ஸ்ரீவிஷ்ணு தத்வ மஹிமை - பாகம் II

ஹரி ஓம்
ஓம் நமோ நாராயணாய    ஸ்ரீ ராமஜெயம்
Aalilai Krishnan     ஸ்ரீ மதே ராமானுஜாய நம:

முன்னுரை

நாராயண பரப்ரஹ்ம ! தத்வம் நாராயண பர: !
நாராயண பரஞ்சோதி ! ஆத்ம நாராயண பர: !

நாராயணனே பரப்ரஹ்மம் ! நாராயணனே பரதத்வம் !
நாராயணனே மேலான ஜோதி ! நாராயணனே பரமாத்மா !

ஜகத்காரணனாய், திவ்யதிருமங்களமேனியை உடையவனாய், ஸகல கல்யாண குணபூர்ணனாய், தேவாதி தேவனாய், ப்ரஹ்மானந்தம் உடையவராய், ஆகாசத்தைப் போன்று எங்கும் வியாபித்திருப்பவராய், ஆயிரங்கோடி ஸூர்யர்களை ஒத்த பிரகாசத்தை உடையவராய், உலகிற்கெல்லாம் கண்ணாக இருப்பவராய், ஸகல புவனங்களுக்கும் மேலானதொரு ஸ்தானமாகிய பரமபத ஸ்தானத்தில் ஸகல ஜீவர்களுக்கும் மோக்ஷத்தை அளிக்கக்கூடியவராய் எழுந்தருளி உள்ளார் பகவான் ஸ்ரீ மந் நாராயணன்.

அவர் லீலாவிபூதியையும், நித்ய விபூதியையும் ஸரீரமாகக் கொண்டிருப்பவர். லீலாவிபூதியானது ஸத்வம், ரஜஸ், தமோ குணமுடையதாய் உள்ள மூவேழ் உலகங்களாகும். இந்த மூவேழ் உலகங்களையும் ஒரு விஷேசமான நிலையில் விஸ்வரூபியாய், ஷட்குணபூர்ணனாயிருக்கையால் வியாபிக்கப்படும் பொருட்களின் தோஷங்கள் ஒட்டாமல் பரிசுத்தமாயிருப்பவராய் அனைத்தையும் தாங்கிய நிலையில் உள்ளார். நித்ய விபூதியானது சுத்தஸத்வமான மூலப்ரக்ருதியையும், ஆதிசேஷன் மீது ஸயனித்த நிலையில் ஜகத்ரக்ஷண சிந்தனையுடன் பாற்கடலில் (ஒளிகடல்) பள்ளிகொண்டுள்ள நிலையையும், திரிபாத் விபூதியையும் உள்ளடக்கியதாகும். இவ்விரண்டிற்கும் அப்பாற்பட்டதாய் உயர்ந்த ஸ்தானமாக விளங்குவது பரமபத ஸ்தானமாகும். திரிபாத் விபூதியானது பரநிலையில் உள்ள ஸ்ரீமந் நாராயணனாகிய பரவாஸூதேவன் தனது மனது ஸங்கல்பத்தாலேயே தன்னிடமிருந்து ஸங்கர்ஷனர், ப்ரத்யும்நர், அநிருத்தர் என்ற மூன்று வியூஹ மூர்த்திகளை ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்களுடனும், உலகை படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை செய்கிறபடியாகவும் உருவாக்கினார்.

அவரது அநிருத்த அவதாரமானது இங்கு திருப்பாற்கடலில் ஜகத்ரக்ஷண சிந்தனையுடன் கூடிய மஹாவிஷ்ணுவாக ஸயன நிலையில் எழுந்தருளினார். இவரே பிரஜாபதியாகவும், ஜீவாத்மா ஸமூகத்தை தன்னுள் கொண்டிருக்கையாலே ஹிரண்யகர்ப்பன் எனவும் போற்றப்படுகிறார். இவருக்கு சுத்த ஸத்வமயமான மூலப்ரக்ருதியானது ஸரீரமாயுள்ளது. இந்த மூலப்ரக்ருதியானது அநேக கோடி பிரஹ்ம அண்டங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது. இதனின்றும் ஒரு பிரஹ்ம அண்டத்தின் மூலவிதையானது வெளிப்பட்டு அதில் மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய ஸ்ருஷ்டிக்குரிய பிரம்மனும், பிரம்மனது கோபத்தால் உண்டான நெற்றி வியர்வையிலிருந்து ஸம்ஹாரத்திற்குரிய ருத்ரனும் படைக்கப்பட்டு பின்பு மஹாவிஷ்ணுவே தன்னுடைய மனது ஸங்கல்பத்தாலேயே நேரிடையான அவதாரமாக காத்தல் தொழிலை பிரதானமாகக்கொண்ட விஸ்வரூபியாய் விளங்கும் விஷ்ணுவாகவும் அவதரித்தார். ஒரு விசேஷமான நிலையில் ப்ரஹ்ம அண்டத்தின் மூலவிதையிலிருந்து தோன்றிய மூவேழ் உலகங்களையும் ஸரீரமாகக்கொண்டு ரக்ஷிக்கவும் செய்கிறார்.

அவரிடமிருந்தே ஆகாஸம், காற்று, அக்நி, நீர், பூமி எனப்படும் ஐந்து பூதங்களும் இவற்றால் உணரப்படும் ஸப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்த தன்மாத்திரைகளாகிய ஐந்து தன்மாத்திரைகளும் ஒலி, தொடுஉணர்வு, வடிவம், சுவை, வாசனை என்ற ஐந்து உணர்வுகளும், இவற்றை செயல் படுத்தக்கூடிய வாய், கை, கால், வயிறு, விஸர்ஜன இந்திரியங்களாகிய ஐந்து கர்ம இந்திரியங்களும், இவற்றை அறியக்கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐந்து ஞானஇந்திரியங்களும், அந்தகரணங்கள் ஐந்தாகிய ஆத்மா, மனம், புத்தி, சித்தம், அஹங்காரமும் ஆக மொத்தம் 25 வகை தத்துவங்களால் ஆன லீலாவிபூதியாகிய காரிய பிரபஞ்சம் உண்டாயிற்று.

இவற்றிக்கும் அப்பாற்பட்டு 26 வது தத்வமாய் ஆத்மாவிற்கும் அந்தர்யாமியாய் (ஆத்மாவையே ஸரீரமாகக் கொண்டு) பரமாத்மா விளங்குகிறார். தேவலோகம், மனுஷ்யலோகம், அஸுரலோகம் என்ற வகையில் மூவேழ் உலகங்களை கொண்ட இந்த காரிய பிரபஞ்சமானது மேல், நடு, கீழ் என்ற மூன்று பிரிவுகளாக கொண்டுள்ளன. இவை ஸத்வம், ரஜஸ், தமோகுணம் ஆகிய மூன்றையும் முறையே பிரதானமாக கொண்டுள்ளன.

மேல் ஏழு உலகங்களாகிய தேவலோகத்தில் ஸத்வகுணம் மிகுந்திருக்கும். நடுவில் நாம் வாழும் பூலோகம் உள்ளடக்கிய ஏழு உலகங்களாகிய மனுஷ்ய லோகத்தில் ரஜோ குணம் மிகுந்திருக்கும். கீழான ஏழு உலகங்களாகிய அஸுர லோகத்தில் தமோகுணம் மிகுந்திருக்கும். இந்த மூவேழ் உலகங்களின் சஞ்சாரமானது பிரம்மனின் பகற்பொழுதாகிய 1000 சதுர் யுகங்களை கொண்டது. பிரம்மனின் பகற்பொழுது முடியும் வரை கால, தேச, வர்த்தமானத்திற்கு கட்டுப்பட்ட இந்த காரிய பிரபஞ்சமானது கர்மவினை சூழ்ந்த பூமியாக இருப்பதால் அவரவர்களின் புண்ய-பாபங்களுக்கேற்ப பல ஜன்மங்களை எடுத்து ஸம்ஸாரம் எனும் கடலில் இகபர சுகங்களை ஆத்மாவானது அனுபவிக்க தக்கதாய் அமைந்துள்ளது. புண்ய-பாப பலன்களை ஸப்த ஜீவராசிகளுக்கு அளிப்பதில் நவக்ரஹங்களும், நக்ஷத்திரங்களும் நீதிபதிகளாகவும், மீண்டும் ஜீவராசிகளுக்கு மறு சரீரத்தை அளிப்பதில் நவக்ரஹங்களும், நக்ஷத்திரங்களும் பகவானுக்கு உபகரணங்களாக பயன்படுகின்றன. எந்த ஒரு ஜன்மாவில் ஆத்மாவானது பகவத் சிந்தனையுடன் மறு பிறப்பற்ற தன்மையாகிய மோக்ஷத்தை விரும்புகிறதோ அப்போது ஆத்மா பிறப்பற்ற தன்மையாகிய மோக்ஷத்தை வேண்டி பகவானை அடைகிறது.

பகவான் ஸ்ரீமந் நாராயணனது பரமபத ஸ்தானமானது ஆயிரங்கோடி சூர்யர்கள் ஒரு சேர உதித்தாற்போன்ற பிரகாசமுடையது. பூர்ணமாகவும், அழிவற்றதாகவும், பொன்மயமானதாகவும் உள்ளது. இத்தகைய பிரகாசமான சூர்ய மண்டலத்தை ஞானத்தின் மூலமாக நுட்பமாக அறிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே வேதங்கள் கூறுகின்றன. அதற்கு சில மார்க்கங்களையும் பகவானின் அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் வழிகாட்டுகிறார். அவை கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என மூன்று மார்க்கங்களை வகுத்துள்ளார். கர்ம மார்க்கமானது தியானம், பூஜை, அர்ச்சனை, யாகம், நமஸ்கரித்தல், வைதீக கர்மாக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ச்ரவணம், கீர்த்தனை, பஜனை, பாதசேவை, பணிவிடை, வந்தனம் போன்றவற்றை உள்ளடக்கியது பக்தி மார்க்கமாகும். ஸந்த்யா வந்தனம், காயத்ரி ஜபம், அஷ்டாக்ஷர மந்திர ஜபம், அஷ்டமாசித்திகள் போன்றவற்றை உள்ளடக்கியது ஞான மார்க்கமாகும். இம்மூன்று யோகங்களும் ஒருங்கே ஒருவருக்கு அமையப்பெற்றால் அதுவே ராஜயோகமாகும்.

இம்மூன்று மார்க்கங்களில் ஏதேனும் ஒன்றை அனுஷ்டித்து தன்னை வந்தடையலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் அருளியுள்ளார். இவற்றில் கர்ம மார்க்கமாகிய வைதீக கர்மாக்களை அனுஷ்டிக்கும் போதும், தினந்தோறும் திரிகால ஸந்த்யா வந்தனம், காயத்ரி ஜபம் முதலியவற்றை அனுஷ்டிக்கும் போதும் ஸங்கல்பத்தை கூறி ஆரம்பிக்கிறோம். இந்த ஸங்கல்பமானது கால, தேச, வர்த்தமானத்திற்குட்பட்டது. ஆனால் பகவானின் ஸாம்ராஜ்யத்தில் (பரமபத ஸ்தானத்தில்) காலம் ஆட்சி செலுத்துவதில்லை. அதாவது கால, தேச, வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்டது, என்றும் நிலையானது, அசைவற்றது, பேரானந்தமாகிய மோக்ஷத்தை அளிப்பது, ஆத்மாவிற்கு பிறப்பற்ற தன்மையை அளிப்பது, இறுதியாக ஆத்மா லயமடையும் ஸ்தானமாக உள்ளது, என்று வேதங்களின் சாராம்சமாக விளங்கும் உபநிஷத்துகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆதலால் நாம் வாழும் சூர்யமண்டலமானது சலனத்துடன் கால அளவை உண்டாக்குகிறது. ஆகவே காலத்தை கடந்து நிற்கும் நிலையான பரமபதமாகிய சூர்யமண்டலத்தை பற்றிய ஞானத்தை நுட்பமாக அறிவதற்கு முன் வேதங்களில் கூறப்பட்டுள்ள மற்ற சூர்ய மண்டலங்களின் விவரத்தை கூறிக்கொண்டே, இறுதியாக கூறப்பட்டுள்ள பரமபதமான சூர்யமண்டலத்தை பற்றி அறிவதே இந்நூலின் நோக்கமாகும்.

அவற்றை ஒவ்வொரு அத்யாயங்களாக வரிசைப்படுத்தி கூறியுள்ளேன். பகவானின் அருளாலும், குலவழக்கப்படி ஸந்த்யா வந்தனம், காயத்ரி ஜபம், அஷ்டாக்ஷர மந்திர ஜபம், போன்றவற்றை அனுஷ்டிப்பதாலும் அடியேனுக்கு உண்டான சிறிய ஞானத்தைக்கொண்டு இந்நூலை இயற்றியுள்ளேன். மஹான்களும், வைஷ்ணவர்களும், பெரியோர்களும் இந்நூலின் பிழை இருப்பின் பொறுத்தருளுமாறும், விஷ்ணுவின் மஹிமைகளை விவரித்து கூறும் நூல் என்ற அளவில் மட்டும் கருத்திற்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Vanakkam

கட்டுரை ஆசிரியர்
அ. நாகநாத ஐயங்கார். B.Sc.,
2/21, பெருமாள் கோவில் தெரு,
எமனேஸ்வரம். 623 701.
பரமக்குடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம்
Cell : 98659 87270
Email : vishnuthathuvamahimai@gmail.com


 
Copyright © 2020 - 2025. Powered by LAKE consulting Services.