பலவற்றிக்கு அதிபதியாகி) அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலமெழுமால் வரை அண்டத்துக்குட்பட்ட சேதனருடைய அண்டங்களையும், வெளி அண்டங்களையும் இவற்றை தரிக்கையாலே ஒப்பற்ற மஹாப்ரக்ருதியையும்

"சூன் முகமால் வளையனளவா யுகுந்த முத்தை
தொல்குருகு சினையெனச் சூழ்ந்தியங்க"

நான்முகனுடைய ஆயுட்காலம் மிக்கது என்று நான்முகன் கர்வம் கொள்ள அதனால் அவன் கொண்ட கர்வத்தை, வேதத்தை உச்சரிப்பவனும் சிறந்த தவத்தை மேற்கொண்டிருப்பவனுமான ரோமஸ ரிஷியால் போக்குவித்தது. ( பிரம்ம கர்வ பங்கம் ) . ( மூன்றாம் பத்து இரண்டாம் திருமொழி பாடல் 2 ) என்று ஆழ்வார்களும் திவ்ய பிரபந்தங்களில் எம்பெருமானின் பெருமையை பாடியுள்ளனார்.

மேற்கூறிய ரோமஸ ரிஷியையும், பிறகு அஷ்டவக்கிரன் எனும் ரிஷியையும் சந்தித்தவாறே விஷ்ணுவும், பிரம்மாவும் விஷ்ணுலோகத்தை அடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரு ரிஷிகளும் பல பிரம்மாக்களை உருவாக்கக்கூடிய அண்டங்களை தனது ரோமங்கள் போன்று தரித்திருப்பினும் தங்களது ஆயுளைப்பற்றி பெருமை கொள்ளாமலும், அழிவற்ற மோக்ஷத்தை தரக்கூடிய பரந்தாமனாகிய ஸ்ரீமந் நாராயணனை நினைத்தே தவமிருப்பதாகவும் தங்களது ஆயுளும் நிலையற்றது என்றும் கூறியுள்ளனர். ஆகவே மூலப்ரக்ருதியாக கருதப்படும் இந்த சூர்யமண்டலமும் நிலையானதல்ல என்பதை அறிகிறோம். இனி பிரம்மாவிற்கு திருப்பாற்கடல் அமைந்துள்ள வைகுண்ட லோகத்திற்கு போக்குவரத்து உண்டு என்பதால் பிரம்மா தரிசனம் செய்த வைகுண்ட லோகத்தை பற்றிய விபரத்தை அடுத்த அத்யாயத்தில் காணலாம்.

மேலும் பிரம்மாவின் கர்வம் இவ்வாறு அடக்கப்பட்டதால் அவர் எம்பெருமானை ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம: என்று புகழ்ந்துள்ளது இவ்விடத்தில் பொருந்தும்.

1. ப்ரஹ்மக்ருதே நம:
தவம் முதலியவற்றை ஏற்படுத்தியவர்
2. ப்ரஹ்மவிவர்த்த3னாய நம:
தவம் முதலியவற்றை வளர்ப்பவர்
3. நயாய நம: ரிஷிகளை கர்ப்பத்தைப்போல் பாதுகாப்பவர் (ரோமஸ ரிஷி, அஷ்டவக்கிர ரிஷி போன்றோரையும் கர்ப்பத்தில் வைத்து பாதுகாப்பவர்) இந்த மூன்று புகழுரைகளும் விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியில் கூறப்பட்டுள்ளன.

Rishi

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.