ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II
ஹரி ஓம்
ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம:

கட்டுரையின் நோக்கம்

பகவான் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கும் நிலையான பரமபதஸ்தானம் பற்றியும், நிலையற்ற பல சூரியமண்டலங்களை பற்றியும் வேதங்களில் கூறப்பட்டிருப்பதை விரிவாக எடுத்துரைத்து, அந்த பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனை அடைவதற்கான மார்க்கங்களை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பரமபதஸ்தானம்:- ஜகத்காரணனாய், திவ்யதிருமங்களமேனியை உடையவனாய், ஸகல கல்யாண குணபூர்ணனாய், தேவாதி தேவனாய், ப்ரஹ்மானந்தம் உடையவராய், ஆகாசத்தைப் போன்று எங்கும் வியாபித்திருப்பவராய், உலகிற்கெல்லாம் கண்ணாக இருப்பவராய், ஸகல புவனங்களுக்கும் மேலானதொரு ஸ்தானமாகிய பரமபதஸ்தானத்தில் ஸகல ஜீவர்களுக்கும் மோக்ஷத்தை அளிக்கக்கூடியவராய் எழுந்தருளி உள்ளார் பகவான் ஸ்ரீமந் நாராயணன்.

அத்தகைய பரமபதமானது ஆயிரங்கோடி ஸூர்யர்கள் ஒரு சேர உதித்தாற் போன்ற ஒளி உடையதாகவும், பொன்மயமானதாகவும், நித்யமானதாகவும், அழிவற்றதாகவும், பூர்ணமாகவும், கால, தேச, வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்ட சூரியமண்டலமாகவும் உள்ளது என்று வேதங்களின் சாராம்சமாக விளங்கும் உபநிஷத்துகளில் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளன.

அப்படிப்பட்ட பரமபதமான சூர்யமண்டலத்தைப்பற்றி அறிவதற்கு முன் வேறு பல சூர்யமண்டலங்களின் விபரமும் வேதங்களில் கூறப்படுவதால், இக்கட்டுரையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சூரியமண்டலத்தை பற்றி விளக்கி, இறுதியில் ஜீவனுக்கு மோக்ஷத்தை அளிக்கக்கூடிய, கால, தேச, வர்த்தமானத்திற்கும் அப்பாற்பட்டதுமான பரமபதமான சூர்யமண்டலத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

முதலாவது அத்யாயத்தில்    மஹாஸங்கல்பத்தின்   மூலம்  பரநிலை,  வியூஹ    நிலை, விபவ நிலை, அந்தர்யாமித்வ நிலை, அர்ச்சா நிலை ஆகிய ஐந்து நிலைகளுடன் கூடிய பரமாத்மாவுடன் எப்படி ஒரு தொடர்பை உண்டாக்கி கொள்கிறோம் என்றும், புண்யாவாசனம், யாகம் முதலியவை முடிந்த பிறகு எப்படி அக்னி, வாயு, சூரியனை தூதுவனாகக்கொண்டு நாம் துவங்கிய காரியத்தின் பலனை ஸ்ரீ மந் நாராயணனிடமே லயமடையச்செய்கிறோம் என்றும், நாம் வாழும் இந்த சூர்யமண்டலத்தின் ஆயுள் கால, தேச, வர்த்தமானமுடையதாகவும், பிரம்மாவின் ஆயுட்காலமான 1000 சதுர் யுகங்கள் முடிவடைந்த பின் முடிவுறும் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த சூர்யமண்டலம் நிலையானதல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது  அத்யாயத்தில்    ஒவ்வொரு  மனிதனிடத்திலும்  இருக்கும்  ஒரு  ஆத்மீக இதயம் பற்றியும், எவ்வாறு அந்த ஆத்மீக இதயம், ஆகாஸமும், நக்ஷத்திரங்களுடன் கூடிய சூர்ய மண்டலத்தைப் போன்று விளங்குகிறது என்றும், எதனால் இந்த சூரியமண்டலமும் நிலையற்றற்றது என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது அத்யாயத்தில்   வேதங்களின் ஒரு அங்கமாக கருதப்படும் ஜோதிடத்தில் சூர்யனை பிரதானமாக்கொண்டு ஏனைய கிரஹங்களும், அவற்றிற்கு அப்பாற்பட்டு உள்ள நக்ஷத்திரமண்டலமும் நகரும் தன்மை உடையவை என்று கூறப்பட்டு, அவையாவும் 1000 சதுர் யுகங்கள் முடிந்த பிறகு, பகவானுக்கு ஸரீரமாக விளங்கும் ருத்ரனால் ஸம்ஹாரிக்கப்பட்டு, ஆலிலை மேல் பாலகனாய் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் வயிற்றுள் சென்றடைவதாக வேதங்களில் கூறப்பட்டுள்ளதால் அந்த சூர்யமண்டலமும் நிலையானதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

நான்காவது  அத்யாயத்தில்   எம்பெருமானுடைய  திரிவிக்கிரம  (வாமன)  அவதாரத்தில் முதல் அடி வைப்பால் பூமி முதலான ஏழு லோகங்களும், இரண்டாவது அடி வைப்பால் தேவலோகமாகிய ஏழு லோகங்களும், மூன்றாவது அடி வைப்பால் பாதாள லோகம் வரையிலான ஏழு லோகங்களும் அளக்கப்படுவதாய் விஷ்ணு ஸூக்தம், புருஷ ஸூக்தம் போன்ற உபநிஷத்துகளில் கூறப்படுள்ளன என்றும், ஒவ்வொரு லோகங்களுக்கும் ஒரு சூர்யன் இருப்பதாகவும், அவை யாவும் பிரம்மாவின் பகற்பொழுது முடிந்தவுடன் பகவானிடத்திலேயே லயமடைவதாக வேதங்களிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளதால் இந்த சூர்யமண்டலங்களும் நிலையானதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

ஐந்தாவது அத்யாயத்தில்   சூர்யபுராணத்தில் வரும் சூர்யமண்டலத்தை பற்றியும், அதில் பன்னிரெண்டு ஆரங்களும் ஏழு குதிரைகளும் பூட்டிய ஒற்றை சக்கர தேரில் மூவேழ் உலகங்களுக்கும் சூர்ய ஒளியாகிய தனது கிரணங்களால் ஒளியை கொடுத்து வருவது பற்றியும், பிரம்மனின் பகற்பொழுது முடியுந்தருவாயில் பகவானிடமே லயமடைவதாக கூறப்படுவதால் சூர்ய புராணத்தில் வரும் இந்த சூர்யமண்டலமும் நிலையானதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

ஆறாவது  அத்யாயத்தில்   ரோமஸ  ரிஷி மற்றும் அஷ்டவக்ர ரிஷியைப்பற்றி கூறி, ஒரு காரிய பிரபஞ்சத்தின் ஆயுள் முடிந்தவுடன் அதாவது ஒரு பிரம்மாவின் ஆயுள் காலம் முடிந்தவுடன், ரோமஸ ரிஷியிடமிருந்து ஒரு ரோமம் (ஒரு பிரம்ம வித்து) வெளிப்பட்டு மீண்டும் மூவேழ் உலகங்களை கொண்ட பகவானின் லீலா விபூதியாக பரிணமிப்பதாகவும், இவ்வாறு 3 1/2 கோடி ரோமங்களும் வரிசைக்கிரமமாக விழுந்து எப்பொழுது ரோமங்கள் இல்லாத ஸரீரமாக உண்டாகிறதோ அப்பொழுது ரோமஸ ரிஷியின் ஆயுட்காலம் முடியும் என்றும், ரோமஸ ரிஷியின் ஒருவரது ஆயுட்காலம் முடிந்த பிறகு, அஷ்டவக்ர ரிஷியின் ஒரு கோணல் நிமிர்வதாகவும், இவ்வாறு எட்டு கோணல்களும் நிமிரும் வரை, அவருக்கு ஆயுட்காலம் உண்டு என்று கூறி, ஒளிமண்டலங்களை ரோமங்களாக கொண்டுள்ள ரோமஸ ரிஷியின் வாழ்வும், அஷ்டவக்ர ரிஷியின் வாழ்வும் நிலையானதல்ல என்பதால் இந்த சூர்யமண்டலங்களும் ( பிரம்ம வித்துக்களும் ) நிலையானதல்ல என்று கூறப்பட்டுள்ளது.

ஏழாவது அத்யாயத்தில்     சூர்யமண்டலமாக     கருதப்படும்   திருப்பாற்கடலாகிய ஒளிக்கடலை பற்றிய விபரம் கூறப்பட்டுள்ளது. பகவான், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது ஸயனித்த நிலையில், காரிய பிரபஞ்சமாயிருக்கும் மூவேழ் உலகங்களையும் பிரதிபலிக்கும்படியான தேவதைகளை தமது தேஜஸ்ஸின் மூலம் உருவாக்கி அவர்களுக்கு அதிகாரங்களை அளித்து திட்டமிட்டு இயக்கும்படியான வியூஹ நிலையில் உள்ளார் என்றும், பகவானின் நாபிக்கமலத்திலிருந்து ஸ்ருஷ்டிக்குரிய பிரம்மன் மூலப்ரக்ருதியிலிருந்து வெளிப்பட்டு, முப்பத்து முக்கோடிதேவர்களையும், மூவேழ் உலகங்களையும் தோற்றுவித்து பகவானுடைய அருளால் தனது தொழிலை நடத்துகிறார் என்றும், மூலப்ரக்ருதியில் அடங்கியுள்ள 8 x 3 1/2 = 28 கோடி அண்டங்களை வரிசைக் கிரமமாக பிரம்ம வித்துக்கள் தோன்றி அழியும் போது இந்த வியூஹமாகிய அனந்தபத்மநாபன், மஹாப்ரக்ருத பிரளயத்தில், தனது மூலவியூஹமான அநிருத்தனிடம் சென்றடைகிறது என்றும், ஆகவே திருப்பாற்கடலாகிய சூர்யமண்டலமும் நிலையானதல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

எட்டாவது அத்யாயத்தில்   இதுவரை கூறிவந்த சூர்யமண்டலங்களாகிய லீலாவிபூதியை காட்டிலும் பன்மடங்கு பெரியதான திரிபாத் விபூதியைப்பற்றிய விளக்கத்தையும், இந்த திரிபாத் விபூதியானது ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து மீண்டும் உண்டாகக்கூடியது என்பதால் இது நித்ய விபூதியாகும் என்றும், இந்த நித்ய விபூதிக்கும் மேலாக உள்ளது தான் பரமபதம் எனும் நித்யமான, அழிவற்ற, என்றும் நிலையான சூர்யமண்டலத்தைப் பற்றிய விளக்கமும் கூறப்பட்டுள்ளது.
இந்த பரமபதத்தில் தான் ஒன்றேயாகிய பரம்பொருளாகிய ஸ்ரீமந் நாராயணன் அனைத்து ஆத்மாவிற்கும் மறு பிறப்பற்ற தன்மையாகிய மோக்ஷத்தை அளிப்பவராய் வீற்றிருக்கிறார். அவரே பரந்தாமன்! அவரே பரமாத்மா! அவரே பரப்ரஹ்மம்! அவரே பரஞ்ஜோதி! அவரே காயத்ரி மந்திரத்தில் கூறப்படும் பர்கோ தேவன் (ஒளிமிக்க தேவன்).
அவரே தியானிக்க தக்க மேலான வஸ்து! அவரே உத்தமமான புருஷன்! அவரிடமிருந்து தான் லீலா விபூதியும், நித்ய விபூதியும் தோன்றுகின்றன. அவரிடத்திலே தான் மீண்டும் லயமடைகின்றன. அவர் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த பரமபத சூர்யமண்டலமே நிலையானது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒன்பதாவது   அத்யாயத்தில்    கர்ம மார்கத்தின் மூலமாகவோ, பக்தி மார்கத்தின் மூலமாகவோ, ஞானமார்க்கத்தின் மூலமாகவோ பரம்பொருளை தியானிக்க தக்க வகையிலும், பகவானின் லீலாவிபூதியையும் நித்ய விபூதியையும் ஒரு சேர தியானிக்கதக்க வகையிலும், இறுதியாக பரமபதமாகிய மேலான சூர்யமண்டலத்தை ஒரு சேர தியானிக்கதக்க வகையிலும், தேரின் வடிவமைப்பு உள்ளதாகவும், இப்படி, கர்ம மார்க்கத்தாலோ, பக்தி மார்க்கத்தாலோ, ஞான மார்க்கத்தாலோ ஜீவன் திருமாலைத் தஞ்சமாக பற்றி, பரமபதம் சென்று, ஞான விரிவு பெற்று, பேரின்பமடைந்து, திருமாலுக்கு தொண்டு செய்து கொண்டே, திருமாலுடன் ஒன்றி விடுவதே மோக்ஷம் எனும் தத்துவத்தின் அடிப்படையிலேயே படிப்படியாக எம்பெருமானைப் பற்றிய ஞானத்தை அனைவரும் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பத்தாவது அத்யாயத்தில் முதல் ஒன்பது அத்தியாயங்களில் கூறப்பட்டவை அனைத்தும் தொகுத்து சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.