ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

9-வது அத்யாயம்
( தேரின் வடிவமைப்பு தத்துவம் )

1. யத்3ஸ்வரூபோ யத்3ரூபோ யத்கு3ணோ யத்3விபூ4திகோ யத்3ப்ராமண கோயத்3த்3ரவ்யோயம் ஸர்வேஸ்வர கல்ப்யதே ஸததா3 பவேதி3 தி பாவ

எப்படிபட்ட ஸ்வரூபத்தை உடையவனாகவும், எந்த ரூபத்தை உடையவனாகவும், எந்த ஐஸ்வர்யத்தை உடையவனாகவும், எந்த அளவை உடையவனாகவும், எந்த திரவியத்தை உடையவனாகவும் ஸர்வேஸ்வரன் கல்பிக்கப்படுகின்றானோ அவன் (பக்தனுக்கு) அவ்வாறே காட்சியளிக்கிறான்.

- நாராயணதி வியாக்யானம்

(பகவானின் இந்த குணத்தை அனுசரித்தே இது இவ்வாறாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த காரண காரிய பிரபஞ்ச அமைப்பானது தேரின் வடிவமைப்பில் இருக்கலாம் என்ற தத்துவ அடிப்படையில் இந்த அத்யாயத்தில் கூறப்பட்டுள்ளது.)

2. ஆத்மாநாம் ரதி2நம் வித3தி4சரீரம் ரத2 மேவச

- கடஉபநிஷத் 3-3

ஜீவாத்மாவை ரதத்தை ஆள்பவனாகவும், சரீரத்தை ரதமாகவும், அறிவாயாக என்கிறபடியே ரதமாக சொல்லப்படும் சரீரத்தின் நடுவிலே எம்பெருமானுடன் லக்ஷ்மி எழுந்தருளியிருப்பவள் என்பதாகிறது அல்லது ரதமென்று ஸர்வேஸ்வரனுடைய அப்ராக்ருத சரீரத்தை சொல்வதாகக் கொண்டு அதன் நடுவிலே எழுந்தருளியிருப்பவன் என்றும் கொள்ளலாம்
அச்வ பூர்வாம் ரத2மத்4யாம்........................................... (ஸ்ரீ ஸூக்தம்)
ஓங்காரம் ரத2மாருஹ்ய (ஓங்காரமாகிய ரதத்திலேறி) என்று ரதமாக சொல்லப்படும் ஓங்காரத்தின் நடு எழுத்தாகிய உகாரத்திற்கும் பிராட்டியானவள் பொருளாயிருப்பவள் என்பதாகிறது.

3. ஓம் அஸ்வக்ராந்தே ரதக்ராந்தே விஷ்ணுக்ராந்தே வஸுந்த4ரே
    ஸ்ரீரஸா தா4ரிதா தே3வி ரக்ஷஸ்வ மாம் பதே3 பதே3

- வராஹோ பனிஷத்

குதிரைகளாலும், (காலச்சக்கரமானது குதிரை தாவி ஒடுவதற்கு ஒப்பாகும்) ரதங்களாலும், (த்ரிவிக்ரம ரூபியான) (மூவுலகையும் அளந்த) விஷ்ணுவினாலும் கடக்கப்பட்ட பூதேவியே என்னுடைய சிரஸ்ஸில் தரிக்கப்பட்டவளான நீ என்னை அடிக்கடி ரக்ஷிக்க வேண்டும். என்னும் மந்திரத்தால் பூமி தேவியை பிரார்த்திக்க வேண்டும்.

4. யத்தே மந்த்யுபரோப்தஸ்ய ப்ருத்வீமனு த3த்4வஸே
    ஆதி3த்யா விஸ்வே தத்3தே3வா வஸவஸ்ஸ ஸமாப4ராந்

- பூ ஸுக்த ஞான த்யானம்

பரமபுருஷனிடமிருந்து உண்டான தேஜஸ்ஸை 12 ஆதித்யர்கள்ஏகாதஸ் ருத்ரர்கள், அஷ்டவஸுக்கள், அஸ்விநி தேவதைகள் இருவர் ஆகியோர் தரித்தனர். அந்த பரமபுருஷனின் ஒளியால் சூர்யன் முதலான அனைவரும் ஒளிவிடுகின்றனர். (இங்கு சூர்யன் என்பது இந்நூலின் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து எட்டாவது அத்தியாயம் வரை கூறப்பட்டுள்ள சூர்ய மண்டலமாகும்.
தேரின் அஷ்டாங்க விமான அமைப்பையும், அதனிடமிருந்து மேலிருந்து கீழ் வரை விரிகின்ற 12 தங்க வழிகளையும் ஏழு சுற்றளவுகளுடன் கூடிய ஏழு அடுக்கு துணையுடன் மேல் ஏழு லோகங்கள் எனப்பிரித்து காட்டுவதை போன்ற அமைப்பு ரத சக்கரத்தின் நாபியிலும், நேமியிலும் (வெளிவளையத்திலும் ஆரங்கள் சேர்க்கப்பட்டிருப்தை போல்) தேரின் அடிப்பாகம் 11 சுற்றுகளுடன் கூடிய ஏகாதஸ ருத்ரர்களையும் (11 அக்நிகளை சுற்றளவாகக்கொண்டு கீழிருந்து மேலே செல்வதாய் உள்ளது) தேரின் மேல் தளத்திற்கும் தேரின் கீழ் தளத்திற்கும் உருவாக்கக்கூடியது. அஸ்விநி தேவர்கள் இருவர் தேரின் மேல் உள்ள அமைப்பிற்கும் தேரின் கீழ் உள்ள அமைப்பிற்கும் நடுவில் பகவான் எழுந்தருளி அருளும் இடமானது நாம் வாழும் பூலோகமென சிந்திக்க வேண்டும்.
மேலும் சிரார்த்தம் போன்ற காரியங்களில் வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபானாம் என்று பிதுர் தேவதைகளை குறிப்பிட்டு கூறுவதால் ரதத்தின் மேல் அமைப்பு போன்றே கீழேயும் அஷ்ட நாகங்களாலும், ஏகாதஸ ருத்ரர்களாலும், பனிரெண்டு ஆதித்யர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன. பகவானுக்கு சரீரமாக் கொண்ட மூலப்ரக்ருதியின் வெளிப்பாடாக உடைய தேரின் மேல் பாகமானது அஷ்டாங்க அமைப்புடன் ஸத்வ குணத்தையும், பகவான் அந்தர்யாமியாய் எழுந்தருளியுள்ள நடு அமைப்பானது ரஜோ குணத்தையும், தேரின் அடிப்பாகமானது அந்தர்யாமியாய் விஸ்வரூபியாக ஸ்ரீ கிருஷ்ணரால் மிகவும் அந்தர்யாமியாய் உள்ள (விபிஷணன், பிரகலாதன் பக்தர்களாக தோன்ற காரணமாக உள்ள) ஸத்வம், ரஜஸ், ஆகிய குணங்கள் குறைவாகவும் தமோ குணம் அதிகமாகவும் பிரதிபலிப்பதாக உள்ளது. இதில் ஸத்வ குணமானது மேலிருந்து கீழே வர வர குறைவாகவும், ரஜோகுணம் மேலே செல்ல செல்ல குறைவாகவும், கீழ் நோக்கி செல்ல செல்ல தமோ குணமானது அதிகமாகவும் வெளிப்பட்ட காரிய பிரபஞ்சமான பகவானின் லீலா விபூதியாக கருதப்படும்.
இதில் பகவான் பூர்ணனாய் இருக்கையால் வியாபிக்கப்படும் பொருள்களின் தோஷங்கள் சிறிதும் ஒட்டமால் ஒரு விஷேசமான நிலையில் இந்த மூன்று லோகங்களையும் தரித்திருப்பதாக கருத்தில் கொள்ள வேண்டும். மூவேழ் உலகங்களாக பிரித்து சிந்திக்கையில் தேரின் மேல் அமைப்பில் ஏழு சுற்றுக்களாக உள்ளதை மேலுள்ள ஏழு லோகங்களாகவும், நடு அமைப்பில் நாம் வாழும் பூமி உட்பட அமைந்துள்ள ஏழு லோகங்களை அரசு இலை அல்லது ஆல இலையில் படர்ந்துள்ள ஏழு ரேகைகள் போன்ற அமைப்பை சிந்தித்து அதன் உட்பகுதியில் ஏழு லோகங்கள் நவகிரஹங்களுடனும், நட்சத்திர மண்டலத்தோடும் சுற்றி வருவதாகவும் தேரின் கீழ் அமைப்பில் ஏழு அடுக்குகளாக சிந்தித்து அவற்றில் அதல லோகம் முதல் பாதாள லோகம் வரையிலான ஏழு லோகங்களை சிந்திக்க வேண்டும்.

இதன் அடிப்படையிலே ஒவ்வொரு யாகத்தின் முடிவிலும்
பூ4ஸ்வாஹா: அக்நயே இதம் நமம (கீழுள்ள லோகங்களிருந்து நாம் பூமி வரையிலான அமைப்பிற்கு அக்நி ஆதாரமென்றும்)
பு4வஸ்வாஹா: வாயவே இதம் நமம (பூலோகம் முதல் ஸத்ய லோகம் வரையிலான ஏழு லோகங்களுக்கும் வாயுவாகிய பிராணன்கள் ஆதாரமென்றும்)
ஸுவஸ்வாஹா: ஸூர்யா இதம் நமம (தேவர்கள் வாழும் பகுதியான ஏழு லோகங்களுக்கும் சதுர்முக பிரம்மாவின் இருப்பிடமாக கருதப்படும் சூர்ய மண்டலம் ஆதாரமென்றும் அதாவது தேவர்களின் உபாஸனைக்குரிய இடத்திலிருந்து தேவர்கள் வாழும் இருப்பிடம் வரை கருதப்படும்.)
ஓம்பூ4ர்ப்பு4வஸ்ஸுவ பிரஜாபதாய இதம் நமம (மூவேழ் உலகங்களுக்கும் காரணமான பாற்கடலில் அரவணையின் மேல் மோன நிலையில் சயனித்து கொண்டிருப்பவரும், பிரம்மனை தனது நாபிகமலத்திலிருந்து படைத்தவருமாகிய மஹாவிஷ்ணுவே ஆதாரம்)
ஸ்ரீ விஷ்ணுவே ஸ்வாஹா: ஸ்ரீ விஷ்ணு பரமாத்மநே இதம் நமம (மேற்கூறிய ஸ்ரீயாகிய லக்ஷ்மியுடன் கூடிய மஹாவிஷ்ணுவிற்கும், பரமபதநாயகனாக உள்ள ஸ்ரீ விஷ்ணு பரமாத்மாவாகிய ஸ்ரீமந் நாராயணனே ஆதாரம்.)

5. மூ ஏழ் உலகமும் ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ நால்வகை ஊழி என் நாயிற்றும் சிறப்பினை

- (பரிபாடல் 3)

மூலேழ் உலகங்களையும் ஒரு குடை நிழலின் கீழ் ஆள்பவன் நீ., ஊழி முதல்வன் நீ.

கெடுகில் கேள்வியுன் நடு ஆதலும் (பரி பாடல் 2)

அழியாத வேதத்தில் அந்தர்யாமியாக ஓதப்படுபவன் நீயே.

அமரர்க்கு முதல்வன் நீ (பரிபாடல் 3)

தேவர்கள் அனைவருக்கும் காரணமாயிருப்பவன் நீயே.,

புருவத்துக் கருவல் கந்தரத்ததால் தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்பருத்தை நடுவன் ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும் (பரிபாடல் 4)

பூர்வகாலத்தில் வராஹ உருக்கொண்டு கழுத்தால் தாங்கி இவ்வுலகத்தையும் தாங்கி நிறுத்திய செயலும், திரிவிக்ரமாய் மூவுலகங்களையும் அளந்த செயலும் மேருமலை போல் உயர்ந்த தன்மையாலும் இன்றளவும் ஸங்கல்பத்தில் ஸ்வேத வராஹ கல்பம் என்றே கூறப்படுகிறது.

சுவமை, இசைமை................................காற்றோடு களனும் (பரிபாடல் 13)

பஞ்ச பூதங்களும்,அவற்றின் ஐந்து குணங்களும் (ஸப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம்) அவற்றை அறியும் பஞ்ச இந்திரியங்களும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) உன்ன தீனமே ஆகையால் எல்லாப் பொருள்களும் உன்னிடத்தில் தோன்றி, வாழ்ந்து, மறைபவையே

இலங்கு ஒளி மருப்பின் களிலும் ஆக, மூ உலகு, ஆகிய தலைபிரி ஒருவனை ஏவல் இல் முதுமொழி கூறும் (பரிபாடல் 13)

ஒளி பொருத்திய தந்தத்தை பொருந்தியுடைய வராஹ மூர்த்தியாகவும் ஆகி மூன்று வியூஹமும் ஆகி தலைமை மாபெற்ற உன்னை எவராலும் இயற்றப்படாததாய் அநாதியாய் உள்ள வேதம் ஓதும்.

மன்பெறும் சிறப்பு இல் தவா விழுப்புகழ் மாயோன் (தொல்காப்பியம்)

அழியாத பெரும் சிறப்பை உடைய ஸ்தானத்தையும், அழியாத சீர்மை மிக்க புகழையும் உடைய திருமால்

தேயா விழுப்புகழ் தெய்வம் (முல்லைக்கலி 3)

அழியாத சிறந்த புகழை உடைய முல்லைத் தெய்வமான திருமால்.

மேற்கூறிய பெருமைகள் அனைத்தும் சங்க கால தமிழர் சமய இலக்கியங்களில் விஷ்ணுவுக்கே உரியதாக கூறப்பட்டுள்ளன. இவற்றில் தேரின் முக்யமான மூன்று அடுக்குகளாக உள்ள மேல், நடு, கீழ் ஆகியவை முறையே தேவ லோகம், மனுஷ்ய லோகம், அசுர லோகம் ஆகியவற்றை குறிப்பதாகவும்

மேலும் ஸத்வம், ராஜஸம், தாமஸம் முதலியவற்றை குறிப்பதாகவும்: அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் ஆகியவற்றை குறிப்பதாகவும் கொள்ள வேண்டும். மேல் உலகத்தில் தேவர்கள் வாழும் பகுதியில் ஸத்வ குணம் நிறைந்திருக்கும். நடு உலகமான மனுஷ்யர்கள் வாழும் பகுதியில் ராஜஸகுணம் மிகுந்திருக்கும். கீழ் உலகமான அசுரர்கள் வாழும் பகுதியில் தமோ குணம் மிகுந்திருக்கும். இருப்பினும் வாமன அவதாரத்தில் பகவானின் திருவடியானது பக்தனாகிய மாபலி சிரசில் வைக்கப்பட்டு கீழான ஏழு லோகங்களிலும் அழுத்தி, இறுதியாக உள்ள பாதாள லோகத்திற்கு அரசனாக்கியதால் கீழுள்ள ஏழு லோகங்களிலும் சிறிது ஸத்வ குணம் கலந்திருக்கும். இவ்வாறாக மூவுலகங்களையும் அளந்ததோடல்லாமல் இம் மூவுலகங்களும் அந்தர்யாமியாய் தனது விஸ்வரூபத்தால் தரிக்கப்பட்டுள்ளதால் நிற்பதெல்லாம் நெடுமால் என்று ஆழ்வாகள் பாடியுள்ளனர்.

மேலே இருந்து கீழ் நோக்கி வரும் 12 ஆதித்யர்களின் ஒளியானது குறைந்து கொண்டே வருவதும் கீழிருந்து மேல் நோக்கி செல்லும் 11 ருத்ரர்களிடமுள்ள அக்நியானது மேலே செல்ல செல்ல குறைவதாகவும் இரண்டிற்கும் நடுவில் (பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மஹாவிஷ்ணுவின் திருவடியை மஹாலெட்சுமி பற்றிக் கொண்டுள்ளதால் உண்டாகும்) பரமனின் திருவடியிலிருந்து உண்டாகும் ஆகாய கங்கையானது மூவேழ் உலகங்களுக்கும் அரணாகவும் உள்ளது போல் சிந்திக்க வேண்டும்.

6. இங்கு விஷ்ணுவின் மேலான ஒளியாலே அக்னிகள் (ஏனைய ருத்ரர்கள்) வாயுக்கள் (பிராணன்கள்) பன்னிரு ஆதித்யர்கள், அஷ்டவஸுக்கள், அஸ்விநி தேவர்கள் இருவர் ஆகிய முப்பத்து முக்கோடி தேவர்களும் மேலான பரமபதத்திலிருந்து ஸங்கல்ப மாத்திரத்தாலே தரித்து நிற்பதாக கூறப்படுகிறது. (இராம பாரயணம்)

விஷ்ணுவுக்கு மேலான இருப்பிடம் எது என்ற கேள்விக்கு உபநிஷத் பதில் அளிக்கிறது. அந்தராதித்யே என்று சகல சூர்ய மண்டலங்களிலும் அந்தர்யாமியாய் வசிக்கும் பரமபுருஷனையும், ஹ்ருதயம் விஷவஸ்யாயதகவும் என்று ஹ்ருதயத்தையும் அம்பஸ்யபாரே, நாகஸ்ய பிருஷ்டே என்று திருப்பாற்கடலையும் பரம்வ்யோமந் விஷ்ணோர்ய பரமபதம் என்று பரமபதத்தையும் விஷ்ணுவுக்கு ஸ்தானங்களாக வேதங்கள் உரைக்கின்றன.

7. அந்தர் ப4ஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தி2முதலான வாக்யங்கள் உலகனைத்திலும் உள்ளும், புறமும் வியாபித்திருப்பதாவும், அர்ச்சா நிலையானது பகவானுடைய திருக்கோவில்களாகவும் உரைக்கின்றன. இப்படி உலகம் முழுவதுமே விஷ்ணுவிற்கு இருப்பிடம் ஆகையால் அவற்றுள் மேலான இருப்பிடத்தை பற்றி கூறுகையில்,

த்ரிபதா3தாத் தா4ரயந் தே3வா (த்ரிபாத3ஸ்யாம் ம்ருதம் தி3வி)

- (புருஷ ஸுக்தம்)

இந்த பரமபுருஷனுடைய விபூதியில் முக்கால் பாகம் பரமபதத்தில் உள்ளது என்று சொல்லப்பட்ட த்ரிபாத் விபூதியிலிருந்து ஒளி விஞ்சியவனான விஷ்ணு தரித்து நிற்கிறான்.

எதை தரித்து நிற்கிறான் எனில் (யத் விஷ்ணோ ரேக முத்தமம்) விஷ்ணுவாகிய தன்னுடைய லீலைக்கும் குண விசாரத்திற்கும் விஷயமானதாலே மிகச்சிறந்து விளங்குவதும் (பாதோஸ்யா விஷ்வா பூதாநி) (புருஷ ஸுக்தம்) இவ்வுலகில் உள்ள எல்லா பூதங்களும் (இந்நூலில் 2-ம் அத்யாயம் முதல் 4-ம் அத்யாயம் வரை கூறப்பட்டுள்ள சூர்ய மண்டலங்கள் அனைத்தையும், புவனங்கள் அனைத்தையும்) இவனுடைய விபூதியில் கால் பாகம் என்று ஏகாபதி விபூதியாகச் சொல்லப்படுவதுமான இந்த லீலா விபூதியை தரித்து நிற்கிறான்.

அதோ தேவா.......................ஸப்த்தா4மப4 - (விஷ்ணு ஸுக்தம்)

யாதோரு பூமியிலிருந்து விஷ்ணு பகவான் ஏழு ஸந்தஸ்ஸுகளை உபகரணமாக (ஸாதனமாக) கொண்டு அளந்தருளினரோ அந்த பூமியிலிருந்து நித்யஸூரிகள் நம்மை காப்பாற்றட்டும். தைத்தீரிய ஸம்ஹிதையிலும் எம்பெருமான் மஹாபலியிடமிருந்து தேவர்களுக்காக உலகங்களை மீட்டுதருவதற்காக அளந்த போது ஏழு ஸந்தஸ்ஸுகளை உபகரணமாயிருந்தன என்று உரைக்கப்பட்டது.

அஷ்டாக்ஷரம், அஷ்டலெட்சுமி, அஷ்டவக்ரரிஷி, அஷ்டவஸுக்கள், அஷ்டாங்கயோகம்

முதலியவை எவ்வாறு ஒன்றின் வெளிப்பாட்டிலிருந்து மற்றொன்று எவ்வாறு உருவாகின்றதோ அதைப்போன்று எட்டின் கீழ் அமைப்புள்ள ஏழு ஸந்தஸ்ஸுகளிடமிருந்து காயத்ரி மந்திரத்தில் வரும் அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஷ்யப, ஆங்கிரஸ ஆகிய ஏழு ரிஷிகளாகிய (ஏழு சூர்யர்களாகிய) ஏழு அடுக்குகள் கொண்ட தேரின் மேல் அமைப்பானது மேலான தேவலோகங்கள் ஏழாகவும்,

காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், பங்க்தி, பிரஹதி, த்ருஷ்டுப், ஜகத்யஸ் ஆகிய ஏழு அனுஷ்டான தேவதைகளால் நாம் வாழும் பூலோகம் முதலாக ஸத்ய லோகம் ஈறாக உள்ள ஏழு ஸாதனங்களாகவும்

அக்நி, வாயு, அர்க்க, வாகீஸ, வருண, இந்திர, விச்வேதேவ தேவதா ஆகிய ஏழு ஸாதனங்களை அடிப்படையாக கொண்டு கீழான ஏழு லோகங்களையும் (தேரின் கீழ் தளம்) பகவானின் மூன்று அடிவைப்புகளால் வாமன அவதாரத்தில் அளக்கப்பட்டிருப்பதை அறிகிறோம். மேலும் காயத்ரி ஜபம் செய்யும் போதும் முதலில் சிரஸை (உடம்பின் மேல் பாகம்) தொட்டு அத்ரி.....ஆங்கிரஸ வரையிலான ஏழு ரிஷிகளின் பெயரையும் பிறகு காயத்ரி................ஜகத்யஸ் சந்தாகும்ஸி ஆகிய ஏழு தேவதைகளின் பெயரால் உதட்டின் நுனியையும் (உடம்பின் முக மண்டல அமைப்பையும்) பிறகு அக்நி....................விச்வே தேவ தேவதா ஆகிய ஏழு ஸாதனங்களால் உடம்பிலுள்ள தொப்புள் பகுதியையும் தொடுகிறோம். பரமாத்மாவின் விஸ்வரூபத்தை மனதால் தொடுகிறோம்.

8. அறிவை தேர்பாகனாகவும், மனதை கடிவாளமாகவும், இந்திரங்களாகிய குதிரைகள் பூட்டிய சரீரமாகிற தேரைச்செலுத்தும் ஜீவன் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான். லட்சத்தில் ஒரு பகுதியாக ஸூக்ஷ்மமானவனாகச் சொல்லப்படுகிறான் ஜீவன். பெரியவனான ஜீவனை காட்டிலும் அவ்யக்தமாகிற மூலப்ரக்ருதியிலிருந்து உண்டான அவனுடைய சரீரம் சிறந்தது. அந்த சரீரத்தை காட்டிலும் புருஷன் எனப்படும் பரமாத்மா சிறந்தவன். அந்த பரமாத்வை காட்டிலும் சிறந்ததொன்றுமில்லை. அவனே மேலே உபாயமாகவும், ப்ராப்யமாகவுமிருப்பவன்.

- விஷ்ணு ஸம்ருதி நிர்ணயம்

9. இரவியர் மணி நெடுந்தேரோடு...........அரங்காத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

பெரியதாகவும், பெருமை மிக்கதாவும், உள்ள தேரோடு கூடிய 12 ஆதித்யர்களும், ஸம்சாரிகளுக்கு நிர்வாஹிகளான 11 ருத்ரர்களும், பொருந்திய மயில் வாஹனத்தை உடைய சுப்ரமணியனும், மருதகணங்களாக 49 பேரும், அஷ்டவஸுக்களும் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு வந்து நெருங்கி நிற்க இவர்களுடைய வாஹனமான குதிரைகள் பூண்ட ரதங்களும், பாட்டும், ஆட்டமுமாய் பெரிய தேவஸேனா கூட்டங்கள் வந்து புகுந்து நெருங்கியிருக்கிற திரளானதும் பெரிய மலை போன்றதுமானகோயிலில் தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே நிற்கின்றது.

10. கலக்க ஏழ் கடல் .....................................................இம் மண்ணின் மிசெயே

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

கண்ணனே ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு உலகங்களும் தேர் ஓட்டிய பொழுது (நீரும், மலையும், பூமியும் வாசியில்லாமால்) கலங்கின. இவ்வாறு முடிய தேர் ஓட்டினான். மேலும் காரியமாகிய தேரினை காரணமாகிற மூலப்ரக்ருதியிலே நடத்துகிற பொழுது அது அழியாதபடி நடத்தியது அல்லவா ஆச்சர்யம். மற்றும் அந்தணன் புத்திரர்களை மீட்டு வந்து கொடுத்தாய் இவ்வாறு ஆச்சர்யமான பல செயல்களை செய்து முடித்தாய்! வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் தரித்தவனாய் உள்ள கரிய நிறங்கொண்ட திருமாலை கலங்கச்செய்யும் என் நாவால் பாசுரங்களை பாடினேன்.

11. தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
     தமருகந்த தெப்பேர் மற்றப்பேர் தமருகந்து
     எவ்வண்ணந் சிந்தித் திமையா திருப்பரே
     அவ்வண்ணம் ஆழியான் ஆம்.

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

அன்பர் இவ்வாறு எம்பெருமானிடமிருந்து (பக்தி) செய்யுமளவில் இவர்கள் உகக்கும் உருவத்தையே பகவான் கொள்வான் இவர்கள் உகந்து சாத்தும் திருநாமத்தையே ஏற்பார் எவ்வாறு இடைவிடாமல் சிந்தித்து தியானம் செய்து கொண்டிருப்பாரோ அவ்வடிவமே ஆவான் சக்ரபாணியான எம்பெருமான்.

12. I எந்தாய் அந்தர மேழுமுனனாய்

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

ஆதிகாலம் தொடங்கி மேல் ஏழு உலகங்களுக்கும் நிர்வாஹகன் ஆனவனே

     II பெரும்புறக்கடலை யடலேற்றிப்பென்னை யானை யென்னில்

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

முனிவர்களுக்குள் தரும் தவத்தை அண்டங்களுக்கப்பால் உள்ள பெரிய கடல் போன்றவனை........(இங்கு பெரிய கடலானது பாற்கடல் என்று சிந்திக்க வேண்டும்) எண்ணிலாத்தவமுடைய முனிவர்களுக்கு தவத்தின் பலனை அருளும் தபோமயமான ஸர்வக்ஞனை

     III மேய்ந் நலத் தவத்தை திவத்தை தரும் .........................
        ஒரு தாரா நின்றுளொருக்கிய நின்னையல்லால்.

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

தவம், தவத்தின் பயன், காலம் இவை போன்றவற்றுக்கு இவன் நிர்வாஹகன். ஸ்வரூபத்துக்கு ஏற்றதாய் பக்தியோக ரூபமான தவத்திற்கு விஷயமானவனையும் ப்ரபத்திக்கு விஷயமானவனையும் பரமபதத்தை கொடுப்பவனையும் எம்பெருமான் என்று சிந்திக்க வேண்டும்.

     IV பெருநீரும் விண்ணும் மலை யு மூவுலகேழும்

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

கடல்கள், ஆகாசம், மலைகள், மூவேழு உலகங்கள் யாவையும் ஒரு மாலையாக உன்னிடத்திலேயே சேர்த்துக் கொண்டாய். (தார்மாலை) தவ வடிவம் தேரின் மேல் ஏழு அடுக்குகள் கொண்ட வடிவமைப்பு

13. காரார் புரவி யேழ் பூண்ட தனியாழி தேரார் நிறை
     கதிரோன் மண்டலத்தை நீண்டு புக்கு
     ஆராவமுதாமங்கெய்தி அதனின்றும்
     வாராதொழி வதொன்றுண்டோ அது நிற்க
     ஏரார் முயல் விட்டு காக்கைப்பின் போவாதே !

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

வீடு பேறு என்ற புருஷார்த்தம் உங்களுக்கு உண்டென்று எண்ணம் உடையவராயிருப்பின், மேகமண்டலத்தில் ஏழு குதிரைகளின் சஞ்சாரம் அந்தக்குதிரைகள் பூட்டிய தேர், ஒரே சக்கரம், அதில் நிறைந்து விளங்கும் சூர்ய ஜோதிகளை உடைய சூர்யனின் மண்டலததை நீண்டு மேலே பரமபதத்தில் புகுந்து அங்கு திருப்தி பெறாதவாறு அமுதமாகிய பரம்பொருளை அடைந்து அவ்விடத்திலிருந்தும் திரும்பி வராமலிருத்தலே வீடு பேறு ஆகும் (ஜீவனுக்கு மோக்ஷ பிராப்தி உண்டாகும் வழி)

ஒட்டுமொத்தமான காரண ப்ரக்ருதியாகிய மூலப்ரக்ருதியின் வெளித்தோற்றத்தை கூறுவதாகவும், அதாவது தேரின் மேலான வடிவமைப்பை கூறுவதாகவும், கருவறையின் மேல் அமைந்துள்ள அஷ்டாங்க விமான கோபுரத்தை அனுசரித்தும் ஆழ்வார்கள் பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளதை காணலாம்.

14. ருக் வேதத்தில் விஷ்ணுவின் வீரச்செயல்கள் குறிப்பிடபட்டுள்ளன. அவன் திரிவிக்ரமன் அவதாரம் எடுத்து மூன்று அடிவைப்புகளால் மூன்று உலகங்களையும் அளந்தான்

ஓர் அடிவைப்பால் தேவலோகங்களாக கருதப்படுவதுமான மேலான ஏழு லோகங்களையும், மற்றொரு அடிவைப்பால் பூமி முதலாகவும் ஸத்யலோகம் இறுதியாகவும் உள்ள நடுவான ஏழு லோகங்களையும் மூன்றாவது அடிவைப்பால் மாபலியின் சிரஸில் தலை வைத்து அவனை பாதாள லோகம் வரை அழுத்தியதன் மூலம் கீழுள்ள ஏழு லோகத்தையும் (சிறிதளவு ஸத்வகுணத்தை கீழுள்ள லோகங்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற கருணையால்) அளந்தான். அவன் முடிவுகளை தானே எடுக்கிறான். முக்திநிலையையும் உலக நலனையும் விரும்புவோர் விஷ்ணுவிடம் செல்க. பரந்த அடிகளை வைக்கும் விஷ்ணுவின் பரமபதத்தில் நித்யசூரிகள் (அங்கு வாசம் செய்யும் முக்தி பெற்ற உயிர்கள்) அவனுடைய புகழைப்பாடி சூழ்ந்திருந்து தொழுது நிற்கின்றனர். பரமபதநாதனாகிய வாஸுதேவன் தனது நினைவாலேயே விதவிதமான இயல்புள்ள காலச்சக்கரத்தை (360 பாகைகளை கொண்ட சக்கரத்தை போலே) சுழற்றி தோற்றுவிக்கிறான். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் அவனுடைய தேகம் தியானத்தினாலும், நுட்பமான ஞானத்தாலும் அறியத்தக்கது. எல்லோருமே விஷ்ணுவை பணிகிறார்கள். பிரம்மனும், ருத்ரனும், அஸ்விநிகளும், வஸுக்களும், மருத்துகளும் விஷ்ணுவை போற்றுகின்றனர். இந்திரன் விஷ்ணுவின் கட்டளைப்படி நடக்கிறான்.மேகத்தை திறக்கிறான். எங்கும் ஒளியையும், சக்தியையும் விஷ்ணுவின் துணை கொண்டு (விஷ்ணுவை அந்தர்யாமியாய் கொண்டு) அளிக்கிறான். விஷ்ணுவானவர் யாகத்திலும் வந்து பக்தர்களுக்கு யாகரூபியாய் வேண்டுவன அளிக்கிறான். (மூன்று அடுக்குகளை உடைய தேரின் வடிவமைப்பிலான மூவேழ் உலகங்களையும் மூன்று அடிவைப்புகளால் அளக்கப்படுவதை இங்கு காண்கிறோம்.)

- நாலாயிர திவ்ய பிரபந்தம்

த்ரிபு4வனம் விஷ்ணு மீஸம் நமாமி

மூன்று உலகங்களையும் ஸரீரமாகக் கொண்ட விஷ்ணுவை வணங்குகிறேன். (நிற்பதெல்லாம் நெடுமால்) மூன்று உலகங்களையும் அந்தர்யாமியாய் ஒரு விஷேசமான நிலையில் (குலம் எனப்படும் ஸுஷும்னா நாடி மூலம்) தாங்கிக்கொண்டுள்ளார் ருக்வேதம்

15. குதிரையே! கீழேயிருந்து வானின் வழியே சூர்யனுடன் செல்கிறாய். உன்னை மனிதர்கள் தேருடன் தொடர்கிறார்கள். பசுக்களும் தொடர்கின்றன. சூர்யனின் குதிரைகள் பல நிறமுள்ளவை. அவை ஹம்ஸம் போல் அணிவகுத்து பாய்கின்றன. குதிரையே! உனக்கு பறக்கும் தன்மை உண்டு. (தற்போதைய அறிவியலின்படி குதிரையானது ஒரு இயங்கு சக்தியாக கருதப்படுகிறது.) நீ உத்தமமான, மேலான இடத்திற்கு செல்கிறாய். ஏழு பேர் ஒரு சக்கரமுள்ள தேரை ஏந்துகிறார்கள். ஏழு நாமங்கள் உள்ள குதிரை அவற்றை இழுக்கிறது. சக்கரத்திற்கு மூன்று இருசுகள் உண்டு. அது (சக்கரம்) தேயாததாவும், தளராததாகவும் உள்ளது. அந்த தேரில் ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். சூர்யனுடைய தேரின் வட்டத்தில் எல்லா உலகங்களும் நிலைத்திருக்கின்றன. அந்த இருசு முறிவதில்லை. கெட்டியானது, அது வேகமாக போனாலும் சூடாகாது. வட்டங்கள் பன்னிரெண்டு, சக்கரம் ஒன்று.

- ருக்வேதம்

(ரத சக்கரத்தின் நாபியில் ஆரங்கள் இணைக்கப்பட்டிருப்பது போல் ப்ராணன் முதலிய கலைகள்யாவும் யாரிடம் நிலை பெற்றிக்கின்றனவோ................ அந்த புருஷனை வணங்குகிறேன்) மேலான உலகத்தின் அமைப்பு இதில் கூறப்பட்டுள்ளது. திரிபாத் விபூதியின் ஹம்ஸம் மூன்று இருசுகள். அதற்கடியில் உள்ள எட்டு இதழ்கள் கொண்ட தாமரை வடிவமைப்பு (எட்டு சூர்யர்கள்). அதனை தாங்கும் ஏழு பீடங்கள்(ஏழு ரிஷிகள்) இவற்றின் வெளிப்பாடாக தோன்றும் ஒரு காரிய பிரபஞ்சத்தின் மேலான (தேவலோக) வடிவமைப்பான 12 ஆதித்யர்களாக கருதப்படும் 12 வருடங்கள் பிரம்மனின் ஹம்ஸமாக உள்ள குரு(பிரகஸ்பதி) 360 பாகைகளை கொண்ட ஒரு வட்ட வடிவமான ராசி அமைப்பை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் 12 வருடங்கள். சூர்ய புராணத்தில் வரும் சூர்யன் ஒருமுறை சுற்றி வருவதால் உத்தராயண காலமாகிய ஆறு மாதங்கள் (தேவர்களுக்கு பகற்பொழுது) தக்ஷிணாயன காலமாகிய ஆறு மாதங்கள் (அசுரர்களுக்கு பகற்பொழுது) உண்டாகிறது. ஆனால் இங்கு கூறப்படும் சூர்ய மண்டலமானது 12 வருடங்களை ஒரு தடவை வலம் வருவதாக இயங்குகிறது. இந்த கால அளவானது பாற்கடலில் ஸயனித்துள்ள மஹாவிஷ்ணுவை அடைவதற்கு முன் ரோமஸ ரிஷியின் கால அளவையும், அஷ்டவக்ர மஹரிஷியின் கால அளவையும் கடந்து செல்ல செல்ல முழுவதுமாக குறைந்து நகர்தல், அசைதல் அற்ற தன்மையை இழந்து விடுவதால் எம்பெருமானின் ராஜ்யத்தில் காலம் ஆட்சி செலுத்தவதில்லை, இதனையும் தாண்டி உள்ளது திரிபாத் விபூதியும், பரமபதமும்.

இந்த பரமபதம்தான் நிலையானது, காலஅளவற்றது, அழியாதது. இதுவே ஜீவாத்மா அடைவதற்குறிய மோக்ஷ ஸ்தானமாகும். இதுவே நிலையான சூர்ய மண்டலம். இதில் வசிப்பவர்தான் பொன்மயமான புருஷனாகிய ஸ்ரீமந் நாராயணன். நமது ஆத்மா அவரை அடைந்து மோக்ஷ சுகத்தை பெறுவதே நமது லட்சியமாகும்.

16. I யாகம் என்பது விஷ்ணுவிற்கு பெயர், விஷ்ணு என்பது ஒரு பரந்த பொருளின்பெயர். யக்ஞம் என்றால் எல்லா மேன்மைகளையும் சுமக்கும் ரதமாகும்.

     II அவனுடைய அங்கங்களாக விளங்குபவை: காலத்தை உருவாக்கக் கூடிய நக்ஷத்திரங்கள், கிரஹங்கள், ஜோதி, அக்நி, ஆதித்யன், ஸமித்து, கிரணம், புகை, பகல், ஜ்வாலை, திசை, தனல், மற்றும் அவரால் இயக்கப்படக்கூடிய பிற தேவதைகளாகிய எல்லாமுமாகும்.

       III விஷ்ணு இந்த மூவுலகையும் மூன்று அக்ஷரங்களால் ஜெயித்துள்ளார்.

     IV மருத்துகளுடன் ருத்ரர்கள் இணைகிறார்கள். வஸுக்களுடன் ஆதித்யர்கள் இணைகிறார்கள். ஆதித்யர்கள் மூன்று புவி ஜோதிகளை தாங்குகிறார்கள், .

   V இந்திரனே! நீ விஷ்ணுவின் இதயமாகும். இந்திரன் ஸோமன் கிரஹம். ஸோமனால் அமுதம் அடைவோம். ஸோமனே நீ பெருகவும் எல்லா பக்கங்களிலும் உன் பலம் குவியட்டும். ஏழு ரிஷிகளை எனக்காக மங்களகரமாய் திருப்தி செய்யவும்.

     VI இந்திரனே! உனக்கு நூற்றுக்கணக்கான பூலோகங்களும் த்யுலோகங்களும் இருப்பினும் அவைகள் சூர்யர்கள் சஞ்சரிப்பதற்கு போதிய வரைவாக இல்லை. ஏனென்றால் ஆயிரக்கணக்காண சூர்யர்கள் இருக்கின்றனர். (இங்கு ஆயிரக்கணக்காண சூர்யர்கள் என்பது ரோமஸ மஹரிஷியின் ஒவ்வொரு ரோமங்களாகும். ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும் போது ஒரு ரோமம் (அண்டத்தை படைப்பதற்கான மூல வித்து) உதிரும். இங்கு இந்திரனின் லோகமானது பிரம்மாண்டத்தின் வெளிப்பாடாகவே வேதம் கூறுகிறது. அதாவது பிரம்ம லோகம், இந்திர லோகம் போன்றவற்றின் உள் கட்டமைப்பில் தவ வடிவமாகக் கொண்ட ரோமஸ ரிஷியும் அதற்கும் மேலாக அஷ்டவக்ர (எட்டு கோணல்கள்) ரிஷியும் இருப்பதாக கருத வேண்டும். அதற்கும் உள் கட்டமைப்பில் திருப்பாற்கடலும், அதற்கு மேலாக நித்யசூரிகள் வசிக்கும் திரிபாத் விபூதியும், இறுதியாக பரமபதத்தையும் தியானிக்க வேண்டும்.)

சூர்யனே! பொன்மயமான வட்டிலால் ஸத்யமாகிய உனது திருமுகம் மறைக்கப்பட்டுள்ளது. ஸத்யத்தை விரும்பும் எனக்கு அந்த மறைப்பை நீக்கி அருள்வாயாக. (இங்கு சூர்யன் என்பது பரமபத நாதனையும், பொன்மயமான வட்டி என்பது மூலப்ரக்ருதியையும் குறிக்கும். மூலப்ரக்ருதியானது எண்ணிலடங்கா பிரம்ம அண்டங்களை தோற்றுவிக்கக்கூடிய மூலவித்துக்கள் அடங்கியுள்ள மண்டலமாகும். அதற்கும் உள்ளே இருக்கிற மேலான பரமபதத்தில் வசிப்பவர் மோக்ஷத்தை அளிக்கக்கூடிய பரவாஸுதேவனாகிய ஸ்ரீமந் நாராயணன்.

     VII தைத்திரீய ஆரண்யகத்தில் எட்டு சூர்யர்கள் ஆகாயத்திலிருந்து கொண்டு எங்கும் பிரகாசத்தை கொடுக்கின்றனர் என்று மஹரிஷிகள் கூறியுள்ளனர். ஆதித்யர்கள் 12 என்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது பத்மநாபன் என்ற நாமத்திற்கு எட்டு இதழ்களுடன் கூடிய தாமரையை உந்தியில் உடையவர் என்பதற்கிணங்க மூவுலகின் பிறப்பிற்கு காரணமாகிய தாமரையை எட்டு சூர்யர்களாக ஒரு மஹரிஷியும், வெளிப்பட்ட காரிய பிரபஞ்சத்தில் (லீலா விபூதியில்) நாராயணத் ப்ரஹ்ம ஜாயதே ..... என்ற ஸ்ருஷ்டி கிரமப்படியில் வரும் வேத வாக்யங்களில் கூறப்பட்டுள்ள 12ஆதித்யர்களை (12 சூர்யர்களை) மற்றொரு மஹரிஷியும் கண்டுள்ளார் என்பதாக கருதும் பட்சத்தில் இரண்டு மஹரிஷிகளும் கண்டுள்ளது போல் இரண்டுமே உண்மை தான் என்று கொள்ள வேண்டும்.

     VIII ஸூர்யோ யதா ஸர்வ லோகஸ்ய சக்ஷூ
   ( இவையெல்லாவற்றுக்கும்   மேலாக  உள்ள   பரவாஸுதேவன் எழுந்தருளியுள்ள பரமபதமான சூர்ய மண்டலமே ) சூர்யன் அனைத்து புவனங்களுக்கும் கண் போன்றவன் என்ற வாக்யத்திற்கு மிகவும் பொருந்தி வருகிறது. மேலும் ராமாவதாரத்தில் போருக்கு செல்லும் முன் அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகத்தை கூறி சூர்யனை வழி பட்டதும் இந்த சூர்ய மண்டலத்தில் வசிக்கும் ஸ்ரீமந் நாராயணனையே அன்றி சூர்ய புராணத்தில் வரும் சூர்யன் அல்ல.

   IX  ரதத்தில்  ஏழு  பெண்களான ( ஏழு குதிரைகள் )   எல்லாவற்றையும் புனிதமாக்கும் பிராணன்களை கிரணங்களுடன் இந்திரன் இணைத்து விடுகிறான். இந்த தன்னுடைய குதிரைகளுடன் ஜோடி, ஜோடியாக அவன் செல்கிறான். சூர்யனே! தேவரே! எங்கும் காண்பவனே! ரதத்தில் உன்னை ஒளிச்சுடருடன் ஏழு குதிரைகள் சுமக்கிறார்கள் (நாராயணனிடமிருந்து தோன்றி இந்திரனுடைய லோகத்தைப்பற்றிய வர்ணனை இங்கு கூறப்பட்டுள்ளது. வானத்தின் ஏழு ஓட்டங்களையும் தூண்டுகிறான்)

- ஸாமவேதம்

   X தினந்தோறும் சூர்யன் ஏழு நிலையில் ஏறி இறங்குவான் இவைகள் ஸோமனின் ஏழு நிலைப்பிரிவுகள்.

(ஒப்பம்) விவாஹ காலங்களில் மணமகன் மணமகளின் வலது காலைத் தொட்டு ஸப்தபதி என்ற அம்மி மிதிக்கும் கர்மா முடிந்த பிறகு மணமகள் தன்னுடைய சொந்தமான கோத்திரத்தை முழுமையாக இழந்து, மணமகனின் கோத்திரத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொள்கிறாள். மணமகனை விஷ்ணுவின் அம்ஸமாக கருதும் பக்ஷத்தில் மணப்பெண்ணை லக்ஷ்மி அம்ஸமாக கருதும் போது ஏழு அடிவைப்புகளால் பூமி முதலான ஏழு லோகங்களை பூதேவியை கொண்டு அளப்பதாக சிந்திக்க வேண்டியது.

- ஸாமவேதம்

     XI ஏழு முனிவர்கள் இந்த உலகம் முழுவதையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்த எழுவரும் வானத்தில் இருக்கிறார்கள். அவர்களில் ஏழு தத்வங்கள் அடக்கம் அவைகள் சேர்வதாலேயே இவ்வுலகங்கள் உருவாகின்றன. இந்த ஏழு முனிவர்களும் பிராணன் முதலிய தத்வங்களின் ஆதாரம். அவர்களுடைய மகிழ்ச்சி இங்கு உற்பத்தியாகும் பிள்ளைகளின் நல்ல குணங்களும் அவைகளின் வளர்ச்சியும் ஆகும். இது ஒரு மகத்தான தத்துவ விஞ்ஞானமாகும். ஏழு முனிவர்களின் இந்த வர்ணனை அனேகம் தடவை அதர்வன வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனை பற்றிய ஸூக்தங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன.

- அதர்வன வேதம்

   XII எம்பெருமானின் ஆவேச  அவதாரமாகிய நரஸிம்ஹனுக்கு மூன்று நேத்திரங்கள் தாபனீய உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. அதிலே தபன இந்து அக்நி நயன ....தபனீய ரஹஸ்யானம் சார: அந்த நரஸிம்ஹனின் வலது நேத்திரம் சூர்யன்., இடது நேத்திரம் சந்திரன்., இடையிலே ஒரு நேத்திரம் அது அக்நி. எல்லோருக்கும் கண்ணாய் இருக்கக்கூடிய பரமாத்மாவிற்கு இந்த மூன்று தேவதைகள் பரமாத்மாவின் விராடஸ்வரூபத்தில் நேத்திரமாய் இருக்கின்றன.

(ஒப்பம் : யாருக்கு அக்நி தலையோ, சூர்ய சந்திரர்கள் கண்களோ ..........)

- ஸாமவேதம்

தேரின் வடிவமைப்பான காரண, காரிய பிரபஞ்சத்தின் மேலே அக்நியும், வலப்புறம் சூர்யனையும், இடப்புறம் சந்திரனையும் சிந்திக்க வேண்டும் இதிலிருந்து சூர்ய புராணத்தில் வரும் சூர்யனுக்கும் வலது நேத்திரமாக கருதப்படும் சூர்யனும் ஒன்றேயாகும் இதைத்தான் புராணத்தில் ஒருபக்கம் சூர்யனையும், மறுபுறம் சந்திரனையும் வைத்து பார்க்கும் போது சூர்யமண்டலத்திற்கு வெகு தூரத்திற்கு அப்பால் சந்திர மண்டலமும் உள்ளது. என்னும் ரிஷிகளின் வாக்யம் இங்கு பொருந்தும். மேலும் சந்திரனுக்கு ஸோமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு ஸோமபானத்தை வர்ஷிப்பதால் ஸோமன் என்ற பெயர் உண்டாயிற்று இந்த ஸோம பானமானது தேவர்களுக்கு நீண்ட ஆயுளை தரவல்லதாகும். இந்த ஸோம பானமே பாற்கடலில் இருந்து கடையப்பெற்று அமிர்தமயமாய் பரமபத மண்டலத்தின் மேலும், திரிபாத் விபூதியின் மேலும் எப்போதும் சூழப்பட்டுள்ளதாய் உள்ளதால், சூரிய மண்டலத்திற்கு மேலே சந்திர மண்டலம் உள்ளது (அமிர்த மயமானது) என்று ரிஷிகள் கூறியுள்ளதும் இங்கு பொருந்தும். அடுத்த படியாக ஸந்த்யா வந்தனத்தில் காலையில் வந்தனம் செய்யும் போது சூர்யச்ச மாமன்யுச்ச .... என்று கூறும் மனிதன் (மனுஷ்ய லோகம்) மாலையில் அக்னிச்ச மாமன்யுச்ச என்று கூறுவதும் இங்கு பொருந்தும். மேலும் மரணமடைந்த பிறகு சரீரத்தை விட்டுச்செல்லும் ஜீவன் அக்னி ஸமுத்திரத்தை தாண்டி செல்ல வேண்டி உள்ளதாகவும், அதற்காக குதிரை ஒன்று ஏற்றிச் செல்ல வருமென்றும் அந்த குதிரையை வரவழைப்பதற்காக உதகும்ப சிரார்த்த மண்டலம் என்று கூறி இன்றளவும் சிரார்த்த கர்மங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.

   XIII இனி தேருக்கும், மனிதர்களுக்கும், நாட்டிற்கும் தொடர்புடைய வாக்யங்கள் சூர்யபுராணத்தில் கூறப்பட்டுள்ளதை காணலாம். தேரின் அச்சு முறிந்தால் அரசருக்கு ஆபத்து உண்டாகும். தேர் முறிந்தால் பிராம்மணருக்கு ஆகாது. பலவிதமான தீமைகள் உண்டாகும். தேரில் உள்ள தட்டு முறிந்தால் வைசியருக்கு துன்பங்கள் நேரிடும். ஏர்க்கால் முறிந்தால் ஏனையோருக்கு கெடுதிகள் பல உண்டாகும். நுகத்தடி முறிந்து விட்டால் நாட்டிலே மழை பொழியாது, பஞ்சம் உண்டாகும். பீடம் முறிந்தால் ஜனங்களுக்கு பயம் ஏற்படும். சக்கரங்களில் ஏதேனும் ஒன்று முறிந்தாலும் நாட்டிற்கு வெளியிலிருந்து ஆபத்து ஏற்படும். மேலே உள்ள குடம் முறிந்து விழுந்தால் மொத்தத்தில் அனைவருக்குமே கெடுதல் உண்டாகும்.

(மேலேயுள்ள குடமானது மூலப்ரக்ருதியின் வடிவமைப்பை போன்று உள்ளதால் அனைவருக்குமே கெடுதி என்று கூறப்பட்டுள்ளதாக அறியலாம்.) தேர் தலை கீழாக கவிழ்ந்தால் நாட்டுக்கே ஆபத்து உண்டாகும். ஆகவே தேர் வீதி வலம் வருகையில் மிகவும் கவனமாக இழுத்து வர வேண்டும்.

விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியிருந்து மூன்று புகழுரைகள்

ரதா2ங்கபாணயே நம: தேரின் ஒரு பகுதியாக இருக்கும் சக்கர ஆயுதத்தை தயார் நிலையில் வைத்திருப்பவர் (தேரின் அம்ஸமாக காரணகாரிய பிரபஞ்சத்தை தாங்குபவர்.)

கும்ப: அடியார்களுக்கு பழகின வடிவில் ஒளிவிடுபவர்

ஸர்வப்ரஹரணாயுதாய நம: எய்துவன எல்லாம் ஆயுதமாகக் கொண்டவர்.

   XIV ஓம் நமோ நாராயணய என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை பத்மாஸனத்தில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டே புருவ மத்தியில் ஒளி பெற்று, தேரின் வடிவமைப்பை தியானிக்க வேண்டும். உச்சியில் உள்ள தங்க கலசத்தை பரமபதமாகவும், அதற்கு கீழ் உள்ள வட்ட வடிவமைப்பில் அமைந்துள்ள மூன்று ரேகையானது திரிபாத் விபூதியாகவும், அதற்கும் கீழ் உள்ள எட்டு அடுக்குகளானது அஷ்டலக்ஷ்மி, அஷ்டவக்ரரிஷி, அஷ்டமசித்தி, அஷ்டாங்கயோகம் ஆகிய எட்டு எட்டாய் உள்ள அனைத்தையும் தியானிக்கத்தக்கது. அதற்கு கீழே ஏழு பீடங்கள் தாங்குவதையும் தியானிக்க வேண்டும்.

Ratham / Car

இந்த அமைப்பை பன்னிரெண்டு ஆரங்களும், ஏழு சுற்றுகளும் உடைய தேவலோகம் ஏழும் வெளிப்படுவதாகவும், அதே 12 ஆரங்களால் கீழ் நோக்கி வந்து பூலோகம் முதலான ஏழு லோகத்தையும் மூடிப்பாதுகாப்பாக உள்ளதைப் போன்றும் அதற்கும் கீழே பன்னிரெண்டு ஆரங்கள் சுருங்கி வந்து கீழுள்ள ஏழு லோகங்களுக்கும் அரணாக உள்ளதாகவும் தியானிக்க வேண்டும். தேரின் கீழுள்ள நான்கு சக்கரங்களனாது நான்கு வேதங்களாகவும் தியானித்து மனதை எம்பெருமானிடத்து நிலை நிறுத்துவதன் மூலமாக உங்களது எண்ணங்களுக்கேற்ப இவ்வுலகில் நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ அதில் வெற்றியை அடையளாம்.

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.