ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

7-வது அத்யாயம்
( திருப்பாற்கடலை பிரதானமாக் கொண்ட வைகுண்ட லோகத்தை பற்றிய விபரம் )
ஸாந்தாகாரம் பு4ஜக3ஸயனம் பத்3மநாப4ம் ஸுரேஸம் !
விஸ்வாதா4ரம் க33னஸத்ருஸம் மேக4வர்ணம் ஸுபா3ங்கம் !
லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகி3:ஹ்ரு3த்த்4யான கம்யம் !
வந்தே3 விஷ்ணும் ப4வப4யஹரம் ஸர்வ லோகைக நாத2ம் !!

பொருள் : ஸாந்த ஸ்வரூபனான சுத்த ஸத்வ குணமானவரும், அரவணை மேல் ஸயனித்திருப்பவரும், நாபிக்கமலத்தை உடையவரும், தேவாதி தேவனாகவும், உலகிற்கு ஆதாரமானவரும், ஆகாயம் போன்று வியாபித்தவரும், நீலநிறமேகவண்ணனும், சங்கு, சக்ர, காதாதாரிகளுடன் கூடிய திருமேனியை உடையவரும், லக்ஷ்மி தேவியை ஹ்ருதயத்தில் கொண்டிருப்பவரும், தாமரைக்கண்ணனும், யோகிகளின் ஹ்ருதயத்தில் தியானத்தால் அடையப்படுபவரும், பிறவித்துன்பத்தை நீக்கி மோக்ஷத்தை அளிப்பவரும், அனைத்துலகிற்கும் ஒரு நாயகராய் (புருஷனாய்) விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்.

பர, வியூஹ, விபவ, அந்தர்யாமித்வ, அர்ச்சா எனும் ஐந்து நிலைகளால் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் ஸகல புவனங்களை படைத்தும், ரக்ஷித்தும், ஸம்ஹாரம் செய்தும், எல்லாவற்றையும் உள்ளும், புறமும் வியாபித்து அருள் பாலிப்பவராயும் உள்ளார் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. இதில் இரண்டாவதாக கூறப்பட்ட வியூஹ நிலையானது பாற்கடலில் ஸயனித்த நிலையில் ஜகத்ரக்ஷண சிந்தனையுடன் கூடி தனக்கு கீழ்பட்ட அதிகாரிகளை தம்தம் காரியங்களை செய்யத் தூண்டுபவராகவும் உள்ளார். இதைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் படைப்பில் பிரம்மனாகவும், காத்தலில் விஷ்ணுவாகவும், ஸம்ஹாரிப்பதில் ருத்ரனாகவும், தடைகளை நீக்குவதில் விஸ்வக்ஷேனராகவும் (கணபதி) படைத்தளபதிகளில் சுப்ரமணியனாகவும் முப்பது முக்கோடி தேவர்களாகவும், (12 ஆதித்யர்கள், 11 ரூத்ரர்கள், 8 வசுக்கள், அஸ்விநி தேவதைகள் இருவர்)

ஓம்காரவாச்யனாகவும், மந்திரங்களில் காயத்ரி மந்த்ரமாகாவும், தேவர்களுக்குள் இந்திரனாகவும், மரங்களில் அரசமரமாகவும், பக்ஷிகளில் கருடனாகவும், மனிதர்களில் அரசனாகவும், புரோஹிதர்களில் உயர்ந்தவரான ப்ரஹஸ்பதியாகவும், தானேயாகி இவையனைத்தும் சிருஷ்டித்து தானே அந்தர்யாமியாய் இருந்து இவற்றையெல்லாம் ஒடுங்குவதாய் வியூஹம் அமைத்து (திட்டமிட்டு) செயல்படுத்தக்கூடிய உயர்ந்த ப்ரக்ருதியானது மேலே உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆயிரம் சதுர்யுகங்களை பகல்களாக கொண்ட பிரம்மனுடைய பதவி முடியுங்காலத்தில் அனைத்தும் தன்னிடத்திலேயே ஒடுக்கி ஆலிலை மேல் பாலகனாய் ஸயனிப்பது தாழ்மையான ப்ராகிருத ப்ரளயம் ஆனால் கடந்த (சுத்த ஸத்வமயமாய்) அத்யாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரோமஸ ரிஷியின் ஸ்தானமும் அஷ்டவக்ர ரிஷியின் ஸ்தானமும் திருப்பாற்கடலில் ஒடுங்குவதாய் உள்ளதானது வியூஹ நிலையாகும் இது மேலான உயர்ந்த ப்ரக்ருதியில் ஒடுங்குவதாகும். இது மஹாப்ராக்ருத ப்ரளயமாகும்.

அநந்த மவ்யயம் கவிம் ஸமுத்ரேந்தம் விச்வ சம்புவம் (நாராயண ஸுக்தம்)
எண்ண முடியாத ரூபங்களை உடையவனும் அப்படி அவதாரம் செய்தும் குறைவற்றவனும், அழகாக பேசுபவனும், பாற்கடலில் பள்ளி கொண்டவனும், உலகிற்க்கெல்லாம் நன்மையைச் செய்பவனும் நாராயணனே

பிறகு பிரம்மாவும், திருமாலும் வைகுண்டம் திரும்பினர். திருமால் பிரம்மாவைப் பார்த்து, "பிரம்மனே! நீங்கள் சந்தித்த முனிவர்கள் இருவரும் இந்திரியங்களை வென்றவர்கள் தேகாபிமானத்தை விட்டவர்கள். ஞானம் என்னும் பேரொளியால் (பிரம்ம வித்துக்கள்) அஞ்ஞான இருளை விரட்டியவர்கள் அவர்கள் கூறியதை கேட்டாயா! உன்னிலும் எத்தனை மடங்கு ஆயுள் விருத்தி உடையவர்கள் என்பதை புரிந்து கொண்டாயா! நான் என்ற அகங்காரம் உன்னை ஆட்டி வைத்தது. கர்வம் கொள்பவர்கள் உயர்கதியை அடைய முடியாது. எனவே அகந்தையை விட்டு அடங்குக" என்று அறிவுறுத்தினார்.

ஆபோ நாராஇதி ப்ரோக்தா ஆபோனவ நரஸு நவ:
தாயத3ஸ்யாநம் பூர்வம் தேந நாராயண: ஸம்ருத

ஜலம் நாரமெனப்படுகிறது. அது நரனாகிய பகவானிடமிருந்து உண்டானதன்றோ அந்த ஜலம் பூர்வ காலத்தில் இவனுக்கு இருப்பிடமாகையால் இவன் நாராயணன் எனப்படுகிறான். (மனுஸ்ரும்தி, & விஷ்ணுபுராணம்) இங்கு ஜலமெனப்படுவது பரநிலையில் பரமபதத்தை சூழ்ந்துள்ள நித்ய ஸூரிகளாகவும், மோக்ஷத்தை விரும்பும் ஆத்மாக்களாகவும், வியூஹ நிலையில் பாற்கடலாகவும், விபவ நிலையில் மூவேழ் உலகங்களையும் சூழ்ந்துள்ள ஆவரண ஜலமாகவும், அந்தர் யாமித்வ நிலையில் நரன் எனப்படும் மனிதனின் ஆத்மீக ஹ்ருதயத்தில் மேல் நோக்கியதாயும், நெல் நுனி போல் மெல்லிதாயும், உருக்கின தங்கத்தை போன்ற மஞ்சள் நிறமான வந்ஹி சிகையாகவும், அர்ச்சா நிலையில் பஞ்ச பூதங்களாகிய ஆகாயம், காற்று, அக்நி, நீர், பூமி முதலியவற்றை யாக ரூபியாய் ஆராதிக்கப்பட்டு அதை ஞானக்கினியாக்கி கும்பத்தில் உள்ள ஜலத்தில் எழுந்தருளச் செய்து அமிர்த கலசமாய் கோவில் கருவறையில் மேல் உள்ள அஷ்டாங்க விமான கோபுர கலசத்தின் மேல் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதால் திருமூர்த்திகளில் பகவானை எழுந்தருளச் செய்வதாலும் நாராயணன் எனப்படுகிறார். நாரம் என்றால் தீர்த்தம் என்று பொருள், அயனம் என்றால் இருப்பிடம் என்று பொருள் தீர்த்தத்தை எவனொருவன் படுக்கையாகவும், தன் இருப்பிடமாக கொன்டானோ அவனுக்கு நாராயணன் என்று பெயர்.

அநாத்4ய நந்தம் கவிலஸ்யமத்யே (அநாதியாயும் அனந்தனாகவும் இருப்பவனாய் ஜலத்தில் நடுவில் எழுந்திருப்பவனாய்) ஏகோ ஹம்ஸோ பு4வனஸ்ய மத்4யே ஸஏவாக்3நிஸ் ஸலிலே ஸந்நிவிஷ்ட (உலகின் நடுவில் விளங்கும் ஒப்பற்ற ஹம்ஸம் அவனே, அவனே அக்நி, அவனே ஜலத்தில் எழுந்தருளியிருப்பவன்) த்ரிபாத் ஊர்த்4வ உதைத் புருஷ: பாதோ ஸ்யேஹ பவத்புந: (புருஷ ஸுக்தம்) (பரமபதத்தில் உள்ள பரம புருஷன் மூன்று வியூஹங்களை உடையவனாகி ஸங்கல்பித்தான், அவனுடைய ஒரு வியூஹத்திலிருந்து (அநிருத்தன்) பாற்கடல் பெருமானாக இவ்வுலகில் அவதரித்தான் என்று பரநிலை வாஸுதேவனையும் பாற்கடல் பெருமானையும் ஒருவனாகவே பேசுகிறது. இதையே திருப்பாவையில் முதல் பாட்டில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று பரநிலையைக்கூறி, இரண்டாம் பாட்டில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனடி பாடி என்றும், அவனே வியூஹ நிலையில் திருப்பாற்கடலில் பெருமானாக அவதரித்திருக்கிறான் என்றும் ஆண்டாள் பாடியுள்ளார். விண் மீதிருப்பாய், மலை மேல் நிற்பாய், கடல் சேர்ப்பாய், மண் மீது புரள்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய் (திருவாய்மொழி 6-9-5) என்று நம்மாழ்வாரும் பரந்தாமனின் ஐந்து நிலைகளைக்கூறி, இவ்வைந்து நிலைகளிலும் இருப்பவன் ஒருவனாகிய ஸ்ரீமந் நாராயணனே எனக்காட்டியுள்ளார்.

அமிதௌஜா    பர்யங்க:    தஸ்மிந் ப்3ரஹ்ம ஆஸ்தே      ( அளவற்ற பலத்தையுடைய ஆதிசேஷன் படுக்கையாகியிருக்கிறான். அதில் பரமாத்மா வீற்றிருக்கிறார் ) என்றது கேளஷீதகி உபநிஷத்.

நாராயணோ மஹாயோகி .....ஸஜட3 பண்டி3தா:! - மஹோபநிஷத்
புண்ணிய, பாபமற்றவனாய், மஹாயோகியுமான நாராயணன் அளவற்ற ஒளியையுடைய தன்பிள்ளையான பிரம்மனை நாபியிலிருந்து படைத்தான். படைத்தபின் அவனுக்கு முன் தோன்றி பின்வருமாறு கூறினார். நீ என் நாபியிலிருந்து பிறந்தாய்! பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பவனாகவும், ஈஸ்வரனாகவும் விளங்குகிறாய்.! பிரம்மனே! அறிவுள்ளவர்களும், அறிவற்றவர்களுமான பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பயாக! என்று அருளினார் மேலும் பாற்கடலுக்கு வடகரையிலிருக்கும் விஷ்ணு லோகத்தை அடைந்து அங்கிருக்கும் மஹாபாக்யசாலிகளால் உசிதப்படி பூஜிக்கப்பட்டு ஒருவராலும் தடுக்கப்படாதவராய் பெருமாளும் பிராட்டியும் தனியே இருக்கும் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். நுழைந்ததும், ஜோதிமயமானதாய் சூரியனைப் போன்றதொரு விமானத்தில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டு மலர்மகளின் மலர்கைகளாளே திருவடி வருடப் பெற்றவனாயிருக்கும் அனந்தபத்மநாபனை ப்ருகு மஹரிஷி கண்டார் என்று சுத்த ஸாத்வீக தெய்வ நிர்ணயத்தில் கூறப்பட்டுள்ளது.

அண்டா3நாம் து ஸஹஸ்ரானாம் ஸஹஸ்ராண்ய யுதநிச!
ஈத்ரு பசாநாம் ததா2 தத்ர கோடி கோடி பாத நிஷ!!
அந்த மூலப்ரக்ருதியில் ஆயிரம் அண்டங்களுடைய ஆயிரங்களும், பதினாயிரங்களும், இப்படிபட்ட அநேககோடி அண்டங்களுடயதாய் இருக்கின்றன என்கிறபடியே அண்டங்கள் கணக்கற்றவை. இந்த மஹாவாக்யமானது ரோமஸ மஹாரிஷியின் அங்கத்தில் உள்ள ரோமத்தை ஒத்த பிரஹ்ம வித்துக்கள் 3 1/2 கோடியும் அவ்வாறே அஷ்டவக்கிரனுடைய எட்டு கோணல்களும் நிமிர்வதற்கான கால அளவான 8 x 3 1/2 = 28 கோடி அண்டங்களாகிய ப்ரஹ்ம வித்துக்கள் அழியும் போது, இந்த வியூக மூர்த்தியான அநந்த பத்மநாபன் மூலமூர்த்தியான பரவாஸு தேவனாகிய ஸ்ரீமந் நாராயணனோடு இணைகிறார். எவ்வாறு எட்டு கால்களையும், எட்டு கண்களையும், கொண்ட சிலந்தி பூச்சியானது தனது வயிற்றிலிருந்து சுரக்கும் நீரைக்கொண்டு (ஊடு நூலும், பாவுநூலும் இணைந்து துணி நெய்யப்படுகிறதோ அதைப்போன்று) வலைபின்னி இந்த வலையில் சிக்கும் பூச்சியை இரையாகக் கொண்டு பிறகு தன்வலையை மீண்டும் எவ்வாறு சுருக்கிக் கொள்கிறதோ அதனைப் போன்று இந்த வியூஹ மூர்த்தியானது பரவாஸு தேவனோடு இணைகிறது. இது மஹாப்ரக்ருத பிரளயமாகும்.

பகவானால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட நமது மூளையில் கிட்டதட்ட 200 கோடி செல்கள் உள்ளன ஆனால் நாம் அன்றாட காரியங்களை செய்யும் போது 3000 முதல் 7000 செல்கள் மட்டுமே இயங்குகின்றன. மீதி வேலையில்லாமல் உறங்கியே உள்ளன. அவையனைத்தும் செயல்பட ஆரம்பித்தால் மனிதன் தெய்வீக சக்தியை பெற்றவனாகிறான். அதற்குபின் உலகில் அவன் பல சாதனைகளை புரிகிறான். அவர்களே மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

திறைமையான விஞ்ஞானிகள் உருவாவதற்கும் மூளையில் அதிகமான செல்கள் செயல்படுவதுதான் காரணமாகும்.

இது வரையில் கூறியவையாவும் பகவானின் லீலா விபூதியாகும் இதைக்காட்டிலும் மும்மடங்கு பலம் வாய்ந்தது திரிபாத் விபூதியாகும் அந்த திரிபாத் விபூதியிலிருந்து மீதமுள்ள ஸங்கர்ஷனர், ப்ரத்யும்நர் ஆகிய வியூஹ மூர்த்திகளிடமிருந்து மீண்டும் ஒரு அவதாரம் பாற்கடலில் தோன்றி இந்த லீலா விபூதியை உருவாக்கி இயங்குவதற்கான வாய்ப்புண்டு. தானே பிரபஞ்சமாக விரிந்து பிறகு தன்னில் தானே ஈர்த்துக்கொள்ளும் சுத்த ஸத்குவணமுடையவர் பரப்ரஹ்மம். விஷ்ணு ஸஹஸ்ஹர நாமாவளியிலிருந்து ஒரு சில புகழுரைகள் எடுத்துக்காட்டாக கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹிரண்ய க3ர்ப்பா4ய நம:    பொன்மயமான  பிரம்ம  அண்டத்தினுள்  பிரம்ம  ரூபியாக உறைபவர் அல்லது படைப்பு தொழிலை மேற்கொண்டுள்ள பிரம்மாவிற்கும் ஆத்மாவாய் விளங்குவதால் ஹிரண்யகர்ப்பர்.

ஜக3தாதிஜாய நம:     உலகம் உண்டாவதற்கு முன்  (ஹிரண்யகர்ப்பர் வடிவில்) உதித்தவர் இங்கு உலகம் என்பது லீலா விபூதியான காரியபிரபஞ்சத்தை குறிக்கும் (பூர்வோயோ தேவோப்ய ஜாத : புருஷ ஸூக்தம்)

ஸுதபஸே நம:    ( நாராயண வடிவில் ) சிறந்த   தவம் செய்தவர்   அல்லது சிறந்த ஞானமுள்ளவர்

பத்3மநாபா4ய நம:    பத்மம் போன்ற  நாபியை உடையவர்  பத்மம்   என்றால்  நூறு ஆயிரங் கோடி.கால வியூஹந்தான் பத்மம். காலத்தை விழுங்கிய பகவானிடம் இருந்து கமலம் காலரூபியாய் தோன்றிற்று. மூவேழ் உலகங்களாகிய பத்மத்தை தமது நாபியில் உடையவர். நான்முகனின் பிறப்பிடமான தாமரையே உந்தியில் உடையவர்.(நாபிகமலத்தில் தோன்றிய) உந்தியில் 8 இதழ்களோடு கூடிய தாமரையை உடையவர்.

பிரஜாபதயே நம:   பிரஜைகள்  அனைவருக்கும்  தலைவர்   ( பிரம்மன்  முதலிய  அனைவருக்கும் தலைவர் )

க்ராமன்யே நம: உயிர்த் தொகுதிகளை வழி நடத்துபவர். மயில் தோகையை அணிந்தவர். மயில் தனது தோகையை விரிப்பதானது அஷ்டவக்ர ரிஷியும், ரோமஸ ரிஷியும் அதிலிருந்து பிரம்ம அணடங்களும் தோன்றுவதுமாய் உள்ள அமைப்பானது. பகவானுக்கு மூலப்ரக்ருதியாய் இருப்பது. மயில் தனது தோகையை ஒடுக்குவதானது பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மஹாவிஷ்ணுவிடம் அஷ்டவக்ர ரிஷியும், ரோமஸ ரிஷியும் பிரம்ம அண்டங்களும் ஒடுங்குவதற்கு ஒப்பானது. (ஆண் மயிலுக்கு மட்டுமே தோகை உண்டு) புருஷ தத்வத்தை சிந்திக்க வேண்டியது.

ஸப்த வாஹானாய நம:    சூர்யனுடைய  தேர்க்குதிரைகளான  ஏழு  ஸந்தஸ்ஸுகளை  தனக்கு வாஹனமாக உடையவர். (எவ்வேழாக பிரியும் அனைத்தையும் பீடமாக உடையவர்.)

ஸம்க்ஷேப்த்ரே நம: விஸ்தாரமான உலகத்தை பிரளய காலத்தில் சுருக்குகிறவர். லோகத்ரயாச்ரயாய நம: மூவுலகங்களுக்கும் ஆதாரமாயிருப்பவர். ஸர்வதச்சக்ஷூஸே நம: எங்கும் எல்லாவற்றையும் தமது ஞான ஒளியால் காண்பவர் ( ஸர்வத : பாணிபாத3ம் . . . . . . . . . . திஷ்ட2தி ) கீதை 13 - 13 அந்த ப்ரஹ்மம் எல்லாவிடத்திலும் கால்களும், கண்களும், தலைகளும், முகங்களும், காதுகளும், பரவப் பெற்றிருக்கும் . (உலகில் எல்லாவற்றிலும் பரவி நிற்பது அதுவே)

கும்பாய நம : சக்கரத்திற்கு குடம் ஆதாரமாயிருப்பது போல் அனைத்திற்கும் ஆதாரமாயிருப்பவர்.

அனந்தாய நம: அளவிடப்படாதவர் இடத்தாலும், காலத்தாலும், பொருளாளும் முடிவில்லாதவர் கால, தேச வர்த்தமானத்திற்கும் அப்பாற்பட்டவர்.

ப்ரஹ்மவிவர்த்தனாய நம:    தவம் முதலியவற்றை வளர்ப்பவர்

மஹாயக்ஞாய நம : தலைசிறந்த ஜபயக்ஞமாயிருப்பவர் (யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாயிருக்கிறேன் யக்ஞாநாம் ஜபயக்ஞோஅஸ்மி ) (கீதை 10-25)

தேஜோவ்ருஷாய நம :    ஒளியைப் பொழிபவர் ( சூர்ய ரூபியாக ஜலத்தை வர்ஷிப்பவர் )

த்யுதிதராய நம:     ஒளி வீசும் அங்கங்களை உடையவர்

ஸுதந்தவே நம:     விஸ்தாரமான   பிரபஞ்சத்தை   உடையவர்  ( எங்ஙனம்  சிலந்தி பூச்சியானது தன்னிடமிருந்து நூலை உண்டாக்கி வலை பின்னி தனது இரையை தேடி பிறகு தனக்குள்ளே இழுத்துக் கொள்கிறதோ அங்ஙனம் பரம் பொருளினிடமிருந்தே இவ்வுலகம் உண்டாகிறது. (முண்டக உபநிஷத் ) சிலந்தியின் கால்கள் எட்டு அதனால் பின்னப்படும் வலையின் வடிவமைப்பு அஷ்டாங்க விமான கோபுரத்தின் அமைப்பு இதனை ஒப்பு நோக்க வேண்டும்.

பூர்ப்புவ ஸ்வஸ்தரவே நம: பூலோகம்,புவர்லோகம், ஸுவர்லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார விருக்ஷ வடிவினர் அல்லது பூர், புவ, ஸுவ என்ற வியாஹ்ருதி மந்திரங்களால் உலகை நடத்தி வைப்பவர்.

அம்ருதப:-     யாகத்தில்  அக்நி   பகவானுக்கு   கொடுக்கப்பட்டது   அமுதமாக  மாறி விஷ்ணுவை அடையும், அதைப்பருகியவர். சாஸ்திரமாகிய உபநிஷத் காரணமாகிய பரப்ரஹ்மத்தை தெரிந்து கொள்ள காரியமாகிய பிரபஞ்சத்தை பார் என்கிறது. எதனிடத்திலிருந்து பிரபஞ்சங்கள் உண்டாயினவோ, எதனால் அவை ரக்ஷிக்கபடுகின்றனவோ, எதனிடத்தில் அவை லயமடைகின்றனவோ, அதுவே இதற்கு காரணம் என்று பரப்ரஹ்மத்தை குறித்து சொல்லப்படுகிறது.

மஹாகோசாய நம:     ஐந்து  பெரிய  கோசங்களால்  உறைபவர்,  அன்னமய  கோசம்,  ப்ராணமய  கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மயகோசம், ஞானமய கோசம் (ஒன்றுக்குள் ஒன்று கருவானது அல்லது ஒன்றை ஒன்று மூடியுள்ளது.)

விச்வாயநம:    பரமாத்மா   ஒருவனே  விச்வம்  என்பதற்கு  இதுவே  பொருள் அதனடிப்படையில் வைத்துப்பார்த்தால் சிலந்தி பூச்சியின் எட்டுகால்கள், அது பின்னக்கூடிய வலைகளும், அஷ்ட கோணல்களுடைய வக்ர ரிஷியும், சக்கரத்திற்கு குடம் ஆதாரமாக உடைய வடிவமைப்பும், எட்டு இதழ்களோடு கூடிய தாமரையின் வடிவமைப்பும் கோயிலின் கருவரை மேல் உள்ள அஷ்டாங்க விமான கோபுரத்தின் வடிவமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது.

அதற்கு கீழுள்ள ரோமஸ ரிஷியின் தவக்கோலம், ரிஷிகள் தங்கும் ஆசிரமத்தின் வடிவமைப்பு (யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாயிருக்கிறேன் கீதை 10-25) அஷ்டாங்க விமான கோபுரத்திற்கும், கருவறைக்கும் இடைப்பட்ட கோபுரவடிவமைப்பை சார்ந்துள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒன்று மற்றொன்றின் வெளிப்பாடாக உள்ளது. என்பதையும் அறிய வேண்டும். எட்டு இதழ்கள் கொண்ட தாமரையின் (அஷ்டலெட்சுமி) உள்கட்டமைப்பில் திருப்பாற்கடலை பிரதானமாகக் கொண்ட வைகுண்ட லோகம், அதனின் வெளிப்பாடு எட்டு கோணல்கள் உடைய அஷ்டவக்கிர ரிஷி, அந்த அஷ்டவக்கிர ரிஷியின் வெளிப்பாடு வேதத்தில் கூறப்படும் எட்டு சூர்யர்கள், இதே போன்று இதற்கு எடுத்துக்காட்டாக ஏழு பீடங்கள் அஷ்டாங்க விமானத்தின் அடிப்பாகமாக கொள்ள வேண்டும். மூவேழ் உலகங்களின் பீடமாக அல்லது பிரதிபலிப்பாக உள்ளது. ஏழு சுற்றுகள் கொண்ட கோவிலின் வடிவமைப்பானது இதனைச் சார்ந்தே உள்ளது. இதற்கு ஸப்தாவரணம் என்று பெயர். ஏழு சுற்றுக்களின் கூட்டுறவு என்பது ஸப்தாவரண சப்தத்தின் பொருள் விஷ்ணு ஆலயங்களில் ஏழு ஆவரணங்கள் (ப்ரகாரங்கள்) இருக்கலாம் என்பது வைஷ்ணவாகம விதி ப்ரஹ்மோத்ஸவ பூர்த்தியன்று எம்பெருமான் இவ்வேழு ஆவரணங்களிலும் எழுந்து அருள்வது ஸப்தாவரண உத்ஸவமாகும்

ஸப்த வாஹனாய நம: ஏழு குதிரைகள் உடைய சூர்யனாயிருப்பவர்

மேற்கூறிய  இவை  அனைத்தும்  கொண்டது  மூலப்ரக்ருதியாகும்  கீழே  உள்ள லீலாவிபூதியான ஈரேழு (14) லோகங்களும் மேலே உள்ள தேவலோகமாகிய மேலுலகங்கள் ஏழும் ரோமஸ ரிஷியிடமிருந்து வெளிப்பட்ட ஒரு ப்ரஹ்ம வித்தின் விரிவாக்கமாகும். அந்த விரிவாக்கத்தில் முப்பத்து மூன்று தேவர்களும் அடங்குவர். முப்பத்து மூன்று தேவர்களாவது: பன்னிரு ஆதித்யர்கள் (12), ஏகாதஸ ருத்ரர்கள் (11), அஷ்டவசுக்கள் (8 சூர்யர்கள்), அஸ்விநி தேவர்கள் இருவர் (காயத்ரீ, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ரஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி என்னும் ஏழு சந்தஸ்ஸுகளோடு கூடிய வேத மந்திரங்களுக்கு அதிஷ்டான தேவதைகளாகிய சூர்யனுடைய தேர்க்குதிரைகள் ஏழையும் தமக்கு வாஹனங்களாக உடையவர். (பரிபாடல்) இங்கு சூர்யன் என்பது அஷ்டலெட்சுமியை உள்ளடக்கிய அஷ்டவக்கிர ரிஷியின் வடிவமைப்பாகும். அஷ்டவசுக்கள் அஷ்டவக்கிரன் அஷ்டலெட்சுமி அஷ்டாங்க யோகம் ( ஒன்றுக்குள் ஒன்று அடக்கம் பன்னிரு ஆதித்யர்கள் மஹாமகமான 12 வருடங்கள் ஒரு சுற்றுக்கொண்ட குருவின் சஞ்சாரமாகும் )

கோவிந்தாய நம:     ( பன்னிரு  ஆதித்யர்களாகிய )  பசுக்களை  கட்டி  மேய்ப்பவர்.  மேலே உள்ள எட்டு ஸூர்யர்களையும் (எட்டு பிரிவுகளை உடைய ஒரு வட்ட வடிவமான சூர்யமண்டலம்) ஆதாரமாக உள்ள 12 ஆரங்களாக கருதப்படும் 12 ஆதித்யர்கள் அதன் மேலே உள்ள ஏழுசுற்றுக்கள் கொண்ட ஏழு தேவலோகங்கள் இவற்றின் உள்கட்டமைப்பில் உள்ளது. ரோமஸரிஷியின் தவக்கோல அமைப்பு அஸ்விநி தேவர்கள் இருவர் தேவர்களின் மருத்துவர்களாகவும், உள்கட்டமைப்பில் இந்திரன் பிராஜபதியாகவும், விராட ஸ்வரூபத்தில் காதுகளாகவும் வேதத்தில் கூறப்பட்டுள்ளன. பதினொரு ருத்ரர்கள் பிரம்மனின் கோபத்தால் அல்லது நெற்றி வியர்வையால் காரிய பிரபஞ்சத்தின் பின் பக்கத்தில் பதினொரு பிரிவுகளாக கொண்ட அக்நிகளாக பன்மையில் கூறப்பட்டுள்ளன. இதனை பின்பக்கத்தில் உள்ளதாக யோகிகள் சிந்தித்து கொள்ள வேண்டியது. ருத்ரன் தன்னை ஆண், பெண் என இரண்டு பாகமாக பிரித்துக்கொண்டதில் ஆண் ஹம்ஸம் 11 ருத்ரர்களாகவும், பெண் ஹம்ஸம் பிரிக்கப்படாமலும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. மும்மூன்றான அநேக கோடி பிரம்மான்ட லோகங்களை தன் திருவயிறகத்தே வெளியே தெரியாது அடக்கிக்கொண்டிருந்தாலும் மெல்லிய கொடி போல் தங்கள் சிற்றிடை விளங்குகிறது. ஸ்ரீமந் நாராயணீயம் 100 வது சதகம் 7-வது ஸ்லோகம்

ஜக3தா3திஜ:    மும்மூர்த்திகளின்  நடுவில்  ஸ்ரீவிஷ்ணுவாக  அவதரித்தார். உலகம் உண்டாவதற்கு முன் (ஹிரண்ய கர்ப்ப வடிவில் ) உதித்தவர் (பூர்வோயே தே3வோப்யோ ஜாத : புருஷ ஸூக்தம்)

ஸ்ரீமாந் : தாமரைக்கண்களையே செல்வமாக உடையவர் மீன் தன் குட்டிகளை கண் திருஷ்டியாலே வளர்க்கும்.

ஸஹஸ்ரஜித்: ஆயுரம் யுகங்களுள்ள ப்ரளயத்தை யோக உறக்கத்தில் ஜெயிப்பவர்

கோ3ஹிதாய நம: ஸம்ஸார விதையை விதைத்து இவ்வுலகை வளர்ப்பவர்.

வ்ருஷபாக்ஷாய நம: ஸம்ஸாரமென்னும் சக்கரத்திற்கு தர்மமெனும் அச்சு போன்றவர்.

குவலேசாய நம:    பூமியை  சுற்றி  இருக்கும்  கடலில்  ஸயனித்திருப்பவர்.  ( இங்கு  பூமி என்பது மூவுலகையும், கடல் என்பது ஆவரண ஜலமாகிய ஆகாய கங்கையை குறிக்கும். ஸயன நிலையில் உள்ள மஹாவிஷ்ணுவின் திருப்பாதங்களிலிருந்து உருவாகும் ஆகாய கங்கை ஆகும்)

ஸ்ரீவத்ஸவக்ஷஸே நம:    ஸ்ரீவத்ஸம்  என்னும்   மருவை   மார்பில்  உடையவர்.  இந்த  மருவை பீடமாகக்கொண்டே மஹாலெட்சுமி வீற்றிருக்கிறார்.

த்ரிலோகாத்மனே நம: மூன்று லோகங்களுக்கும் அந்தர்யாமி

த்ரிலோகேசாய நம: மூன்று உலகங்களுக்கும் தலைவர்

விஷ்ணவே நம:     எங்கும்  நிறைந்திருத்தல்,  ஆணை  செலுத்துதல்,  ஆகிய  சக்தியால்  உலகம் முழுவதும் வியாபித்திருப்பவர்.

விச்வமூர்த்தயே நம: உலகனைத்தையும் தன் திருமேனியாக கொண்டவர்

MahaVishnu Sayanam.png

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.